கூடுதலாக வசூலித்த தொகையை கஸ்டமர்களுக்கு ரிட்டர்ன் செய்யும் டிவிஎஸ்.. யார், யாருக்கு பணம் திரும்ப கிடைக்கும்?..
கூடுதலாக வசூல் செய்த தொகையை டிவிஎஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கே திரும்பி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் யாருக்கெல்லாம் அது பணத்தை திரும்ப வழங்க இருக்கின்றது?, எவ்வளவு தொகையை அது திரும்பிக் கொடுக்க இருக்கின்றது? என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டிவிஎஸ்-ம் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனமே அதன் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக வசூல் செய்த பணத்தை திரும்ப வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிறுவனம் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மற்றும் ஆட்டோ என பன்முக வாகனங்களை இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், மின்சார இருசக்கர வாகன பிரிவிலும் தன்னுடைய பங்களிப்பை டிவிஎஸ் வழங்கி வருகின்றது. நிறுவனம், இப்போதைய நிலவரப்படி ஐக்யூப் எனும் ஒற்றை மாடலை மட்டுமே இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இருசக்கர வாகன மாடலை வாங்கியவர்களிடமே டிவிஎஸ் கூடுதல் தொகையை வசூல் செய்திருப்பதாகவும், அவர்களுக்கே அதிகமாக வசூல் செய்யப்பட்ட தொகையை திரும்ப வழங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.
இதற்காக நிறுவனம் கோடிக் கணக்கான ரூபாயை ஒதுக்கி இருக்கின்றது. சென்ற ஆண்டில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர்கள் ரீ-ஃபண்டை பெற தகுதியானவர்கள் ஆவார்கள். தோராயமாக ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,700 வரை திரும்ப வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான ஆஃப்-போர்டு சார்ஜர்களை வழங்கியதற்கே டிவிஎஸ் நிறுவனம் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்திருக்கின்றது. இந்த தொகையையே நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்க முடிவு செய்திருக்கின்றது. ஃபேம் திட்டத்தின்படி ஆஃப்-போர்டு சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் அக்ஸசெரீஸ்கள் ஆகியவற்றிற்கு தனியாக விலை நிர்ணயம் செய்யக் கூடாது என்பது விதியாகும்.
இந்த விதியையே டிவிஎஸ் மீறி இருக்கின்றது. அதாவது, வாகனத்தின் விலையைத் தாண்டி தனியாக ஆஃப்-போர்டு சார்ஜிங் கருவிகளுக்கும், அக்ஸசெரீஸ்களுக்கும் விலையை நிர்ணயித்து வசூல் செய்திருக்கின்றது. இந்த விதிமீறல் சமீபத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் வாயிலாகக் கண்டறியப்பட்டது. இந்த நிலையிலேயே சார்ஜர்களுக்காக தனியாக வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை திரும்பி வழங்கும் நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டு இருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே டிவிஎஸ்-ம் அந்த தொகையை வாடிக்கையாளர்களுக்கே திரும்பி வழங்க முன் வந்திருக்கின்றது. டிவிஎஸ் மட்டுமின்றி ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களும் இந்த விதிமீறலில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தை திரும்ப வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன.
அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை இந்த நிறுவனங்கள் திரும்பி வழங்கிவிடும் என தெரிகின்றது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்திலேயே ஒரு லட்சம் யூனிட் விற்பனை மைல் கல்லை ஐக்யூப் எட்டியது.
தொடர்ந்து, மாத விற்பனை சதவீதமும் கடந்த 2023 ஏப்ரலில் பலமடங்கு அதிகரித்து இருக்கின்றது. 2022 ஏப்ரலில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெறும் 1,420 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிநிலையில், 2023 ஏப்ரலில் அது 6,227 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி நிறுவனத்தின் பெட்ரோல் டூ-வீலர்களின் விற்பனையும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இது ஓர் பிரீமியம் தர இ-ஸ்கூட்டர் என்பதால் இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சென்ற ஏப்ரல் மாதத்தை போலவே அடுத்து வரும் மாதங்களிலும் இதற்கு வரவேற்பு பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









