ஃபுல்லா சார்ஜ் பண்ணா 100 கிமீ போகலாம்... அசத்தலான எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு களமிறக்கிய டெகத்லான்!
விளையாட்டு உலகம் சார்ந்த பொருட்களை விற்பனைச் செய்து வரும் முன்னணி நிறுவனமாக டெகத்லான் (Decathlon) இருக்கின்றது. அனைத்து (ஏ-டூ-இசட்) விளையாட்டு பொருட்களும் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரே இடமாக டெக்லான் விற்பனையகங்கள் இருக்கின்றன. இத்தகைய நிறுவனமே இப்போது எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனையிலும் களமிறங்கி இருக்கின்றது.
இந்திய மின்வாகன சந்தையில் தனது கால் தடத்தை பதிக்கும் விதமாக அந்நிறுவனம், ராக்ரைடர் இ-எஸ்டி100 (Rockrider E-ST100) எனும் புதுமுக எலெக்ட்ரிக் சைக்கிளையே விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது முழுக்க முழுக்க டெகத்லான் நிறுவனத்தினால் வடிவமைப்பு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட இ-சைக்கிள் ஆகும்.

இதனை இந்தியாவின் எந்த விதமான சாலையிலும் வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, கரடு-முரடான பாதைகளில் வைத்தும்கூட அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல் கட்டமாக 150 யூனிட்டுகளையே டெகத்லான் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. பெங்களூருவில் உள்ள அனுபவா, ஒயிட்ஃபீல்டு மற்றும் பன்னர்கட்டா ஆகிய பகுதிகளில் உள்ள டெகத்லான் ஸ்டோர்களில் மட்டுமே இவை விற்பனைக்குக் கிடைக்கும்.
இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டங்களாக டெகத்லானின் பிற ஸ்டோர்களிலும் ராக்ரைடர் இ-எஸ்டி100 விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. ஆகையால், சென்னை போன்ற பிற முக்கிய நகரங்களில் அடுத்த சில தினங்களில் இந்த இ-சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராக்ரைடர் இ-எஸ்டி100 எலெக்ட்ரிக் மிதிவண்டிக்கு அறிமுக விலையாக ரூ. 84,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த இ-சைக்கிள் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த சூப்பர் வேகத்திற்காக 250 வாட் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது 45 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறனுடையது. மேலும், ஓர் முழு சார்ஜில் 100 கிமீ பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரி பேக் இந்த மின்சார சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
380 Wh சாம்சங் லித்தியம் அயன் செல் பேட்டரி பேக்கே இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை 6 மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். பெடல் அசிஸ்டண்ட் மோடும் பயணிக்கும்போதே அதன் 100 கிமீ ரேஞ்ஜை நம்மால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது ஓர் பிஐஎஸ் தர சான்று பெற்ற இ-சைக்கிள் ஆகும். அதிக பாதுகாப்பும், தரம்மிக்கதாகவும் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தவல்கள் தெரிவிக்கின்றன. இரு விதமான ஃப்ரேம் அளவுகளில் மின்சார மிதிவண்டி விற்பனைக்குக் கிடைக்கும். மீடியம் மற்றும் லார்ஜ் என்கிற அளவிலேயே அது கிடைக்கும். வெவ்வேறு உயரம் கொண்டவர்களுக்கு இந்த தேர்வு உதவியாக இருக்கும்.
ராக்ரைடர் இ-எஸ்டி100 எலெக்ட்ரிக் மிதிவண்டியில் மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஈகோ, ஸ்டாண்டர்டு மற்றும் பூஸ்ட் ஆகியவையே அவை ஆகும். இருசக்கர வாகனத்தின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக நிறுவனம் 2 ஆண்டுகள் அல்லது 500 சார்ஜிங் சுழற்சியை வாரண்டியாக அறிவித்து இருக்கின்றது.
ஆகையால், இந்த இ-சைக்கிளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் சைக்கிளை விரும்புவர்கள் மத்தியில் இதற்கு சூப்பரான வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் கவர்ச்சியான தோற்றம் இதற்கான டிமாண்டை நிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப்பாக சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப வசதிக்காகவே பலர் ராக்ரைடர் இ-எஸ்டி100 நாடுவர் என யூகிக்க முடிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
சைக்கிள் உடல் ஆரோக்கியத்திற்கு பேணி காக்கக் கூடியவை. சைக்கிளை வைத்திருந்தால் மட்டும் போதாது அதில் அவ்வப்போது பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு சென்று வர அல்லது காலை உடற்பயிற்சியின்போது சைக்கிளை பயன்படுத்தலாம். இது உடலை ஃபிட்டாக வைத்திருக்க வழி வகுக்கும்.


Click it and Unblock the Notifications








