ரன்வீர் சிங்கை பிராண்ட் அம்பாசிடராக நிர்ணயித்த பிரபல பைக் நிறுவனம்! இதுமட்டுமல்ல இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு!
பிரபல இந்தி திரைப்பட நடிகரான ரன்வீர் சிங்கை முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக நிர்ணயித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் ஓர் பைக் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டுகாட்டி (Ducati)-யும் ஒன்று. இந்த நிறுவனமே பிரபல பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த நடிகர் ரன்வீர் சிங்கை தன்னுடைய பிராண்ட் அம்பாசிடராக நிர்ணயித்து இருக்கின்றது. இத்துடன், தன்னுடைய புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலான டியாவல் வி4 (Diavel V4) மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அறிமுகமாக இந்த பைக்கிற்கு டுகாட்டி நிறுவனம் ரூ. 25.91 லட்சம் விலையை நிர்ணயித்து இருக்கின்றது. ஏதோ எழுத்து பிழை என நினைத்துக் கொள்ள வேண்டாம். இதுதான் இந்த பைக்கின் விலையே ஆகும். இந்த விலையில் இந்தியாவின் பிரபல கார் மாடலான ஹூண்டாய் கிரெட்டாவையே வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய அதிகபட்ச விலைக் கொண்டதாகவே இந்தியாவில் டுகாட்டி டியாவல் வி4 விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதனை புதிய பிராண்ட் அம்பாசிடரான ரன்வீர் சிங் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். நிறுவனத்தின் இந்த பைக் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, அஹமதாபாத், சண்டிகர், மும்பை, புனே மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உடனே டெலிவரி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

ரெண்டு விதமான நிற தேர்வுகளில் டுகாட்டி டியாவல் வி4 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். டுகாட்டி ரெட் மற்றும் த்ரில்லிங் பிளாக் ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும். மிக அதீத திறனை வெளியேற்றக் கூடிய எஞ்ஜினையே இந்த பைக்கில் டுகாட்டி பயன்படுத்தி இருக்கின்றது.
1,158 சிசி திறனை வெளியேற்றக் கூடிய கிராண்ட் டூரிஸ்மோ எஞ்ஜினையே டியாவல் வி4 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 165 பிஎச்பி மற்றும் 126 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. குயிக் ஷிஃப்ட் வசதி மற்றும் ஆட்டோ ஃப்ளிப்பர் வசதிகள் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த க்ரூஸர் பைக்கில் அதிக கட்டுமஸ்தான ஃப்யூவர் டேங்கை டுகாட்டி நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. அந்த டேங்கில் சுமார் 20 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், ஃபிளாட்டான ஹெட்லேம்ப், சிங்கிள் சைடட் ஸ்விங்கார்ம் மற்றும் நான்கு துளைகள் கொண்ட எக்சாஸ்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, மிக சஸ்பென்ஷன் வசதிக்காக 50 மிமீ அப்-சைடு டவுன் ஃபோர்க்குகள் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இரண்டும் அட்ஜஸ்டபிள் வசதிக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக பைக்கின் முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
முன் பக்கத்தில் 330 மிமீ டிஸ்க் மற்றும் பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் காலிபர்களும், பின் பக்கத்தில் இரண்டு பிஸ்டன்களுடன் கூடிய 265 மிமீ பிரெம்போ டிஸ்க் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டமும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று சிறப்பம்சங்களும், பாதுகாப்பு கருவிகளும் மிக மிக தாராளமாக கொடுக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினாலேயே பைக்கின் விலை மிக மிக அதிகமாக தென்படுகின்றது.
மேலும், மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி 5 அங்குல டிஎஃப்டி திரை, டிராக்சன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், பகல்நேரத்தில் ஒளிரும் லைட்டுகள், பிரேக் லைட், க்ரூஸ் கன்ட்ரோல், டைனமிக் டர்ன் இன்டிகேட்டடர்கள் போன்ற அம்சங்களையும் டுகாட்டி இந்த பைக்கில் மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களைப் போலவே பிரீமியம் தர பைக்குகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் பார்க்கையில் தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் டுகாட்டி டியாவல் வி4 பைக்கிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








