லாபமே வேண்டாம்னு நினைக்குறாங்களா! இவ்ளோ கம்மி விலைக்கு 125 சிசி ஸ்கூட்டரை எப்படி தர முடியும்? ஹீரோவால முடியும்
"லாபமே வேண்டாம்னு நினைக்கிறாங்களா" என நம்மையே யோசிக்கச் செய்யும் அளவிற்கு மிக குறைவான விலையில் ஓர் ஸ்கூட்டரை இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), மிக மிக குறைவான விலையில் ஸ்கூட்டர் ஒன்றை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடலாக டெஸ்டினி 125 (Hero Destini 125) இருக்கின்றது.

இதிலேயே புதிய தேர்வை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஹீரோ டெஸ்டினி 125 பிரைம் (Hero Destini 125 Prime) எனும் வேரியண்டையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. இதற்கு நிறுவனம் மிக மிக குறைவான விலையை நிர்ணயம் செய்திருக்கின்றது.
அதிகபட்சமாக ரூ. 71,499 என்கிற விலையையே இந்த தேர்விற்கு நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பெரிய அளவில் சிறப்பு வசதிகள் இல்லாத ஆரம்ப நிலை தேர்வாகவே டெஸ்டினி 125 பிரைம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

அதாவது, ஆடம்பரங்கள் இல்லா ஓர் தேர்வாக இது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. குரோம் பூசப்பட்ட கண்ணாடிகளுக்கு பதிலாக வழக்கமான கண்ணாடிகளும் (உடல் என்ன நிறத்தில் இருக்கின்றதோ அதே நிறத்திலேயே கண்ணாடிகள் இருக்கும்), ஒற்றை துண்டு அமைப்புடைய கிராப் ரெயில், ஒற்றை நிற இருக்கை ஆகியவையே புதிய தேர்வில் இடம் பெற்றிருக்கின்றன.
இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் மிகவும் பேசிக்கான ஓர் தேர்வாகவே பிரைம் காட்சியளிக்கின்றது. இருப்பினும், கணிசமான அளவு நவீன கால அம்சங்களை இந்த ஸ்கூட்டரில் நம்மால் பார்க்க முடிகின்றது. அந்தவகையில், ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், நடத்தர டிஜிட்டல் ரக இன்ஸ்டூரமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், ப்ளூடூத் இணைப்பு, செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் அதில் வழங்கப்படவில்லை. இதுபோன்று இன்னும் பல அம்சங்களை அது விலை குறைவாக வர வேண்டும் என்பதற்காக இழந்திருக்கின்றது. அதேநேரத்தில் இருக்கைக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜில் சார்ஜிங் போர்ட் மற்றும் லைட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆகையால், இது மலிவு விலை தேர்வு என்கிற உணர்வு நமக்கு ஏற்படாது. மேலும், மேலே குறிப்பிட்ட அம்சங்களை மட்டுமே இந்த ஸ்கூட்டர் தேர்வு இழக்கவில்லை, அது அலாய் வீலையும் இழந்திருக்கின்றது. அதற்கு பதிலாக 10 அங்குல ஸ்டீல் வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் உள்ளிட்டவை சிறந்த சஸ்பென்ஷனுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொருத்தவரை இரு வீல்களிலும் டிரம் பிரேக் அம்சம் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று பல விஷயங்களில் மாறுபட்ட மற்றும் குறைவான அம்சங்களைக் கொண்டதாக புதிய டெஸ்டினி 125 பிரைம் உள்ளது.
மோட்டாரை பொருத்தவரை 124.6 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 9 பிஎச்பி பவரையும், 10.36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இரண்டு விதமான வண்ண தேர்வுகளில் டெஸ்டினியின் புதிய தேர்வை வாங்கிக் கொள்ள முடியும். அவை பேர்ல் சில்வர் ஒயிட் மற்றும் நெக்ஸஸ் ப்ளூ நோபல் ரெட் ஆகியவை அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மலிவு விலை இருசக்கர வாகனங்களுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம். அதேவேளையில், அது சற்று சிறப்பு வசதிகளை அதிகம் கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலேயே புதிய டெஸ்டினி 125 பிரைம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








