மலை பாதையில் பயணிக்கும்போது எந்த கியர்ல பைக்க ஓட்டணும்? என்ன இந்த பக்க பிரேக்க பிடிக்க கூடாதா? டிராவல் டிப்ஸ்!
பைக்கில் லாங் டிரைவ் செய்யும் கலாச்சாரம் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. கடந்த காலங்களில் பைக்கிலேயே மணாலி, லடாக், ஸ்ரீநகர் மற்றும் லே உள்ளிட்ட பகுதிகளுக்கு இளைஞர்கள் பைக்கிலேயே சென்ற செய்திகளைகூட நாம் படித்திருப்போம்.
ஆகையால், இளைஞர்கள் பலர் அதிகம் நேரம் இருசக்கர வாகனங்களுடன் செலவிட விரும்புவதை நம்மால் உணர முடிகின்றது. இந்த மாதிரியான பயணங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு வழங்குவதாக கருதுகின்றனர். இந்த மகிழ்ச்சியையே இரட்டிப்பாக்குவது எப்படி என்பதற்கான சில டிப்ஸ்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம்.

மணாலி, லடாக் மற்றும் லே உள்ளிட்ட பகுதிகள் மிகவும் கரடு - முரடான சாலைகளைக் கொண்ட மலைப் பகுதி ஆகும். மேலும், ஏற்றம் நிறைந்த பகுதிகளாகவும் அவை காணப்படுகின்றன. இந்த மாதிரியான பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக, என்ன மாதிரியான வேகம், எந்த கியர் லெவலில் பயணிக்க வேண்டும் என்பதற்கான தகவலையே வழங்கி உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
லேனுக்குள்ளேயே பயணிப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
நீங்கள் மலைப் பகுதியில் பயணிக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கான பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அதிகளவு வளைவுகளையும், திடீர் உயரங்கள் மற்றும் தாழ்வான பாதைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் அதிக கவனத்துடன் பயணிப்பதே மிக நல்லது. சிறிய கவன சிதறல்கள்கூட பெருத்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. குறிப்பாக, லேனுக்குள்ளேயே பயணிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேவேளையில், பெரும்பாலான மலை பாதைகளில் டிவைடர் அல்லது சாலையை பிரிக்கும் மார்க்கிங்குகள் இருக்காது.
ஆகையால், உங்களுடைய சிந்தனையின் வாயிலாக குறிப்பிட்ட இடத்தை எல்லையாக நிர்ணயித்து, அதன்படி பயணிக்க வேண்டும். அந்த எல்லையை தாண்டி அடுத்த பக்கம் பயணிக்கக் கூடாது என்கிற முடிவையும் எடுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதனால் திடீரென எதிரில் தோன்றும் வாகனங்களிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், நமக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

அதேவேளையில், எந்த காரணத்தைக் கொண்டும் சாலைகளின் முனைப் பகுதிகளில் நாம் பயணிக்கக் கூடாது. இதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ளுங்கள். இது திடீரென தோன்றும் கொண்டை ஊசி வளைவுகளை சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும். கொண்டை ஊசி திருப்பங்கள் மிகுந்த ஆபத்தானவை. ஆகையால், மிக மிக குறைவான வேகத்தில் பயணிப்பதும் இங்கு அவசியமானதாக உள்ளது. குறிப்பாக, கட்டுப்படுத்தக் கூடிய வேகத்தையே உங்களுடைய ஒட்டுமொத்த பயணமும் இருக்க வேண்டும்.
எந்த கியரில் பயணிக்க வேண்டும்?
சமதளமான பாதையில் பயணிக்கும்போது கியர் எந்த பொசிஷனில் இருக்கிறது என்பது அவசியமல்லாதது. அதேவேளையில், மலையில் ஏறும்போது அது குறைவான பொசிஷனில் இருத்த வேண்டும். அப்போதே உங்களால் போதுமான ஆர்பிஎம்மைப் பெற முடியும். உயர் ஆர்பிஎம்மிலேயே அதிக வேக ஆற்றலை நம்மால் பெற முடியும். எனவே குறைவான கியரில் சவாரி செய்வதே மிக சிறந்த ஐடியாவாக உள்ளது. பிக்-அப் திறன் உச்ச நிலையில் இருத்தல் வேண்டும் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில், மிக அதிக வேகத்தில் பயணிக்காததையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நியூட்ரலை மட்டும் செஞ்சுடாதீங்க
கியரில் இருக்கும்போது வாகனம் முன்னேறி செல்ல தயாராக இருக்கும். ஆனால், எஞ்ஜின் திறனால் மட்டுமே அது நடக்கும். உதாரணமாக, கியரில் இருக்கும் வாகனத்தை எஞ்ஜின் ரன்னாகாமல் நகர்த்த முடியாது. அதுவே, கிளட்சை அழுத்தினால் அது நகரும். இதேபோல், எஞ்ஜின் ரன் ஆகிக் கொண்டிருக்கும்போது ஆக்சலரேசனை திருகினாலும் நகரும். இந்த இரண்டு இல்லாமல் வாகனத்தை நகர்த்த முடியாது. இதனை எஞ்ஜின் பிரேக்கிங் என குறிப்பிடுவர். இது மலை சவாரியின்போது மிக அவசியமானது. எனவேதான், எந்த சூழ்நிலையிலும் கியரை நியூட்ரல் செய்யக் கூடாது.
நியூட்ரல் செய்வதனால் எஞ்ஜின் பிரேக்கிங் கட்டுப்பாடு இழக்க நேரிடும். இறக்கமான பகுதியில் இது நேரும் எனில் நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியாத வேகத்தில் வாகனம் நகர தொடங்கிவிடும். இது பெருத்த ஆபத்தை ஏற்படுத்திவிடும். பிரேக்குகளை இந்த மாதிரியான சூழலில் பயன்படுத்தினால் அவற்றின் ஆயுட்காலம் பாதிப்படையச் செய்யலாம். எனவே இறக்கமான பாதையில் டூ-வீலரில் பயணிக்கும்போது குறைந்தபட்ச கியரில் பயணிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இது மிக சிறந்த கன்ட்ரோலை நமக்கு வழங்கும்.
வலது பக்க பிரேக்
மாலையில் ஏறும்போது வலது பக்க பிரேக்கை பயன்படுத்துவது நல்லது. அதாவது, பின் வீல் பிரேக்கை பயன்படுத்த வேண்டும். முன் பக்கை வீலைக் காட்டிலும் பின் வீல் பிரேக்கின் வாயிலாகவே மிக சிறந்த கன்ட்ரோல் கிடைக்கும். அதேநேரத்தில், மலையில் இருந்து இறங்கும்போது முன் வீல் பிரேக்கை பயன்படுத்த வேண்டும். இதற்கு பின்னால் மிகப் பெரிய காரணமெல்லாம் ஒளிந்திருக்கவில்லை. எடை என்கிற விஷயமே ஒளிந்துள்ளது. மலையில் ஏறும்போது முழு எடையும் பின் வீலிலும், இறங்கும்போது முழு எடையும் முன் வீலுக்கும் மாறும். இந்த மாதிரியான நேரங்களில் எடையின் அழுத்தம் எங்கு அதிகமாக உள்ளதோ அந்த பகுதியில் பிரேக்கிங் மிக சிறப்பாக இருக்கும். ஆகையால், உங்கள் பயணத்திற்கு ஏற்ப பிரேக்கிங் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








