2 வருஷமா கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் பைக்!! குஜராத்தில் தயாராகுது - அறிமுகம் எப்போது?
குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஸ்விட்ச் (Svitch) ஸ்டார்ட்-அப் நிறுவனம் நம் அனைவரையும் மெர்சலாக்கும் வகையில் ஓர் எலக்ட்ரிக் பைக்கை சந்தையில் களமிறக்க தயாராகி வருகிறது. சி.எஸ்.ஆர் 762 (CSR 762) என்ற பெயரில் வெளிவரும் இந்த எலக்ட்ரிக் பைக் வருகிற 2024 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன. விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. விற்பனையில் உள்ள சில எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்றாக விரைவில் ஸ்விட்ச் மோட்டோகார்ப்பின் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதுதான், ஸ்விட்ச் சிஎஸ்ஆர் 762. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அறிமுகம் செய்வதற்கு இன்னும் 90 நாட்களுக்குள் இந்த எலக்ட்ரிக் பைக் தயாராகிவிடும். இதனால், வருகிற 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் சிஎஸ்ஆர் 762 பைக்கின் அறிமுகத்தை எதிர்பார்க்கிறோம். இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சுமார் ரூ.100 கோடிக்கும் மேலான முதலீட்டில் ஸ்விட்ச் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
"தரம் மற்றும் செயல்படுதிறனில் உயர்ந்தப்பட்ச தரத்தில் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம்" என ஸ்விட்ச் நிறுவனம் தெரிவிக்கிறது. டைம் மிஷின் உதவியுடன் எதிர்காலத்தில் இருந்து வந்தது போன்றதான தோற்றத்தில் இருக்கும் இந்த எலக்ட்ரிக் பைக்கை ரைடர் நிமிர்ந்தப்படி ஓட்ட வேண்டியிருக்கும். ஆதலால், ஸ்விட்ச் சிஎஸ்ஆர் 762 நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த பைக்கில் நம்மை முதலில் கவர்வது இதன் எல்இடி ஹெட்லைட் செட்-அப் தான். இந்த எலக்ட்ரிக் பைக்கில் 3.6 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் 3 கிலோவாட்ஸ் பி.எம்.எஸ் எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படுகிறது. இந்த பவர்டிரெயின் செட்-அப் மூலமாக பைக்கில் அதிகப்பட்சமாக 10 கிலோவாட்ஸ் (13.4 பிஎச்பி) மற்றும் 165 என்எம் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
பைக்கில் இருந்து நீக்கக்கூடியதாக இருக்கும் லித்தியம்-இரும்பு பேட்டரி பேக்கை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது ஸ்விட்ச் நிறுவனம். இந்த எலக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்களை கடந்த 2022 ஏப்ரலில் ஸ்விட்ச் வெளியிட்டது.

அப்போது அதில் கூறப்பட்டிருந்த ரேஞ்ச் (பேட்டரி ஆற்றலை வழங்கும் காலம்) உடன் ஒப்பிட்டால், தற்போது கூறப்பட்டுள்ள 160கிமீ என்பது 40 கிமீ அதிகமாகும். அதாவது, 2022 ஏப்ரலுக்கு பின் பைக்கின் ரேஞ்சை அதிகரிக்கும் வேலைகளில் ஸ்விட்ச் ஈடுப்பட்டுள்ளது இதில் இருந்து தெரிகிறது. சிஎஸ்ஆர் 762 எலக்ட்ரிக் பைக்கில் 40 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ், மொபைல் சார்ஜர் மற்றும் மொபைல் ஹோல்டர் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' முயற்சியில் உருவான ஸ்விட்ச் மோட்டோகார்ப் நிறுவனம் அகமதாப்பாத்தில் ஓர் ஃபேமஸான கட்டடத்தில் தலைமையகத்தை தற்போதைக்கு கொண்டுள்ளது. அகமதாபாத்திற்கு அருகே அமையலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் எந்த அளவிற்கு உற்பத்தி திறன் இருக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் என தென்னிந்தியாவில் முதலாவதாக ஷோரூம்களை திறக்க ஸ்விட்ச் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









