இந்த இ-ஆட்டோக்களுக்கு முன்னாடி மின்சார கார்கள் எல்லாம் ஒன்னுமே இல்ல.. டூ-வீலர்களையே இவை தூக்கி சாப்பிட்ரும்!
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை போலவே மின்சாரத்தால் ஓடும் ஆட்டோக்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களைக் காட்டிலும் ஆட்டோக்களே அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆட்டோக்களைக் காட்டிலும் இவை அதிகம் லாபம் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன. ஆகையால், பல ஆட்டோ டிரைவர்கள் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவின் பயன்பாட்டிற்கு மாற தொடங்கி இருக்கின்றனர். இந்த மாற்றத்திற்கு ஒரு சில மின்சார ஆட்டோக்கள் இ-கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக இருப்பதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

விலை குறைவு, அதிக ரேஞ்ஜ், குறைவான பராமரிப்பு செலவு என அனைத்திலும் இ-ஆட்டோரிக்சாக்கள் சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றன. அந்தவையில் நாட்டில் மிக சிறப்பானதாகக் காட்சியளிக்கும் டாப் ஐந்து எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மயூரி டீலக்ஸ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சா (Mayuri Deluxe Electric Rickshaw): இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே இந்த ஆட்டோரிக்சா விற்பனையில் இருக்கின்றது. இதில் மயூரி நிறுவனம் 1kW மோட்டாரை அது பயன்படுத்தி இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த ஆட்டோவில் 4 பேர் வரை பயணிக்க முடியும். அதேவேளையில் 400 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்லவும் முடியும்.

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஆட்டோவில் 90கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக லீட்-ஆசிட் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. உள்ளூர் சவாரிகளை மட்டுமே பார்க்க ஏற்ற இ-ஆட்டோவாக இது காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 1.06 லட்சம் ஆகும். மற்ற ஆட்டோக்களைக் காட்டிலும் மிகவும் எளிமையான தோற்றத்தில் இது உருவாக்கப்பட்டிருப்பதே இதன் மலிவு விலைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

லோஹியா நரைன் டிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஆட்டோ (Lohia Narain DX): இதன் விலை ரூ. 1.15 லட்சம் ஆகும். மயூரி டீலக்ஸ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சாவிற்கு அடுத்தபடியாக குறைவான விலைக் கொண்ட ஆட்டோவாக இது காட்சியளிக்கின்றது. இந்த ஆட்டோவில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.
அதேவேளையில், இதில் 480 கிலோ வரையில் ஏற்றிச் செல்ல முடியும். லோஹியா நரைன் டிஎக்ஸ் இ-ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த அதிகபட்ச வேக திறனுக்காக 1.2 kW மின் மோட்டார் எலெக்ட்ரிக் ஆட்டோவில் கொடுக்கப்பட்டு உள்ளது.

கைனடிக் சஃபர் (Kinetic Safar): இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவும் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ மட்டுமே ரேஞ்ஜ் தரக் கூடியதாக இருக்கின்றது. மேலும், முன்னதாக பார்த்த எலெக்ட்ரிக் ஆட்டோக்களைப் போலவே இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 25 கிமீட்டாரக மட்டுமே இருக்கின்றது. இந்த அதிகபட்ச வேகத்திற்காக 1.5 kW திறன் கொண்ட மின் மோட்டார் கைனடிக் சஃபரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 1.47 லட்சம் ஆகும்.

பஜாஜ் ஆர்இ (Bajaj RE): பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சூப்பரான எலெக்ட்ரிக் ஆட்டோவாக இது காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 2.46 லட்சம் ஆகும். இதன் அதிக விலைக்கு ஏற்பவே ரேஞ்ஜ் மற்றும் வேக திறனில் மிக சிறந்த இ-ஆட்டோவாகக் காட்சியளிக்கின்றது. முன்னதாக பார்த்த மூன்று இ-ஆட்டோக்களைக் காட்டிலும் இது பெஸ்டான எலெக்ட்ரிக் ஆட்டோவாகக் காட்சியளிக்கின்றது.
இதற்கேற்ப ஓர் முழு சார்ஜில் 120கிமீ ரேஞ்ஜை தரும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 45கிமீ ஆகும். இதில் நான்கு பேர் வரை ஒரே நேரத்தில் அமர்ந்து பயணிக்க முடியும். மேலும், கார்களில் வழங்கப்படுவதைப் போல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ரிவர்ஸ் பஸர் என எக்கசக்க அம்சங்கள் இந்த இ-ஆட்டோவில் வழங்கப்பட்டு இருக்கின்றன. 4kW மின் மோட்டாரே பஜாஜ் ஆர்இ-யில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மஹிந்திரா ட்ரியோ (Mahindra Treo): இந்த பட்டியலிலேயே அதிக விலைக் கொண்ட இ-ஆட்டோவாக மஹிந்திரா ட்ரியோ காட்சியளிக்கின்றது. அதேவேளையில், தொழில்நுட்ப வசதியிலும் இந்த ஆட்டோ தரமானதாகக் காட்சியளிக்கின்றது. ஓர் முழு சார்ஜில் ட்ரியோவில் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ ஆகும். ஆனால், இந்த ஆட்டோவில் 3 பேர் வரை மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் விலை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மிகக் குறைவான விலையைக் கொண்டிருப்பதாலும், அதிக லாபத்தை அவை தருவதனாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் தங்களுடைய சேவையில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களைக் களமிறக்கியும், பலர் புதிதாக இ-ஆட்டோக்களைக் களமிறக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









