இந்தியாவின் விலை குறைவான பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு புது கலர் ஆப்ஷன்ஸ்!! விலையில் எந்த மாற்றமும் இல்லை!
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் அதன் பிரபலமான ஜி310 (G 310) மோட்டார்சைக்கிள்களுக்கு புதிய பெயிண்ட் தேர்வுகளை வழங்கியுள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், பிஎம்டபிள்யூ ஜி310 மோட்டார்சைக்கிளை பற்றியும் இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம், தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் உடன் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இதன் காரணமாகவே, பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் ஜி310 ஆர், ஜி310 ஆர்.ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் போன்ற பைக்குகளை இந்தியாவிலேயே தயாரித்து, எந்த பிரச்சனையுமின்றி குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது.

இந்த நிலையில் தற்போது, இந்த 3 விலை குறைவான பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு இந்தியாவில் புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், இந்தியாவின் விலை குறைவான பிஎம்டபிள்யூ பைக்காக விளங்கும் ஜி310 ஆர் -க்கு ஸ்டைல் ஸ்போர்ட் மற்றும் ஸ்டைல் பேஷன் என 2 நிறத்தேர்வுகள் புதியதாக வழங்கப்பட்டு உள்ளன. இதில் ஸ்டைல் ஸ்போர்ட் நிறத்தேர்வில், ரேசிங் நீலம் மெட்டாலிக்/ போலார் வெள்ளை நிறங்களில் ஜி310 ஆர் பைக் கிடைக்கும்.
அதுவே ஸ்டைல் பேஷன் நிறத்தேர்வில், கிரானைட் கிரே மெட்டாலிக் நிறத்தில் இந்த பைக் கிடைக்கும். சிட்டி ரைடுக்கு ஏற்ற நாக்டு ரக பைக்காக விளங்கும் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் -இல் அதிக ஆற்றலையும் தேவைப்படும்போது எந்த குறையுமின்றி பெற முடிகிறது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்.ஆர் பைக்கை பொறுத்தவரையில், இது ஆற்றல்மிக்க பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்.ஆர் பைக்கின் பேபி வெர்சனாக பார்க்கப்படுகிறது.

அதாவது, செயல்படுதிறனையும் கோணத்தையும் அதிக வழங்கக்கூடிய ரோடு ரேசிங் ஸ்போர்ட்ஸ் பைக்காக ஜி310 ஆர்.ஆர் விளங்குகிறது. இந்த பைக்கிற்கு அதன் தோற்றத்திற்கு ஏற்ப காஸ்மிக் பிளாக் 2 என்ற பெயிண்ட் தேர்வு புதியதாக வழங்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டார்ராடின் 3வது ஜி310 பைக்கான ஜி310 ஜிஎஸ் எந்தவொரு பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய அட்வென்ச்சர் ரக பைக் ஆகும். அதேநேரம், தினசரி நகர்புற பயன்பாட்டிற்கும் இந்த பைக் ஏற்றதாக விளங்குகிறது.
மற்ற இரு ஜி310 பைக்குகளை போல் இல்லாமல், அளவில் சற்று சிறியதாக விளங்குவதால், ஜி310 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்கை கண்ட்ரோல் செய்வதும் எளிமையானதாகவும், சவுகரியமானதாகவும் உள்ளது. இத்தகைய அட்வென்ச்சர் பைக்கை இனி ஸ்டைல் ராலி பெயிண்ட் தேர்விலும் பெறலாம். இந்த பெயிண்ட் தேர்வில் ரேசிங் சிவப்பு நிறத்தில் ஜி310 ஜிஎஸ் பைக் கிடைக்கும். ஜி310 ஜிஎஸ் பைக்கின் அட்வென்ச்சர் பண்புக்கு ரேசிங் சிவப்பு நிறம் மிகவும் எடுப்பாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

இந்த 3 பிஎம்டபிள்யூ பைக்குகளையும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிறங்களில் இந்தியாவில் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் பெறலாம். பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் மூன்றிலும் 313சிசி, வாட்டர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்படுகிறது. எலக்ட்ரானிக் ஃப்யுல் இன்ஜெக்ஷன் உடன் பொருத்தப்படும் இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-இல் 25 கிலோவாட்ஸ் வரையிலான ஆற்றலையும், 7,700 ஆர்பிஎம்-இல் 27.3 என்எம் வரையிலான டார்க் திறனையும் பெறலாம். 0-இல் இருந்து 60kmph வேகத்தை இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளில் வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிட முடியும். பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகளின் ஆரம்ப விலைகள் முறையே ரூ.2.85 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.3.25 லட்சமாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: விலைமிக்கவையாக இருப்பினும், பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு என்றே நம் இந்தியாவில் ஓர் தனி கிரேஸ் உள்ளது. அதனை பயன்படுத்தி கொள்ளும் விதமாகவே, நம் இந்தியர்களுக்கு ஏற்ப ஜி310 பைக்குகளை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பைக்குகளை எப்போதும் புத்துணர்ச்சியானதாக வைத்திருக்க, இவ்வாறான புதிய புதிய பெயிண்ட் தேர்வுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









