பைக்குகளில் ரிவர்ஸ் கியர் வழங்கப்படாததற்கு காரணம் என்ன தெரியுமா?.. இதுக்கு பின்னாடி இவ்ளோ சப்பையான காரணமா!!
கார், பஸ் மற்றும் லாரி என மோட்டார்சைக்கிளை தவிர மற்ற அனைத்து வாகனங்களிலும் ரிவர்ஸ் வழங்கப்படுகின்றது. பைக்குகளில் மட்டும் இந்த வசதி ஏன் வழங்கப்படுவதில்லை என என்றாவது யோசிச்சது உண்டா?, இந்த யோசனை உங்கள் மனத்தில் எழும்பி இருக்கும் எனில் இதற்கான விடையை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ரிவர்ஸ் கியர் (Reverse Gear), வாகனங்களில் வழங்கப்படும் மிகவும் முக்கியமான ஓர் வசதி இது ஆகும். இந்த வசதி இல்லை எனில் கார், பஸ் மற்றும் லாரி போன்றவற்றை இயக்குவதே ரொம்ப கஷ்டமாகிவிடும். இத்தகைய ஓர் மிக முக்கியமான அம்சத்தை மோட்டார்சைக்கிள்களில் நம்மால் காண முடியாது.

பைக்குகளில் வழங்கப்படும் அனைத்து கியர்களும் முன்னோக்கி செல்வதற்கான கியர்களாக மட்டுமே இருக்கும். ஒருவேளை பைக்குகளுக்கு ரிவர்ஸ் கியர் தேவைப்படாதோ என நினைத்துக் கொள்ள வேண்டாம். ரிவர்ஸ் கியர் மோட்டார்சைக்கிள்களில் இருக்கும் எனில் சாய்வான பாதைகளில் பின்னோக்கி செல்ல அது மிகுந்த உதவியாக இருக்கும்.
இருந்தும் பைக்குகளில் ரிவர்ஸ் கியர் வசதி வழங்கப்படுவதில்லை. இத்தகைய கஞ்சத் தனத்திற்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணமே, காலால் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்றுவிட முடியும் என்பதுதான். கார் மற்றும் லாரிகளை பின்னோக்கி செல்ல வைக்க வேண்டும் எனில் ரிவர்ஸ் கியர் கட்டாயம் தேவைப்படும்.

இது இல்லை எனில் இரண்டுக்கும் அதிகமானோர் சேர்ந்து வாகனத்தை பின் நோக்கி தள்ள வேண்டி இருக்கும். ஆனால், பைக்கில் அப்படி இல்லை, வெறும் கால்களைக் கொண்டே நகர்த்தி சென்றுவிட முடியும். பெரும்பாலான மோட்டார்சைக்கிள்களின் எடைக் குறைவு என்பதால் இதை செய்வது மிக சுலபம்.
அதேவேளையில், பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஹேண்டில் பார்கள் ரிவர்ஸின் அவசியத்தை போக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக மிகவும் நெருக்கமான பாதைகளில்கூட முழுமையாக ஹேண்டில் பாரை திருப்பி வாகனத்தை வெளியேற்றிவிட முடியும். இந்த காரணத்தினாலேயே மோட்டார்சைக்கிள்களில் ரிவர்ஸ் கியருக்கான அவசியம் இல்லாமல் போகியுள்ளது.

அதேவேளையில், ஹோண்டா கோல்டு விங் போன்ற பெரிய உருவம் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ரிவர்ஸ் அம்சம் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், கார்களில் வழங்கப்படுவதைப் போல கியர் வாயிலாக ரிவர்ஸ் செய்வதைப் போல் அந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்காது. தனி சிஸ்டமாக (Unique Button) மட்டுமே வழங்கப்பட்டிருக்கும்.
ஹோண்டு கோல்டு விங் பைக்கை தனி ஆளாக கால்களைக் கொண்டு ரிவர்ஸ் செய்வது என்பது சாத்தியமற்றது. எனவேதான் இந்த பெரிய உருவம் டூர் ரக பைக்கில் ரிவர்ஸ் வசதி தனி அம்சமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. சிறிய பட்டனைத் தட்டினால் வாகனம் பின்னோக்கி நகர தொடங்கும்.

அதேவேளையில், முன்னோக்கி செல்லும்போது கிடைக்கும் வேகத்தை ரிவர்ஸின்போது பெற்றுக் கொள்ள முடியாது. மிக மிக குறைந்தபட்ச வேகத்தில் மட்டுமே ரிவர்ஸின்போது வாகனம் இயங்கும். ஓர் நபர் சற்று வேகமாக நடந்து செல்லும் வேகத்திலேயே பைக் பின்னோக்கி நகரும். போதுமான அளவு பேலன்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைவான வேகத்தில் செல்லும் வகையில் அது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சில முன்னணி நிறுவனங்கள் தங்களின் விலையுயர்ந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள்களில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மோட்டாரையே பின்னோக்கி செல்வதற்கான மோட்டாராக பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்திருக்கின்றன. இதே மோட்டார்களை கொண்டு குறைவான தூரத்திற்கு முன்னோக்கி செல்லவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். டிராஃபிக் நிறைந்த சாலைகளில் உதவும் விதமாக இத்தகைய அம்சம் கோல்டு விங் போன்ற டூரர் ரக மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்படுகின்றது.
இந்த வசதியைக் கொண்டு கி.மீட்டர்., கணக்கில் வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இந்த ரிவர்ஸ் வசதி கியரில் வழங்கப்படாமல், தனி பட்டன் வாயிலாக மட்டுமே வழங்கப்படும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெட்ரோல் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களில் இந்த ரிவர்ஸ் வசதி இன்றைய நவீன கால எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் மிக சாதாரணமான ஓர் வசதியாக வழங்கப்படுகின்றது.
மலிவு விலை எலெக்ட்ரிக் டூ-வீலர்களில்கூட இந்த வசதி இருப்பதை நம்மால் காண முடிகின்றது. எலெக்ட்ரிக் வாகனங்களின் மின்சார மோட்டார்களை ரிவர்ஸில் இயங்கச் செய்ய வைப்பது மிகவும் சுலபமான ஒன்று என்பதால் இந்த வசதி மிக சரளமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் மோட்டார்களில் மின்சாரத்தின் துருவத்தை மாற்றி அமைத்தாலே அது ரிவர்ஸில் இயங்கத் தொடங்கும். ஆனால், எரிபொருளில் இயங்கும் மோட்டாரில் ரிவர்ஸில் இயங்கச் செய்ய வேண்டும் எனில் மிகப் பெரிய வேலையை நாம் செய்ய வேண்டி இருக்கும். மேலும், கூடுதல் முக்கிய பாகங்களை சேர்க்க வேண்டி இருக்கும். இதனால், டூ-வீலர்களின் விலை காஸ்ட்லியானதாக மாறிவிடும். இதனைத் தவிர்க்கும் பொருட்டும் பைக்குகளில் ரிவர்ஸ் கியர் வசதி தவிர்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









