ஸ்கிராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவிற்கு ஏற்றவை ஏன்? இதோ டாப் 5 முக்கிய காரணங்கள்!
சமீப காலமாக இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஸ்கிராம்ப்ளர் வகை டூ-வீலர்களை முன்னணி தயாரிப்பாக விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வகை வாகனம் இந்திய சாலைகளுக்கு உகந்தவையாகப் பார்க்கப்படுகின்றன.
எந்தெந்த வகையில் ஸ்கிராம்ப்ளர் ரக இருசக்கர வாகனம் இந்தியாவிற்கு உகந்தவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, இந்தியாவிற்கு ஸ்கிராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள்கள் ஏற்றவை என்று குறிப்பிடுவதற்கான டாப் ஐந்து முக்கிய காரணங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளின் தோற்றம்: இது ரெட்ரோ தீமில் இருக்கும். காலத்தால் அழிக்க முடியாத ஓர் தோற்றமே ரெட்ரோ தீம் தோற்றம் ஆகும். இந்த லுக்கை அடிப்படையாகக் கொண்டவையே ஸ்கிராம்ப்ளர் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். இதற்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது என கூறலாம்.
கண்ணீர் துளி போன்ற வடிவம் கொண்ட ஃப்யூவல் டேங்க், வட்ட வடிவ ஹெட்லைட் என ஏகப்பட்ட அம்சங்கள் பைக்கின் ரெட்ரோ லுக்கை தூக்கி நிறுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். நாட்டில் பலதரப்பட்ட ஸ்கிராம்பளர் வகை பைக்குகள் விற்பனையில் உள்ளன. அத்தனையும், இந்த பேசிக் வடிவமைப்பைக் கொண்டே வித்தியாசமான ஸ்டைலில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவையவை அவற்றிற்கான தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

கரடு முரடான சாலைகளை கையாளும் திறன்: ஸ்கிராம்ப்ளர் பைக்குகள் ரெட்ரோ-தீமைக் கொண்டிருக்கின்றன. இதன் தோற்றத்தைப் போலவே திறனும் நம்மை மெய்சிலிர்க்க செய்யும் வகையிலேயே இருக்கின்றது. இந்த பைக்குகளால் இந்தியாவின் மிகக் கடுமையான சாலைகளை அசால்ட் செய்ய முடியும். ஆமாங்க, ஆஃப்-ரோடுகளை மிக நேர்த்தியாக சமாளிக்கும் வசதிகள் மற்றும் அம்சங்களை இந்த வகை பைக்குகள் மிக அதிகளவில் தாங்கியிருக்கும். இதனால்தான் இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்ற டூ-வீலர்களாக அவை பார்க்கப்படுகின்றன.
எளிமையான உடல் பாகங்கள்: பார்க்க மிகவும் அட்டகாசமாக காட்சியளிக்கும் இந்த வாகனங்கள் மிகவும் எளிமையானதாகவும், ரிப்பேர் செய்ய ஈசியானதாகவும் இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, மிக சுலபமான இயக்கத்திற்கும் அவற்றின் எளிமையான தோற்றமே உதவியாக இருக்கின்றன. மிக முக்கியமாக இந்த பாகங்களை கழட்டி, மாட்டுவது மிகவும் சுலபமானது.

மாடிஃபிகேஷன் செய்ய உகந்தவை: மாடிஃபிகேஷனை விரும்பாதவர்களே இருக்க முடியாது. இந்த பைக்குகள் இவற்றிற்கு ஏற்றவையாக இருக்கின்றன. இதனால்தான் இந்தியர்கள் மத்தியிலும் இந்த பைக்குகளுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. மாடிஃபிகேஷன் வாயிலாக இந்த பைக்கை மிக மிக அழகானதாக மாற்றிக் கொள்ள முடியும்.
நகர பயன்பாடு மற்றும் நீண்ட தூர சவாரிகளுக்கு ஏற்றது: குறிப்பாக, ஸ்கிராம்ப்ளர் வகை பைக்குகள் நீண்ட தூர டிராவல்களுக்கு ஏற்றவையாக இருக்கின்றது. ஊர் விட்டு ஊர் போகுதல், லாங் டிரைவ் செல்லுதல் உள்ளிட்டவற்றிற்கு மிக மிக உகந்த பைக்குகளாக ஸ்கிராம்பளர் ரக பைக்குகள் இருக்கின்றன.
இதற்கான அம்சங்களை மிக தாராளமாக ஸ்கிராம்ப்ளர் பைக்குகள் கொண்டிருப்பதால், இது சாத்தியமாக உள்ளது. சஸ்பென்ஷன் தொடங்கி இருக்கை வரை என அனைத்தும் லாங் டிரைவிற்கு ஏற்றவையாகவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் நகர பயன்பாட்டிற்கும் உகந்தவையாக இருக்கின்றன. இதனால்தான் சேல்ஸில் இந்த வகை பைக்குகள் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கிராம்ப்ளர் வகை பைக்குகள் இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. இதுவும் இதன் சேல்ஸை இரட்டிப்பாக்கி இருக்கின்றது என்றே கூறலாம். நாட்டில் தேவை அதிகரித்திருப்பதனாலேயே இந்த பிரிவை மையப்படுத்தி ராயல் என்பீல்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் புதிய பைக்குகளைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









