ஹெல்மெட்டோட சேர்த்து இந்த பலூன் பேக்கையும் மாட்டிட்டு போங்க... எமனே நெனச்சாலும் உங்கள தொடுறது கஷ்டம்தான்!
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஏர்பேக்கை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஹெலைட் (HELITE) எனும் நிறுவனம் உருவாக்கி அசத்தி இருக்கின்றது. இந்த ஏர்பேக் பேக்-பேக் (Airbag Backpack) பற்றிய இன்னும் பல சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக குறைவு. இதன் காரணத்தினால்தான் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. மேலும், போக்குவரத்து விதிகளில் இது கட்டாயமாக்கவும் பட்டுள்ளது. ஹெல்மெட்டை இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் அணிய வேண்டும் என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன.

அவர்கள் சிறுவர்களாக இருந்தால் தலைக் கவசயம் கட்டாயம் அணிந்தாக வேண்டும் என்பது விதி ஆகும். விபத்தின்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நேரும் பெரும் ஆபத்துகளை குறைக்கும் பொருட்டே ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஹெல்மெட்டைப் போலவே அதிக பாதுகாப்பை வழங்கக் கூடிய ஓர் புதிய பாதுகாப்பு கருவி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஏர் பேக் எனும் அம்சமே அது ஆகும். கார்களில் மட்டுமே இந்த அம்சம் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்காகவும் பிரத்யேகமாக ஏர்பேக் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. பின்னால் மாட்டிக் கொள்ளும் பை (பேக்-பேக்) வடிவிலேயே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஏர்பேக் (Airbag Backpack) உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

எவ்வளவு பெரிய விபத்தாக இருந்தாலும் இது பாதுகாக்கும். அந்தவகையிலேயே பேக்-பேக் ரக ஏர்பேக் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதனை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஹெலைட் (HELITE) எனும் நிறுவனமே வடிவமைத்து இருக்கின்றது. இது ஓர் ரைடிங் கியர் உருவாக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே இருசக்கர வாகன ஓட்டிகள் தினசரி பயன்படுத்தும் வகையில் ஓர் ஏர்பேக் பேக்-பேக்கை தயார் செய்திருக்கின்றது.
இந்த பேக்-பேக்கிற்கு எச்-மூவ் (HELITE H-MOOV) எனும் பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. சிஇ (CE) சான்று பெற்ற பாதுகாப்பு கவசம் இதுவாகும். இருவிதமான பதிப்புகளில் பேக்-பேக் ரக ஏர்பேக் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று தானாக சென்சார்கள் வாயிலாக செயல்படும் வகையிலும், மற்றொன்று, பாரம்பரிய டெதர் சிஸ்டம் கொண்டதாகவும் உள்ளது.

டெதர் சிஸ்டம், பைக் விபத்தைச் சந்தித்த அந்த தருணத்திலேயே ஏர்பேக்கை ஆக்டிவேட் செய்யும். ஆனால், ஒயர்லெஸ் வசதிக் கொண்ட ஏர்பேக் சிஸ்டம் விபத்து நடைபெற இருப்பதை உணர்ந்து, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே ஏர்-பேக்கை ஆக்டிவேட் செய்துவிடும். இரண்டும் விரைந்து ஏர்பேக்கை திறக்க செய்யும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
தற்செயலாக ஏர்பேக் தூண்டப்படாமல் இருக்க சில பிரத்யேக வசதிகளும் இவற்றில் வழங்கப்பட்டு இருக்கின்றன. டெதர் சிஸ்டம் கொண்ட ஏர் பேக் பயன்பாட்டாளர்கள், பைக்கை விட்டு இறங்கும் முன் டெதரை துண்டிவித்துவிட வேண்டும். ஒருவேளை தெரியாமல் ஏர்-பேக் திறந்துவிட்டால் என்ன செய்வது, அந்த பேக்-பேக் வீணாகிவிடுமா என நீங்கள் கேட்கலாம். இதை மறுபயன்பாடு செய்ய முடியும்.

கேட்ரிட்ஜ் ரக ஏர்பேக் இது ஆகும். ஆகையால், இருசக்கர வாகன ஓட்டியாலேயே இதை மாற்றிக் கொள்ள முடியும் ஹெலைட் நிறுவனம் கூறியுள்ளது. முதுகு, வயிறு, மார்பகம், தாடை உள்ளிட்ட பகுதிகளுக்கு மிகுந்த பாதுகாப்பை இந்த ஏர்பேக் வழங்கும். இந்த பகுதிகளுக்கு மட்டுமே இது பாதுகாப்பை வழங்கும் என்பதனால் இந்த ஏர்பேக் பேக்-பேக் அணிந்திருந்தாலும், தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
இதன் வாயிலாகவே உடல் உறுப்பின் முக்கிய பாகமான தலையை விபத்தினால் ஏற்படும் கடுமையான காயங்களில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த ஏர்பேக்கை ஸ்டோரேஜ் பேக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 18 லிட்டர் வரையிலான பொருட்களை இதில் வைத்துக் கொள்ள முடியும். லேப்டாப், நோட்டு புத்தகம், முக்கிய ஆவணங்கள் எதை வேண்டுமானாலும் இதில் வைத்துக் கொள்ள முடியும்.

இதன் தோல்பட்டைகளை தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹெலைட் எச்-மூவ் ஏர் பேக்கிற்கு 689 யூரோக்கள் தொடங்கி 849 யூரோக்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மேனுவல் வேரியண்டிற்கு ரூ. 60 ஆயிரமும், ஒயர்லெஸ் தேர்விற்கு ரூ. 74 ஆயிரமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
முதலில் ஐரோப்பிய சந்தைகளிலேயே ஏர்பேக் பேக்-பேக் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதன் பின்னரே உலக நாடுகளுக்கு இப்பாதுகாப்பு கவசம் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் இந்திய வருகை பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால், இப்போதைக்கு இந்த கவசம் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்குமா என்கிற கேள்விக்கு பதில் இல்லாத நிலையே உள்ளது. அதேவேளையில், இது ஓர் முக்கியமான பாதுகாப்பம்சம் என்பதால் கூடிய விரைவில் அனைத்து உலக நாடுகளிலும் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









