மொபைல் போன் வாங்குற காசுல இந்த இ-ஸ்கூட்டர்களுள் ஒன்றை வாங்கிடலாம்... இந்தியாவின் விலை குறைவான இ-ஸ்கூட்டர்ஸ்!!
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் வசிப்போர் குறைவான வேகத்தில், அதாவது அதிகப்பட்சமாகவே 25kmph வேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே போதும் என்ற மன நிலையில் உள்ளனர். சந்தையில் தற்சமயம் கிடைக்கும் குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் பிரபலமான & குறைந்த விலையில் கிடைக்கக்கூடியவற்றை இனி பார்க்கலாம்.
1. டெடெல் ஈஸி ப்ளஸ் (Detel Easy Plus)
டெடல் ஈஸி ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.40,000 என்ற விலையிலேயே வாங்கிவிடலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், இது ஸ்கூட்டர் என்றே பலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவிற்கு பேனல்கள் அவ்வளவாக இல்லாமல், மிகவும் குறைவான எடையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்படுகிறது. ஆனால் எங்களை கேட்டால் கொடுக்கும் குறைவான பணத்திற்கு ஏற்ற வாகனம் இதுவாகும்.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.25kWh லித்தியம்-இரும்பு பேட்டரி வழங்கப்படுகிறது. 250 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்கும் இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 4இல் இருந்து 5 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும். ஆனால் முழுவதுமாக பேட்டரியை சார்ஜ் நிரப்பிவிட்டோம் என்றால், அதிகப்பட்சமாக 60கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். டெடல் ஈஸி ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
2. லோஹியா ஒமா ஸ்டார் லித்தியம் (Lohia Oma Star Li)
ரூ.41,444 என்பது லோஹியா ஒமா ஸ்டார்ட் லித்தியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தற்போதைய விலையாகும். லோஹியா சந்தையில் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் இல்லையென்றாலும், ஒமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் போதுமான அளவிலான வசதிகளை வழங்குகிறது.

ஸ்கூட்டரின் பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம் பேட்டரி பொருத்தப்படுகிறது என்பது. இதன் பேட்டரியின் திறன் ஆனது 48 வோல்ட்/ 20 ஆம்பியர் ஆகும். இந்த பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்ப 6-8 மணிநேரங்களாகும். முழு பேட்டரி சார்ஜில் அதிகப்பட்சமாக 60கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடும் மணிக்கு 25 கிமீ தான்.
3. ஒகினவா ஆர்30 (Okinawa R30)
இந்தியாவில் முதன்முதலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் இறங்கிய பிராண்ட்களுள் ஒன்றான ஒகினவாவின் விலை குறைவான மாடல் ஆர்30 ஆகும். ரூபாய் 60 ஆயிரத்திற்கு மேல் விலை கொண்டுள்ளதால், ஆர்30-இல் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், இந்த இ-ஸ்கூட்டரில் 1.25kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது.

இதனை ஸ்கூட்டரில் இருந்து பிரிக்கவும் முடியும். இதனால் சார்ஜ் செய்வதற்கு ஸ்கூட்டரை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல தேவை இருக்காது. ஆர்30 பேட்டரியை 4- 5 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம். 100% - 0 சார்ஜில் 65கிமீ தொலைவிற்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் விலையே சொல்லவே இல்லை பாருங்கள், ஒகினவா ஆர்30-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.62,500 ஆக தற்சமயம் உள்ளது.
4. ஒகினவா லைட் (Okinawa Lite)
இந்த வரிசையில் கடைசி இரு இடங்களை ஒகினவா தயாரிப்புகள் பெற்றுள்ளன. ஒகினவா பிராண்டிற்கு அறிமுகம் தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு பிரபலமான இவி பிராண்ட் இது. ஒகினவா லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67,000ஆக உள்ளது. இந்த விலைக்கு ஏற்ப பல்வேறு தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன.

ஒகினவா லைட்டில் 1.25kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியின் சார்ஜிங் நேரம் 6- 7 மணிநேரங்கள் ஆகும். மேலே கண்ட லோஹியா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போன்று இந்த ஒகினவா ஸ்கூட்டரின் ரேஞ்ச்சும் 60கிமீ ஆகும். அதிகப்பட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும் என்பதால், ஒகினவா லைட் உள்பட மேற்கண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்ட லைசன்ஸ் தேவை இல்லை.


Click it and Unblock the Notifications









