Bantam, Lightning & Thunderbolt பெயர்களை மீண்டும் அறிமுகம் செய்யும் பிஎஸ்ஏ! எல்லாத்துக்கும் ரசிககூட்டம் அதிகம்
உலக நாடுகளில் பழங்கால வாகனங்களை பிரதிபலிக்கும் ரெட்ரோ ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில், இந்தியாவில் நீண்ட காலமாக ராயல் என்பீல்டு நிறுவனம் முடிசூடா மன்னனாக ஆட்சியைப் புரிந்துக் கொண்டிருக்கின்றது. இதன் இடத்தை தட்டி பறிக்கும் எண்ணம் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் உண்டு.
பிரபல ஜப்பானிய இருசக்கரவாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா தொடங்கி யமஹா வரையில் பல நிறுவனங்கள் ராயல் என்பீல்டுக்கு போட்டியாக ரெட்ரோ-கிளாசிக் ரக வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் இருக்கின்றன. இந்த வரிசையில் புதிய நிறுவனமாக பிஎஸ்ஏ விரைவில் இணைய இருக்கின்றது. ஏற்கனவே இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தயாராகிவிட்டது.

இந்த ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும் பணியிலேயே அந்நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது. கடந்த காலங்களில் இருசக்கர வாகன தயாரிப்பில் கொடி கட்டி பறந்த நிறுவனங்களில் பிஎஸ்ஏ-வும் ஒன்று. நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் சென்ற 2021 ஆம் ஆண்டிலேயே மீண்டும் இருசக்கர வாகன உற்பத்தியில் அது களமிறங்கியது.
அதன் அடிப்படையில் அது கோல்டுஸ்டார் 650 எனும் கிளாசிக் ரக பைக்கை உலக அளவில் வெளியீடு செய்தது. இந்த பிராண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான கிளாசிக் லெஜண்ட்ஸ்-இன் ஓர் அங்கமாகும். அதாவது, பிஎஸ்ஏ மஹிந்திரா நிறுவனத்தின் கீழே இப்போது இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியின் வாயிலாக கோல்டுஸ்டார் 650 பைக் முதல் முறையாக வெளியீடும் செய்யப்பட்டது. தற்போது உலகளவில் இந்த பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பிஎஸ்ஏ களமிறங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனம், தன்னுடைய பிரபலமான பழைய மோட்டார்சைக்கிள்கள் சிலவற்றின் பெயரில் புதுமுக இருசக்கர வாகனங்களை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.
பேந்தம் (Bantam), லைட்னிங் (Lightning) மற்றும் தண்டர்போல்ட் (Thunderbolt) ஆகிய பெயர்களையே அது மீண்டும் உலக இருசக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பெயர் கொண்ட வாகனங்களுக்கு கடந்த காலங்களில் மிக சிறப்பான வரவேற்பு உலக நாடுகள் பலவற்றில் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்த பெயர்கள் என்ன மாதிரியான மோட்டார்சைக்கிள்களுக்கு பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இவையும், கோல்டுஸ்டார் 650 பைக்கைபோல் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், பேந்தம், லைட்னிங் மற்றும் தண்டர்போல்ட் பெயர் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரங்களும் வெளியிடப்படவில்லை.
இப்போது அவற்றிற்கான டிரேட்மார்க் பதிவு மட்டுமே செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அவை நிஜ உலகில் பயன்பாட்டிற்கு வர இன்னும் பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றின் இந்திய வருகைக்குக்கு கூடுதல் காலங்கள் ஆகலாம். பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 பைக்கில் 652 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது ஓர் 4 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி ரக மோட்டாராகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 45 பிஎஸ் மற்றும் 55 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மோட்டாரில் இணைக்கப்பட்ட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் பிஎஸ்ஏ போன்ற பழம்பெரும் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இப்போதும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுமாதிரியான நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் தடம் பதிக்கும் எனில் ராயல் என்பீல்டின் மார்க்கெட் லேசாக பாதிப்பை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே யெஸ்டி, ஜாவா உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையால் ராயல் என்பீல்டுக்கு போட்டி அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









