தமிழகத்தில் உள்ள ஓலாவோட ஆலையையே ஒன்னுமில்லாம ஆக்கிடும் போலையே.. இந்தியாவிற்கு வருகிறது மற்றுமொரு பிரமாண்ட ஆலை!
தாய்வானை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கோகோரோ (Gogoro). இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய எலெக்டரிக் இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் கோகோரோ (Gogoro)-வும் ஒன்று. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் இ-வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது. தாய்வானை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனமே தனது மிகப் பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை இந்தியாவிலும் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆலை உலகின் மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன ஆலையாக கருதப்படும் ஓலா இ-வாகன உற்பத்தி ஆலைக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகப் பெரியதாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய கோகோரோ தற்போது திட்டமிட்டு இருக்கின்றது. முதலில் 12,482 கோடி ரூபாயையே அது முதலீடு செய்ய உள்ளது.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழும்பி இருக்கும். ஓலாவைபோலவே இந்த நிறுவனமும் தமிழகத்தில்தான் அதன் ஆலையை அமைக்க போகின்றதா?, இதற்கான பதில் இல்லை. இந்த நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே அதன் முதலீட்டை செய்ய இருக்கின்றது. அம்மாநிலத்தின் முக்கிய நகரமான புனேவிலேயே நிறுவனத்தின் பிரமாண்ட ஆலை அமைய இருக்கின்றது.
நிறுவனம் இந்த புதிய ஆலையில் மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி இ-வாகனங்களுக்கு தேவையான முக்கிய கூறுகளையும் தயாரிக்க இருக்கின்றது. மிக முக்கியமாக பேட்டரி உற்பத்தியை அது மேற்கொள்ள இருக்கின்றது. இதற்கான ஒப்புதலை மாநில அரசு ஏற்கனவே வழங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. நடப்பாண்டு ஜனவரி மாதத்திலேயே ஒப்புதல் வழங்கும் பணிகள் முடிந்துவிட்டதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.
கோகோரோ நிறுவனம் இந்தியாவில் ஓலாவை போலவே மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்த இருக்கின்றது. இதற்காக பல்வேறு முயற்சிகளை நம் நாட்டில் அது முன்னெடுக்க இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாடு முழுவதும் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை அது உருவாக்க இருக்கின்றது.
இந்த மையங்கள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை இ-வாகன உரிமையாளர் நொடிப் பொழுதில் பெற்று செல்ல உதவியாக இருக்கும். இதனை பேட்டரி வாடகை மையங்கள் என்றும் கூறலாம். காலியான பேட்டரியை அங்கு ஒப்படைத்துவிட்டு, முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.
குறைவான கட்டணத்தில் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களையே நாடு முழுவதும் அமைக்க கோகோரோ திட்டமிட்டு உள்ளது. அது 12 ஆயிரம் பேட்டரி ஸ்வாப்பபிள் மையங்களை உருவாக்க இருக்கின்றது. முன்னதாக இதே நிறுவனம் ஸைப் எலெக்ட்ரிக் (Zypp Electric) நிறுவனத்துடன் இணைந்து நாட்டில் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இந்த நிறுவனம் அதன் 2 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியீடு செய்தது. இது இரண்டு விதமான தேர்வுகளைக் கொண்ட மாடல் ஆகும். 2 பிரீமியம் மற்றும் 2 பிளஸ் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இந்த இரண்டும் இப்போது வரை நாட்டில் விற்பனைக்குக் கிடைக்காத நிலையே தென்படுகின்றது.
நிறுவனத்தின் இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ தளத்தில் இவை இடம் பிடித்திருக்கின்றன. ஆனால், அதனை வாங்குவதற்கான வசதிகள் கொடுக்கப்படவில்லை. இதேபோல், 2 சீரிஸ் உடன் சேர்த்து கோகோரோவின் இந்தியா தளத்தில் சூப்பர் ஸ்போர்ட் எனும் மாடலும் இடம் பிடித்துள்ளது. இது, ஏஸ், டிசிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான தேர்வுகளைக் கொண்ட மாடல் ஆகும்.
இதையும் வாங்கிக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்படவில்லை. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை பயன்பாட்டிற்கு வந்த பின்னர் இவை இரண்டும் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இரண்டும் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஹூரோ விடா வி1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு கடும் போட்டியாக மாறும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பெரும் முதலீட்டுடன் தாய்வான் நிறுவனமான கோகோரோ இந்தியாவில் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் வெற்றி காணுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








