அதிக பூட்-ஸ்பேஸ் கொண்ட ஸ்கூட்டர் வேணுமா? இதுல ஒன்ன தேர்வு செஞ்சுக்கோங்க! ஹெல்மெட்,பழம்னு எதனாலும் வச்சிக்கலாம்
நம்மில் நிறைய பேர் ஸ்கூட்டரை வாங்குவதற்கு, அவற்றில் அதிக பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பதையே காரணமாக கூறுகின்றனர். மேலும், பெண்களும் மிக சுலபமாக ஏறி-இறங்க ஏற்ற வாகனமாகவும் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. ஆனால், பைக்குகளில் இதை எதிர்பார்ப்பது சற்று கடினமே. குறிப்பாக, ஒரு வாரத்திற்கு தேவையான உடைமைகளைகூட பைக்கில் ஏற்றி செல்ல முடியாது.
இதற்கென தனியாக ஆஃப்டர் மார்கெட்டில் கேரியர்களை (பொருட்களை வைக்கும் ஸ்டாண்ட்) வாங்கி பொருத்தினால் மட்டுமே பைக்குகளில் கணிசமான அளவு லக்கேஜ்களை ஏற்றி செல்ல முடியும். ஆனால், ஸ்கூட்டர்கள் அப்படி இல்லை. கால்கள் வைக்கும் இடத்திலும், இருக்கைக்கு கீழும் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும்.

அதிலும், ஒரு சில ஸ்கூட்டர்களில் இருக்கைகளுக்கு அடியில் மிக தாராளமாக ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கும். அந்தவகையில், மிக மிக அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து ஸ்கூட்டர் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.
ஹீரோ விடா வி1 (Hero Vida V1)
ஸ்டோரேஜ்: 26 லிட்டர்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பிராண்ட் விடா ஆகும். இந்த பிராண்டின்கீழ் இப்போதைய நிலவரப்படி வி1 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவின் அதிகம் ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்றாகும். 26 லிட்டரை மட்டுமே பூட் ஸ்பேஸாக கொண்டிருப்பதால் இதுவே இந்த லிஸ்டின் குறைவான பூட் ஸ்பேஸ் கொண்ட ஸ்கூட்டராகக் காட்சியளிக்கின்றது.

இரு விதமான தேர்வுகளில் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. வி1 பிளஸ் மற்றும் வி1 ப்ரோ எனும் தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. வி1 பிளஸ் தேர்விற்கு ரூ. 1.45 லட்சமும், வி1 ப்ரோ தேர்விற்கு ரூ. 1.59 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் ஜுபிடர் 125 (TVS Jupiter 125)
ஸ்டோரேஜ்: 33 லிட்டர்
டிவிஎஸ் ஜுபிடர் இந்தியாவின் பிரீமியம் வசதிகள் நிறைந்த பெட்ரோல் பவர்டு ஸ்கூட்டர் மாடல் ஆகும். மற்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களைப் போன்று இல்லாமல் இதில் மிக பெரிய அளவில் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. 33 லிட்டர் வரையிலான பொருட்களை இதில் வைத்து கொள்ள முடியும்.

இருக்கைக்கு அடியில் மட்டுமே இந்த அளவு அதிக இட வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் இரு முழு முக சிறிய அளவு கொண்ட ஹெல்மெட்டுகளை ஒரே நேரத்தில் வைத்து கொள்ள முடியும். அந்த அளவு அதிக இட வசதியைக் கொண்டதாக டிவிஎஸ் ஜுபிடர் 125 இருக்கின்றது.
ஒரு வேளை மார்க்கெட்டிற்கு 'பை' எடுக்காமல் சென்று விட்டால், ஸ்கூட்டரின் பூட்-இல் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்துவிட முடியும். அந்த அளவிற்கு அதிக இட வசதியைக் கொண்டதாகவே இது இருக்கின்றது. ரூ. 85,525 தொடங்கி ரூ. 92,375 வரையிலான விலையில் ஜுபிடர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air)
ஸ்டோரேஜ்: 34 லிட்டர்
இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக நிறுவனம் இந்திய சந்தையில் அண்மையில் மலிவு விலைக் கொண்ட மாடலாக எஸ்1 ஏர்-ஐ அறிமுகப்படுத்தியது. இதனை 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதியுடன் ஓலா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரூ. 84,999 இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ (Ola S1, S1 Pro)
ஸ்டோரேஜ்: 36 லிட்டர்
ஓலா எஸ்1 ஏர் மாடலைக் காட்டிலும் காட்டிலும் அதிக ஸ்டோரேஜ் வசதிக் கொண்டதாக எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய மாடல்கள் இருக்கின்றன. இவற்றில் எஸ்1 ஏரைக் காட்டிலும் கூடுதலாக 3 லிட்டர் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கின்றது. 36 லிட்டரே இவற்றின் ஸ்டோரேஜ் வசதியாக இருக்கின்றது.

இவை ஸ்டோரேஜில் மட்டும் இல்லைங்க ரேஞ்ஜ், சிறப்பம்சம் ஆகியவற்றிலும் எஸ்1 ஏரைக் காட்டிலும் மிக மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றன. மேலும், விலையிலும் அதனை மிஞ்சியதாக எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ இருக்கின்றன. ரூ. 1.10 லட்சம் மற்றும் ரூ. 1.30 லட்சம் விலையிலே அவை விற்கப்படுகின்றன. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
ரிவர் இன்டீ (River Indie)
ஸ்டோரேஜ்: 43 லிட்டர்
இந்தியாவில் மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும். ஸ்கூட்டர்களின் எஸ்யூவி என குறிப்பிட்டு இந்த வாகனத்தை தயாரிப்பு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எஸ்யூவி கார்களைபோல் அதிக இட வசதியை இது கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த பெயர் அதற்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாகவே 43 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கின்றது. அறிமுகமாக இந்த வாகனத்திற்கு ரூ. 1.25 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதுவே நம்முடைய லிஸ்டின் மிக மிக அதிக ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதைவிட அதிக ஸ்டோரேஜ் வசதி உடன் இந்தியாவில் வேறு எந்த ஸ்கூட்டர் மாடலையும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவையும் அதிக ஸ்டோரேஜ் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இவற்றின் பூட் ஸ்பேஸ் 33 லிட்டர் ஆகும்.


Click it and Unblock the Notifications









