தலைவனாவே மாறிடுச்சா இந்த நிறுவனம்... மின்சார இருசக்கர வாகன விற்பனையில் கொடி கட்டி பறக்கும் ஓலா!
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2023 ஜூலை மாதத்தில் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 51,299 யூனிட் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன.
இது 2023 ஜூலை மாதத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை ஆகும். இந்த மாதத்தில் 45,984 யூனிட்டுகள் மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைக் காட்டிலும் 11.55 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியையே நடந்து முடிந்த ஜூலை மாதத்தில் மின்சார இருசக்கர வாகனங்கள் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, ஓலா நிறுவனம் இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன உலகின் முடி சூடா மன்னனாக மாறிவிட்டது. ஆமாங்க, இந்த நிறுவனமே இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் தற்போது மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டும் 18,333 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.
இது 2023 ஜூன் மாதத்தைக் காட்டிலும் 4 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். அந்த மாதத்தில் வெறும் 17,622 யூனிட்டுகள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்த சந்தையின் மின் வாகன விற்பனையில் 36 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை ஓலா நிறுவனத்தின் மின் வாகனங்களே வகிக்கின்றன.

இதற்கு அடுத்தபடியான இடத்தை டிவிஎஸ் நிறுவனம் பிடித்திருக்கின்றது. முந்தைய காலகட்டத்தில் இந்த இடத்தை ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அலங்கரித்து வந்தநிலையில் தற்போது அதனை டிவிஎஸ் தட்டி பறித்து இருக்கின்றது. சுமார் 9,599 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகிய நிலையிலேயே இரண்டாம் இடம் டிவிஎஸ்-இன் கைகளுக்கு வந்தடைந்து இருக்கின்றது.
டிவிஎஸ் இந்திய சந்தையில் ஐக்யூப் எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இதற்கே நாட்டில் தற்போது வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே விற்பனையில் அது புதிய புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் 1.50 லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமான விற்பனையை அது எட்டியதாக நிறுவனம் தெரிவித்தது. விற்பனைக்கு வந்து ஒட்டுமொத்தமாகவே 43 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் இந்த பிரமாண்ட விற்பனை எண்ணிக்கையை டிவிஎஸ் ஐக்யூப் எட்டியது குறிபிடத்தகுந்தது. இதைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்திலேயே ஏத்தர் எனெர்ஜி இருக்கின்றது.
இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகபட்சமாக 6,198 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. மேலும், நான்காவது இடத்தில் பஜாஜ் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சேத்தக் 3,192 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியான இடங்களையே ஒகினவா, ஆம்பியர், ஹீரோவின் விடா மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் பிடித்திருக்கின்றன.
இதில், ஒகினவா 2,138 யூனிட்டுகளையும், ஆம்பியர் 1,343 யூனிட்டுகளையும் கடந்த மாதத்தில் விற்பனைச் செய்திருக்கின்றன. இதில், சோகம் என்னவென்றால் இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹூரோவின் விடா பிராண்ட் ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது.
951 யூனிட்டுகள் மட்டுமே 2023 ஜூலையில் விற்பனையாகி இருக்கின்றன. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களோ ஒட்டுமொத்தமாகவே 759 யூனிட்டுகள் மட்டுமே சென்ற மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன. நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹீரோ எலெக்ட்ரிக் விளங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அடிமட்ட இடத்தை அது பிடித்திருக்கின்றது. இந்த தகவல் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாத விற்பனை இருக்கின்றது. வரும் நாட்களிலும் இந்த நிறுவனங்களுக்கு விற்பனை வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், டிவிஎஸ் தொடங்கி ஏத்தர் வரை பலர் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








