மீண்டும் ஹீரோ கரீஸ்மா!! செம்ம... பைக் இப்படிதான் இருக்குமா! ஆர்15 -லாம் காலியாக போகுது
கரீஸ்மா, இந்த பெயரை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டீர்கள். ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் இந்த மோட்டார்சைக்கிள் ஒரு சமயத்தில் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்தது. ஒரிஜினல் கரீஸ்மா பைக்கின் தோற்றம் இந்தியர்கள் பலரை வெகுவாக கவர்ந்திழுத்தது. இருப்பினும், அதன்பின் வெளிவந்த கரீஸ்மா ஆர் மற்றும் கரீஸ்மா இசட்.எம்.ஆர் மாடல்களின் டிசைன் பாராட்டப்படவில்லை.
தொழிற்நுட்ப வசதிகள் அவ்வளவாக இல்லாததும் ஹீரோ கரீஸ்மாவின் தோல்விக்கு காரணம் என சொல்லலாம். ஹீரோ நிறுவனம் தைரியத்தை வரவழைத்து கொண்டு மீண்டும் கரீஸ்மா பைக்கை சந்தையில் களமிறக்க தயாராகி வருகிறது. சமீபத்தில் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் புதிய புரோ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள்களை வடிவமைத்து வருகிறது.

இதில் சில பைக்குகள் முழுக்க முழுக்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், சில தயாரிப்பு வாகனங்கள் ஹீரோ-ஹார்லி கூட்டணியில் உருவாகுகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்பின் முயற்சியில் உருவாக்கப்பட்டு வரும் புதிய மோட்டார்சைக்கிள் தான் புதிய தலைமுறை கரீஸ்மா ஆகும். இதனை கரீஸ்மா இசட்.எம்.ஆர் என அழைக்க ஹீரோ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பழைய கரீஸ்மாவிற்கும், புதிய கரீஸ்மாவிற்கும் பெயரிலும், பாடி ஸ்டைலிலும் மட்டுமே ஒத்து போகும். மற்றப்படி, தொழிற்நுட்ப அம்சங்களிலும், பாடி கிராஃபிக்ஸிலும் மாடர்ன் டச் இருக்கும். முக்கியமாக, முற்றிலும் புதிய பிளாட்ஃபாரத்தில் புதிய கரீஸ்மா இசட்.எம்.ஆர் பைக் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இதுவரையில் எந்த ஹீரோ பைக்கிலும் இல்லாத புதிய 210சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் புதிய கரீஸ்மாவில் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகப்பட்சமாக 25 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என கூறப்படும் இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படலாம். முந்தைய கரீஸ்மா பைக்குகள் 223சிசி ஏர்-கூல்டு என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டன. அதிகப்பட்சமாக 20 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக இந்த என்ஜின் இருந்தது.
முக்கிய ஹைலைட்டாக, சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் புதிய கரீஸ்மா இசட்.எம்.ஆர் பைக்கில் வழங்கப்படும். டிஸ்க் பிரேக்குகளையும் எதிர்பார்க்கலாம். இவை வழங்கப்பட்டால், நிச்சயமாக சஸ்பென்ஷனுக்கு யுஎஸ்டி ஃபோர்க்குகள், ரைடு-பை-வயர் தொழிற்நுட்பம், ஸ்லிப்பர் க்ளட்ச் போன்றவையும் பைக்கில் இடம்பெறும். இவற்றுடன் தற்கால மாடர்ன் பைக்குகளில் உள்ளதை போன்று, ப்ளூடூத்-சார்ந்த இணைப்பு வசதிகள், எல்இடி விளக்குகள் மற்றும் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் ஆகியவையும் புதிய கரீஸ்மாவில் இருக்கும்.
அத்துடன் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை எதிர்பார்க்கிறோம். விற்பனைக்கு வரும் பட்சத்தில் புதிய ஹீரோ கரீஸ்மா பைக்கிற்கு பஜாஜ் பல்சர் 250, ஜிக்ஸெர் 250 மற்றும் டோமினார் 250 உள்ளிட்டவை போட்டியாக விளங்கும். இவற்றை காட்டிலும் சற்று குறைந்த சிசி என்ஜினை தான் கரீஸ்மா பெற்றுவர உள்ளது என்றாலும், விலையினை மேற்கூறப்பட்ட 250சிசி பைக்குகளுக்கு இணையாகவே எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கரீஸ்மா பெயரை பயன்படுத்தி புதியதொரு ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவது ஹீரோவின் மிக சரியான காய் நகர்த்தல் ஆகும். மேற்கூறப்பட்ட 250சிசி பைக்குகள் மட்டுமின்றி, யமஹா ஆர்15 பைக் வாங்கும் ஆசையில் இருப்போரையும் புதிய க்ரீஸ்மா ஈர்க்கலாம். ஏனெனில் இரண்டிற்கும் இடையே விலையில் பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால் யமஹா ஆர்15 ஆனது 155சிசி பைக் ஆகும்.


Click it and Unblock the Notifications








