அழகுல வெஸ்பாவை போல் இருப்பதுதான் காரணமா இருக்குமோ.. புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவியும் புக்கிங்!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி ஆரம்ப நிலை மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் இ-ஸ்பிரின்டோ (e-Sprinto)-வும் ஒன்று. இந்த நிறுவனம் கடந்த மே மாதத்தில் 'அமெரி' (Amery) எனும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
அறிமுகமாக 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆனால், இந்த விலை முதல் 100 புக்கிங்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, விரைவில் புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையிலேயே, புக்கிங் தொடங்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களிலேயே ஆயிரக் கணக்கான முன் பதிவுகளை அமெரி குவித்துவிட்டதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த தகவலை இ-ஸ்பிரிண்டோ நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கின்றது. குறிப்பாக, பெங்களூரு மற்றும் ஹைதரபாத்திலே மிக சூப்பரான ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, அதிக புக்கிங் எண்ணிக்கையை இந்த இரு நகரங்களிலேயே அமெரி-க்கு கிடைத்திருக்கின்றது. இந்த அதீத புக்கிங் எண்ணிக்கையால் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் என்கிற அந்தஸ்தை இ-ஸ்பிரிண்டோ பெற்றிருக்கின்றது. இ-ஸ்பிரிண்டோ அமெரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அமோகமான வரவேற்புக் கிடைப்பதற்கு ஒரு சில காரணங்களே உள்ளன.

அதன் குறைவான விலையும், அதிக தொழில்நுட்ப வசதிகளும்தான் அவை. இந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 140 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த திறனே பலரைக் கவரக் கூடியதாக அமைந்திருக்கின்றது. இதேபோல் சிறப்பு வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் டூ-வீலரில் மிக தாராளமாக பெற்று இருக்கின்றது.
அந்தவகையில், டிஜிட்டல் திரை, ஆன்டி தெஃப்ட் அலாரம் (திருட்டைத் தவிர்க்க இந்த தொழில்நுட்பம் உதவும்), ரிமோட் கன்ட்ரோல் லாக், மொபைல் சார்ஜிங் வசதி, வாகனம் இருக்கம் இடத்தைக் கண்டறியும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இதில் மிகவும் தாரளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமா, இந்த அமெரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 12 டிகிரி ஏறுமுக சாலையை கூட அசால்டாக ஏறிவிட முடியுமாம். இதுதவிர, இதனால் 150 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களையும் தாங்கிச் செல்ல முடியும் என கூறப்படுகின்றது. ஆகையால், சற்று உடல் பருமனானவர்களாலும் இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும் என தெரிகின்றது.
இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இ-ஸ்கூட்டரில் முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இ-ஸ்கூட்டரின் அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 60V 50AH லித்தியம் அயன் என்எம்சி (lithium-ion NMC) பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதுவே ஓர் முழு சார்ஜில் 140 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்களே போதுமானதாக இருக்கின்றது. இத்துடன், 1500 வாட் பிஎல்டிசி ஹப் மோட்டார் அமெரியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது 3.3 எச்பி திறனை வெளியேற்றும்.
மேலும், வெறும் 6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை இதனால் எட்ட முடியும். மேலும், இதனால் அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இதுபோன்று பலதரப்பட்ட சிறப்புகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த அமெரி ஸ்கூட்டருக்கு இரண்டே வாரங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமெரிக்கு கிடைத்திருக்கும் புக்கிங் எண்ணிக்கை அமைந்துள்ளது. வெஸ்பா போன்று கிளாசிக் தோற்றத்தில் இது இருப்பதாலும் அதற்கு நல்ல வரவேற்பு நாட்டில் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









