புதுசா பைக் வாங்க போறவங்க, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! மார்க்கெட்டுக்கு 4 புதிய பைக்குகள் இந்த செப்டம்பரில் வருது
இந்தியாவில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், புதியதாக ஆரம்பமாகியுள்ள இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள், எந்தெந்த புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்த செப்டம்பரில் அறிமுகமாக உள்ளன என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350: ராயல் என்பீல்டின் அடையாளங்களாக புல்லட் மற்றும் கிளாசிக் பைக்குகளை சொல்லலாம். இதில், கிளாசிக் 350 பைக் கடந்த 2021ஆம் ஆண்டில் அப்டேட் செய்யப்பட்டு விட்டது. ஆனால் புல்லட் 350 பைக் கடந்த பல வருடங்களாக அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. ஆனால் இந்த நிலை இனி இருக்காது. ஏனெனில் மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய புல்லட் 350 பைக்கை செப்டம்பரின் முதல் நாளான இன்று ராயல் என்பீல்டு அறிமுகம் செய்கிறது.

ராயல் என்பீல்டு அதன் 350சிசி பைக்குகளுக்கு சமீப காலமாக புதிய ஜே-பிளாட்ஃபாரத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால்தான் பழைய ராயல் என்பீல்டு பைக்குகளில் இருந்து தற்கால ராயல் என்பீல்டு பைக்குகள் வித்தியாசப்பட்டு தெரிகின்றன. ஆனால், புல்லட் 350 மட்டும் அதே கிளாசிக்கான தோற்றத்தில் இருந்து வருகிறது. இதனால், புல்லட் 350 பைக்கை வடிவமைப்பதற்கும் புதிய ஜே-பிளாட்ஃபாரத்தை ராயல் என்பீல்டு பயன்படுத்தும் என்பது உறுதி.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310: டிவிஎஸ் பிராண்டின் அப்பாச்சி பைக்குகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளிலேயே விலையுயர்ந்தவையாக 310சிசி அப்பாச்சி பைக்குகள் பார்க்கப்படுகின்றன. தற்போதைக்கு டிவிஎஸ் அப்பாச்சி 310சிசி பைக்காக அப்பாச்சி 310ஆர்ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் ரக பைக் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி இதனுடன் அப்பாச்சி ஆர்டிஆர்310 என்ற நாக்டு ரக பைக் இணையவுள்ளது.

டிவிஎஸ் மோட்டாரும், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனமும் கூட்டணியில் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த கூட்டணியில் உருவானதே பிஎம்டபிள்யூ ஜி310ஆர் என்ற நாக்டு பைக் ஆகும். இதனால் இந்த பிஎம்டபிள்யூ பைக்கின் அடிப்படையில் ஒரு பைக்கை தனது பிராண்டிற்கு டிவிஎஸ் உருவாக்கி கொள்வதற்கு எந்தவொரு தடையுமில்லை. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 இரண்டும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாக இருக்கும் என்பது மட்டுமின்றி, என்ஜினையும் பகிர்ந்துக் கொள்ளும்.
2024 கேடிஎம் 390 ட்யூக்: ஒவ்வொரு வருடமும் தவறாமல் தனது மோட்டார்சைக்கிள்களை அப்டேட் செய்துவிடக்கூடிய நிறுவனம் கேடிஎம் ஆகும். அடுத்த 2024ஆம் ஆண்டிற்காகவும் தனது பைக்குகளை அப்டேட் செய்ய இந்த ஆஸ்திரியன் நிறுவனம் தயாராகி வருகிறது. இதில் முதலாவதாக 125 ட்யூக், 250 ட்யூக் மற்றும் 390 ட்யூக் என கேடிஎம் ட்யூக் பைக்குகள் அப்டேட் செய்யப்படுகின்றன.

2024 கேடிஎம் 390 ட்யூக் பைக் சமீபத்தில் தான் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. புதிய 390 ட்யூக்கின் மேம்படுத்தப்பட்ட தோற்றம் அனைவரையும் வசீகரித்ததால், 2024 ட்யூக் 390 பைக்கின் தோற்றம் இணையத்தில் வைரலாகின. கவர்ச்சியான தோற்றத்தை பெற்றுவருவது மட்டுமின்றி, முற்றிலும் புத்தம் புதிய 399சிசி என்ஜினை 390 ட்யூக் பைக்கிற்கு கேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. இதனால் 390 ட்யூக் முன்பை விட செயல்திறன்மிக்கதாக விளங்கும்.
சுஸுகி வி-ஸ்ட்ரோம் 800 டிஇ: சுஸுகி ஜி.எஸ்.எக்ஸ்-8எஸ் நாக்டு பைக் உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமானது. அந்த பைக்கில் பொருத்தப்படும் என்ஜின் உடன் ஒரு அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்துகிறது. அதுதான், வி-ஸ்ட்ரோம் 800 டிஇ ஆகும். 2022 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய வி-ஸ்ட்ரோம் 800 டிஇ பைக்கின் முன் சக்கரம் பின் சக்கரத்தை விட பெரியதாக 21 இன்ச்சில் வழங்கப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 4 மோட்டார்சைக்கிள்கள் தான் இந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றில், ராயல் என்பீல்டு புல்லட் 350 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்குகளின் அறிமுகம் கவனிக்கத்தக்கக் கூடியதாக உள்ளது. அதேநேரம், இவை இல்லாமல் ஏதேனும் பைக் சர்பிரைஸாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









