ஓலாவின் சாம்ராஜ்யாத்தை ஆட்டிபாக்க இந்திய தயாரிப்பு ரெடி! 200கிமீ ரேஞ்ஜ் தரும் இ-ஸ்கூட்டரின் விலை இவ்ளோ கம்மியா
மத்திய பிரதேசம் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனங்களில் எனிக்மா ஆட்டோமொபைல்ஸ் (Enigma Automobiles)-ம் ஒன்று. இது ஓர் ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனம் ஆகும். மின் வாகன (EV) உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாக இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனமே புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய மின்வாகன சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எனிக்மா ஆம்பையர் என்8 (Enigma Ambier N8) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.05 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். உச்சநிலை வேரியண்டிற்கு ரூ. 1.10 லட்சம் நிர்ணயம் செய்யப்ட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. ஆம்பையர் என்8 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிஜ வாழ்க்கை பயன்பாட்டில் இதைவிட சற்று குறைவான ரேஞ்ஜையே ஆம்பையர் என்8 வழங்கும் என தெரிகின்றது. 180-190 கிமீ வரையிலான ரேஞ்ஜை அது வழங்கும். 63V 60AH திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லித்தியம் ஃபெர்ரோ ஃபாஸ்பேட் பேட்டரி பேக் ஆகும்.

இதை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். இந்த அளவு குறைவான நேரத்தை செலவழித்து முழுமையாக சார்ஜ் செய்தாலே 200 கிமீ தூரம் வரை நம்மால் டிராவல் செய்ய முடியும். மின்சார வாகனங்களைப் பொருத்தவரை வேகம் குறைவாகவும், தேவையில்லாமல் மின்சாரத்தை செலவழிக்காமல் பயன்படுத்தினால் கூடுதல் ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதேபாணியை இந்த வாகனத்தில் கையாண்டால் நிறுவனம் சொன்னதைவிட அதிக ரேஞ்ஜ் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த வாகனத்தில் 220 கிலோ எடையுள்ள பொருட்களைக்கூட ஏற்றிச் செல்ல முடியும். இ-ஸ்கூட்டரின் மிக சிறந்த இயக்க திறனுக்காக 1500 watts பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45-50 கிமீ ஆகும். இந்த வாகனத்தின் பூட் கெபாசிட்டி 26 லிட்டர் ஆகும். ஹெல்மெட் மற்றும் இன்னும் சில பொருட்களையும் இதில் வைத்துக் கொள்ள முடியும். தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சிறந்த வாகனமாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையில், எனிக்மா ஆன் (ENIGMA ON) செல்போன் இணைப்பு வசதி அதில் வழங்கப்பட்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த செயலி வாயிலாக ஸ்கூட்டரையும், செல்போனையும் இணைக்கும்பட்சத்தில் பலதரப்பட்ட சுவாரஷ்யமான வசதிகளை செல்போன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, செல்போனுக்கு வரும் சில முக்கிய தகவல்களை இருசக்கரத்தில் உள்ள திரையிலேயே நம்மால் பார்த்துக் கொள்ள முடியும். இத்துடன், பன்முக நிற தேர்வுகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றது. சாம்பல், வெள்ளை, நீலம், மேட் கருப்பு மற்றும் சில்வர் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.
இதுதவிர, மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக இந்த வாகனத்தின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் 130 மிமீ சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டன. வாடிக்கையாளர்கள் மிக சுலபமாக ஆம்பையர் என்8 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துக்கொள்ள ஏதுவாக ஆன்-லைனில் புக்கிங் வசதித் தொடங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஓலா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஒட்டுமொத்த இந்திய மின்சார இருசக்கர வாகன பிரிவையும் அதிகளப்படுத்தும் விதமாக எனிக்மா அதன் இ-ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









