இவ்வளவு குறைவான விலையில் எலக்ட்ரிக் சைக்கிளா!! ஹைதராபாத் நிறுவனத்துக்கு ரொம்ப பெரிய மனசுங்க!
கியர் ஹெட் மோட்டார்ஸ் (GHM) நிறுவனம் அதன் புதிய எல் 2.0 சீரிஸ் எலக்ட்ரிக் சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் விலை குறைவான எலக்ட்ரிக் சைக்கிள் ஆகும். இதன் விலை ரூ.24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவை சேர்ந்த எலக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கியர் ஹெட் மோட்டார்ஸ். ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் ஆனது இந்தியாவில் எலக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் நிறுவனமாக விளங்குகிறது. இதுவரையில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் சைக்கிள்கள் ஜி.எச்.எம் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

எல் சீரிஸ், எஃப் சீரிஸ், இ சீரிஸ் மற்றும் ஐ சீரிஸ் என 4 விதமான சீரிஸ்களில் கியர் ஹெட் மோட்டார்ஸில் இருந்து எலக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், எல் சீரிஸில் புதியதாக எல் 2.0 சீரிஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், ஜி.எச்.எம் நிறுவனத்தின் விலை குறைவான தயாரிப்பாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சைக்கிள், மாடர்ன் சைக்கிள் பிரியர்களுக்கு மட்டுமின்றி, சைக்கிளிங் ஆர்வலர்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் புதிய எல் 2.0 சீரிஸ் எலக்ட்ரிக் சைக்கிள்கள் நகர்புற பயன்பாட்டிற்கும் மிகவும் சரியானவை என கியர் ஹெட் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் பேசிய கியர் ஹெட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் குண்டா, "எல் 2.0 சீரிஸ் எலக்ட்ரிக் சைக்கிள் ஆனது உண்மையில் எவரொருவருக்கும் ஏற்ற இ-சைக்கிள் ஆகும்.
இணையற்ற ஆற்றல், துல்லியம் மற்றும் பாணியுடன், இந்த சீரிஸ் எலக்ட்ரிக் சைக்கிள் உங்களை பரபரப்பான நகர்புற வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டு, அசாதாரண அனுபவத்தை அனுபவிக்க அழைக்கிறது. நாங்கள் மேக் இன் இந்தியா சான்றிதழை பெற்றுள்ளோம். உற்பத்தி மற்றும் செயல்பாடுகளுக்கான எங்கள் நிலையான அணுகுமுறையில் மகத்தான பெருமை கொள்கிறோம்.

சைக்கிளுக்கான உதிரி பாகங்களில் 85%க்கும் அதிகமானவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறோம். உள்ளூர் தொழில்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறோம்" என கூறியுள்ளார். கியர் ஹெட் மோட்டார்ஸின் புதிய எல் 2.0 சீரிஸ் எலக்ட்ரிக் சைக்கிளில் ஆற்றல்மிக்க 250 வாட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது.
கியர் ஹெட் மோட்டார்ஸ் நிறுவனத்தால் சொந்தமாக உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் பல்வேறு ரைடிங் ஸ்டைல் மற்றும் பாதைகளுக்கு ஏற்ப ஆற்றலை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது, சிட்டி ரோடுகளுக்கு மட்டுமின்றி, முரட்டுத்தனமான பாதைகளுக்கு ஏற்பவும் தேவையான ஆற்றலை இந்த எலக்ட்ரிக் மோட்டார் வழங்கும்.
இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் செய்ய 2 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த 2 மணிநேர சார்ஜிங்கிற்கு பிறகு சுமார் 30கிமீ தொலைவிற்கு சைக்கிளை இயக்கி செல்லலாம் என ஜி.எச்.எம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கும் இடையிடையே நீங்கள் பெடலை உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமின்றி, உலகமே பசுமையான போக்குவரத்தை நோக்கி நகர்த்து கொண்டிருக்கிறது. அதேபோல், பெரிய பெரிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு இணையாக சைக்கிள்களை வாங்குவோரும் சமீப காலமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர். நம் இந்தியாவில் சைக்கிளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இவ்வாறான எலக்ட்ரிக் சைக்கிள்கள் அடுத்தடுத்து களமிறக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications