புதுசா ஒரு பிராண்ட் இந்தியால கால் தடம் பதிக்க போகுதா! ஓலா, ஏத்தர் ரெண்டையும் மிரட்டி பாக்க புது ஆளு வர போறாங்க
உலக புகழ்பெற்ற மின்சார இருசக்கர வாகனம் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் விரைவில் அதன் கால் தடத்தைப் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த பிராண்ட்? எப்போது அது இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக அளவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவிலும் இதே நிலையே தென்படுகின்றது. அதாவது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டிமாண்ட் தற்போது நாட்டில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலை காரணமாக இந்தியாவில் கால் தடம் பதிக்க சில பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே விரைவில் ஓர் புதிய வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தாய்வானைச் சேர்ந்த முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கோகோரோ (Gogoro). இந்த நிறுவனமே இந்தியாவில் விரைவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிறுவனம் அதன் செயல்பாட்டை இந்தியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரத்யேகமாக இந்தியாவிற்கென தனி தளத்தைகூட அது உருவாக்கி இருக்கின்றது. அந்த தளத்தில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தகவல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இந்த நிலையிலேயே கோகோரோ, அதன் இந்தியாவிற்கான முதல் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிசம்பர் 12 ஆம் தேதி அன்றே கோகோரோ-வின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிராஸோவர் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என கூறப்படுகின்றது. அது என்ன பெயரில் விற்பனைக்கு வரும் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்திலேயே உலக அளவில் ஓர் அட்வென்சர் ரக இ-ஸ்கூட்டரை வெளியீடு செய்திருந்தது. அந்த வாகனமே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்திலேயே அந்த வாகனம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த தோற்றமே அது இந்தியாவிற்கு ஏற்ற வாகனம் என்பதை வெளிக்காட்டும் வகையில் இருக்கின்றது.
தோற்றத்தில் மட்டுமில்லைங்க, அந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களும் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு உகந்ததாகவே உள்ளது. இரும்பு குவார்டுகள் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இருசக்கர வாகனத்திற்கு பாதுகாவலனாக செயல்படும். இத்துடன் இரு துண்டுகள் அமைப்புக் கொண்ட இருக்கை, அதிக இட வசதிக் கொண்ட ஃப்ளூர்-போர்டு, ஆஃப்-ரோடுகளை சமாளிக்கும் திறன் கொண்ட டயர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, பின்னால் லக்கேஜை ஏற்றிச் செல்லும் வசதியும் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டும் விற்பனைக்கு வரும் எனில் இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நைக்ஸ் மாடலுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7 kW எலெக்ட்ரிக் மோட்டாரையே நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது.
இத்துடன் டூயல் பேட்டரி பேக் செட்-அப்பும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஒவ்வொன்றும் 1.6 kWh திறன் கொண்டவை ஆகும். இரண்டையும் முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் நம்மால் பயணிக்க முடியும். இந்த டெலிவரி சேவை பிரிவில் மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கேற்பவே மிகப் பெரிய இட வசதி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, ஸ்கூட்டரின் பின் பக்கத்திலும் லக்கேஜை ஏற்றிச் செல்லும் வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், நல்ல லோடு வண்டியாகவும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, பஜாஜ் எம்80 மற்றும் டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ போலே இது உதவும்.
கோகோரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ன விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வருகின்ற 12 ஆம் தேதி அதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்திய மின்சார இருசக்கர வாகன பிரியர்களின் காலண்டரில் மிகப் பெரிய எதிர்பார்ப்பைக் கொண்ட நாளாக வருகின்ற 12 ஆம் தேதி அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே ஓலா மற்றும் ஏத்தர் போன்ற நிறுவனங்கள் மிக சிறப்பான வரவேற்பை மின்சார இருசக்கர வாகன பிரிவில் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே புதுமுக நிறுவனமான கோகோரோவும் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இதற்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








