இந்தியாவில் கால்தடம் பதிப்பதற்கான அச்சாரத்தை போட்ட தாய்வான் நிறுவனம்! காணாமல் போக இருக்கும் இந்திய நிறுவனங்கள்
தாய்வானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் கோகோரோ-வும் ஒன்று. இது மின்சார இருசக்கர வாகன தயாரிப்பில் மட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த உலக புகழ்பெற்ற நிறுவனமே விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிறுவனத்தின் இந்திய வருகை இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகள் சிலவற்றிற்கு உலக சந்தையில் ஏகபோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை வைத்தே இந்தியாவிலும் கோகோரோவின் தயாரிப்புகள் வெற்றியைக் காணும் யூகிக்கப்பட்டு உள்ளது.

கோகோரோ தன்னுடைய இந்திய வருகைக்கான அனுமதியை ஏற்கனவே பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆவணங்கள் சிலவும் வெளியாகி உள்ளன. அதாவது நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கும் ஆவணங்களே தற்போது வெளியாகி இருக்கின்றது. மேலும், இந்த நிறுவனம் தன்னுடைய வருகையை கடந்த நவம்பர் மாதமே உறுதி செய்துவிட்டது.
ஸைப் எலெக்ட்ரிக் உடனான கூட்டணியின்கீழ் தன்னுடைய வாகனத்தை இந்தியாவில் களமிறக்குவதாக தெரிவித்து இருந்தது. ஆனால், பிசினஸ்-டூ-பிசினஸ் எனும் முறையிலேயே தன்னுடைய வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது. அதாவது, வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கான வாகனமாக மட்டுமே தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே தனது இரு தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு கோகோரோ இந்தியாவில் விற்பனைக்கான அனுமதியைப் பெற்றிருக்கின்றது. அந்த இரு மாடல்களையும் தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் நிறுவனம் தற்போது பட்டியலிட்டு இருக்கின்றது. கோகோரோ 2 சீரிஸ், கோகோரோ சூப்பர் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும்.
கோகோரோ 2 சீரிஸ் ஓர் 125 சிசி, கிளாசிக் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதில் ஓர் ஃபுல் சார்ஜில் 170 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது, 7.0 kW பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், எஸ்பிஎஸ் எனும் ஸ்பெஷல் பிரேக்கிங் சிஸ்டம் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில், பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் வாட்டர் கூல்டு மோட்டார் ஆகும். இது அதீத திறனை வெளியேற்றும்.
தொழில்நுட்ப வசதியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயோ ஆதென்டிகேஷன், ஆட்டோ வெதர் மோட் மற்றும் ஒன் க்ளிக் ரிவர்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில், பயோ ஆதென்டிகேஷன் வசதி வாயிலாக விரல் ரேகை, ஃபேஸ் ஐடி அல்லது குரல் கட்டளை வாயிலாக வாகனத்தை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, செல்போன் ஆப், ஆன்டி தெஃப்ட் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் சாஃப்ட்வேர் அப்டேட் உள்ளிட்ட அம்சங்களும் கோகோரோ 2 சீரிஸில் வழங்கப்பட்டு இருக்கும். கோகோரோ 2 சீரிஸில் இரு விதமான தேர்வுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2 பிரீமியம் மற்றும் 2 பிளஸ் ஆகியவையே அவை ஆகும்.
கோகோரோ 2 சீரிஸைவிட பவர்ஃபுல் மாடலாக சூப்பர் ஸ்போர்ட் இருக்கின்றது. இது வெறும் 3.9 செகண்டுகளில் 0-50 கிமீ ரேஞ்ஜை எட்டிவிடும் திறன் கொண்டது. மேலும் இது மணிக்கு 96 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பரான இருசக்கர வாகனங்களையே இந்திய சந்தையில் கோகோரோ விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆனால், அதிகாரப்பூர்வ வருகை பற்றிய தகவல் இதுவரை வெளியாகிவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக ஏத்தர் 450 எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ, பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றிற்கு கோகோரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை பெரும் தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்திய நிறுவனங்களுக்கு அதிக டஃபினை இது ஏற்படுத்தும் என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








