நடைமுறைக்கு சாத்தியமே இல்ல.. ஆனாலும் பலரின் ஏக்கத்திற்கு காரணமாகிருச்சு.. வெளிப்படையான பேனல் கொண்ட இ-பைக்!
சிஆர் தாஸ் கோஸ்ட் (CR Dos Ghost), இது ஏதோ சாப்பாட்டு ஐட்டம்னு நினைச்சுக்காதீங்க. இது ஓர் கான்செப்ட் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர் ஆகும். இந்த பைக்கை இதுவரை எந்தவொரு நிறுவனமும் வடிவமைத்திராத விசித்திரமான ஸ்டைல் மற்றும் வசதிகளுடன் தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.
அப்படி என்ன வடிவமைப்பு என உங்களால் கேட்கவே முடியாது. ஏனெனில், இந்த கேள்விக்கான இடத்தை கொடுக்காத வகையிலேயே பைக்கின் படம் அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக பைக்கின் உள்பக்கத்தை தெளிவாகக் காணும் வகையில் அதன் மேற்புற பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது, எலெக்ட்ரிக் பைக்கிற்கு வழங்கப்பட்டு இருக்கும் கூடுதல் சிறப்பாகக் காட்சியளிக்கின்றது.

மோட்டார் தொடங்கி பைக்கின் முக்கிய கூறுகள் அனைத்திலும் கண்ணாடி பேனல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், ஹீட் மிக சுலபமாக தாங்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பொதுவாக, சில பிளாஸ்டிக்குகள், ஹீட்டை தாங்காது. உறுக நேரிடலாம். குர்முக் சிஆர் தாஸ் கோஸ்ட் எலெக்ட்ரிக் கான்செப்ட் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பேனல் மட்டும் அல்ல மற்ற உபகரணங்களும் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கின்றது.
அந்தவகையில், ஹெட்லைட், ஹேண்டில் பார், இருக்கை, சேஸிஸ் என அனைத்தையும் மாறுபட்ட தோற்றம் மற்றும் திறன் கொண்டதாக தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. ஒருவேளை இந்த கான்செப்ட் மாடலில் அப்படியே உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனில் அந்த பைக் உண்மையில் ஒரு ஏலியன் பைக்கைப் போல் காட்சியளிக்கும்.

இவ்வாறே அதன் ஸ்டைல் மற்றும் தோற்றம் உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும், இதன் மெல்லிய உடற்பாகங்களே இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு கஸ்டம் கஃபே ரேஸர் பைக் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. பைக்கின் பின் பக்கத்தில்கூட மெல்லிய ஸ்டார் வகை ஸ்டாப் லைட்டே வழங்கப்பட்டு இருக்கின்றது.
எலெக்ட்ரிக் பைக்கில் மேலும் என்ன மாதிரியான தனி சிறப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த வாகனம் விற்பனைக்கு வரும் எனில் அது தனித்துவமான வாகனமாக மட்டுமல்ல மற்ற முன்னணி மின்சார பைக் உற்பத்தியாளர்களுக்கு மிகப் பெரிய போட்டியை வழங்கும் எலெக்ட்ரிக் டூ-வீலராகவும் அது இருக்கும்.

ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது இப்போது வரை கேள்விக் குறியாகவே இருக்கின்றது. இப்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அது விற்பனைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளாலம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே சிஆர் தாஸ் கோஸ்ட் எலெக்ட்ரிக் பைக்கின் இந்திய வருகை பற்றிய விபரங்களும் வெளியாகக் கூடும். அதேவேளையில், விற்பனைக்கு வருவதே சந்தேகம்தான் என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள். பைக்கின் தோற்றமே இதன் வருகை சாத்தியமற்றது என்கின்றனர். ஆனால், இந்த யூகிப்பை உடைத்தெறிந்து இ-பைக் கட்டாயம் விற்பனைக்கு வரும் என்கின்றனர் பைக்கின் புதிய ஸ்டைலால் மனதை இழந்தவர்கள். முற்றிலும் அழகியை இ-பைக்காகவே சிஆர் தாஸ் கோஸ்ட் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று கான்செப்ட் மாடல்கள் கடந்த காலங்களில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஆர்க்ஸா எனெர்ஜீஸின் மாண்டிஸ் கான்செப்ட் மாடலாக மட்டுமே இந்தியாவில் காட்சி தந்திருந்த நிலையில், அதனை தற்போது நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதன் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். மிகவும் அழகான இந்திய தயாரிப்பு இ-பைக்காக இது காட்சியளிக்கின்றது. இதன் விலையைப் போலவே சிறப்பு வசதிகளும் அதிகம் ஆகும்.


Click it and Unblock the Notifications









