நம்ம ஊர் ராயல் என்பீல்டு பைக் vs அமெரிக்க ஹார்லி-டேவிட்சன் பைக்!! இப்போ தான் ஆட்டம் சூடுப்பிடிக்குது!
கிளாசிக் தோற்றத்திலான பைக்குகளுக்கு நம் இந்தியர்கள் மத்தியில் எப்போதுமே ஓர் தனி வரவேற்பு உண்டு. இந்த கிரேஸை கடந்த பல வருடங்களாக ராயல் என்பீல்டு, ஜாவா, யெஸ்டி போன்ற நிறுவனங்கள் நன்கு பயன்படுத்தி வந்துள்ளன. இதனை தாங்களும் பயன்படுத்தி கொள்ளும் முயற்சியாக, வெளிநாட்டு பைக் நிறுவனங்களான டிரையம்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் உள்ளிட்டவையும் தங்களது புதிய பைக்குகளை கிளாசிக் தோற்றத்தில், அதேநேரம் மாடர்ன் தொடுதல்களுடன் இந்தியாவில் களமிறக்கி உள்ளன.
இதில், ஹார்லி-டேவிட்சன் அறிமுகப்படுத்திய எக்ஸ்440 மோட்டார்சைக்கிள் ஆனது ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 பைக்கிற்கு நேரடி போட்டி மாடலாக விளங்காவிடினும், சில தரப்பு வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுக்கும் என்பது உறுதி. ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 பைக்கிற்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். இந்த இரு பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள்...

தோற்றம்: ஏற்கனவே கூறியதுபோல், ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக் ஆனது மாடர்ன் தொடுதல்களுடன் பழமையான ரெட்ரோ தோற்றத்தில் உருவாக்கப்பட்ட பைக் ஆகும். மாடர்ன் டச் என்பதை நியாயப்படுத்தும் வகையில் எல்இடி விளக்குகள் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. மறுப்பக்கம், கிளாசிக் 350 ஆனது ஓர் உண்மையான ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிள் என்றுதான் சொல்ல வேண்டும். சிலரால், பழமையான கிளாசிக் 350 பைக்கையும், தற்போதைய மாடர்ன் கிளாசிக் 350 பைக்கையும் கூட வித்தியாசப்படுத்த முடிவதில்லை.
என்ஜின்: ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் இணைந்து உருவாக்கிய எக்ஸ்440 பைக்கில் 440சிசி ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 38 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் விளங்குகிறது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் 349சிசி சிங்கிள்-சிலிண்டர் ஜே-சீரிஸ் என்ஜின் பொருத்தப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் மீட்டியோர் 350 பைக்கின் மூலம் சந்தையில் அறிமுகமான இந்த என்ஜின் கிளாசிக் 350 பைக்கில் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகப்பட்சமாக 19 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
ஹார்ட்வேர்: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் சஸ்பென்ஷன் & பிரேக்குக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் & 320மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் ட்வின் கேஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்கள்& 240மிமீ டிஸ்க்கும் பொருத்தப்படுகின்றன. கிளாசிக் 350 பைக்கில் முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் & 300மிமீ டிஸ்க்கும், பின்பக்கத்தில் ட்வின் கேஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்கள்& 270மிமீ டிஸ்க் (அ) 153மிமீ டிரம் பொருத்தப்படுகின்றன. ஆம், கிளாசிக் 350 பைக் டிரம் பிரேக் வெர்சனிலும் கிடைக்கிறது.

தொழிற்நுட்ப வசதிகள்: எக்ஸ்440 பைக்கில் எல்இடி விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங் துளை, ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் முக்கிய தொழிற்நுட்ப வசதிகளாக வழங்கியுள்ளது. மறுப்பக்கம், கிளாசிக் 350 பைக்கில் யுஎஸ்பி சார்ஜிங் வசதி, அனலாக் ஸ்பீடோமீட்டர் வழங்கப்படுகிறது. இந்த ராயல் என்பீல்டு பைக்கில் கூடுதல் தொகையை செலுத்தி டிரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்தையும் பெறலாம்.
எக்ஸ்-ஷோரூம் விலை: இந்த விஷயத்தில்தான் இந்த இரு பைக்குகளும் பெரிய அளவில் வித்தியாசப்படுகின்றன. ஏனெனில், ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக் ரூ.2.29 லட்சத்தில் இருந்து ரூ.2.69 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக விலையே, விரைவில் இந்த விலைகள் அதிகரிக்கப்படலாம். ஆனால், கிளாசிக் 350 பைக் ஆனது ரூ.1.93 லட்சம் - ரூ.2.25 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ரெட்ரோ-ஸ்டைல் தோற்றம் என்ற விஷயத்தை தவிர்த்து இந்த இரு பைக்குகளுக்கு இடையே பெரியதாக எந்தவொரு ஒற்றுமையும் இல்லை. ஆதலால், ஏற்கனவே கூறியதுபோல், ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் நேரடி போட்டி மாடல் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, என்ஜினிலும், விலையிலும் இவை இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.


Click it and Unblock the Notifications









