பல்சர் பைக்குகள் இருக்கும் தைரியத்தில் ஓவராக வாய் விடும் பஜாஜ்!! ஹீரோ கரீஸ்மா பெரிய சக்ஸஸ் ஆக போகுது!
ஹீரோ கரீஸ்மா (Hero Karizma) மோட்டார்சைக்கிள் ஓர் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான வேலைகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஹீரோ கரீஸ்மாவின் மறு வருகையை கிண்டல் செய்யும் விதமாக ஒரு பதிவை இணையத்தில் பதிவிட்டுள்ளது. அது என்ன பதிவு? அதன் மூலம் பஜாஜ் என்ன சொல்ல வருகிறது? வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் என சொன்னால், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் ஹீரோ பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுபவை தனி கணக்கு.

இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டாக இருப்பதினாலேயே உலகளவில் மிக பெரும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப்பை சொல்லலாம். சந்தையில் இந்த ஆதிக்கத்தை தொடர, தொடர்ந்து புதிய 2-வீலர்களை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் ஹீரோ உள்ளது. அதேநேரம், முன்பு பிரபலமாக இருந்து பின்னர் விற்பனை நிறுத்தப்பட்ட பைக்குகளையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரலாம் என யோசித்த போது ஹீரோவுக்கு கிளிக் ஆன பைக் கரீஸ்மா ஆகும்.
ஹீரோ கரீஸ்மா பைக்கை பற்றி உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். 2000ஆம் ஆண்டுகளின் துவக்கங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று. 'கரீஸ்மா' என்ற பெயர் தான் இந்த பைக்கை நாடு முழுவதும் விளம்பரப்படுத்தியது என சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட பைக்கை தற்காலத்திற்கு ஏற்ப புத்துணர்ச்சியான தோற்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் தயாராகி வருகிறது.

புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் அறிமுக தேதி கூட 2023 ஆகஸ்ட் 29 என அறிவிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில், சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் வாகனத்தை விளம்பரப்படுத்தும் வகையில் டீசர்கள் வெளியிடப்படுவது போல், கரீஸ்மா பைக் தொடர்பான டீசர்களை சமீப வாரங்களாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டு வருகிறது. இதன்படி சமீபத்தில், டீசர் ஒன்றில் புதிய கரீஸ்மாவின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வெளிக்காட்டப்பட்டு இருந்தது.
அந்த டீசரை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள். புதிய கரீஸ்மா பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 188கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என்பதை மறைமுகமாக கூறுவதுபோல், டீசரில் புதிய ஹீரோ கரீஸ்மாவின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் '188 kmph' என காட்டப்பட்டு இருந்தது. மேலும், "ரைடு யுவர் லெஜண்ட்" என்ற வாக்கியங்களும் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் தெரிவதுபோல் காட்டப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் திரெட்டில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. பஜாஜ் பல்சர் என்.எஸ்200 பைக்குடன் இருக்கும் அந்த பதிவில், "தி ஒரிஜினல் லெஜண்ட் கில்லர்" என குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் நிற்காமல், "நான் எதை பற்றி சொல்கிறேன் என தெரிகிறதா?" எனவும் பஜாஜ் ஆட்டோ கேள்வி எழுப்பியுள்ளது. இந்த பதிவு ஆனது பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பைக்குகளுக்கான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

'லெஜண்ட்' என்ற வார்த்தையை பஜாஜ் குறிப்பிட்டு இருக்கும்போதே தெரிந்துவிட்டது, அது ஹீரோ மோட்டோகார்பையும், அதன் புதிய கரீஸ்மா பைக்கையும் தான் குறிப்பிடுகிறது என. இவ்வாறு வேறு 2-வீலர் நிறுவனத்தை பஜாஜ் ஆட்டோ கிண்டல் செய்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல. முன்னதாக, ராயல் என்பீல்டின் புதிய பைக்கை கலாய்க்கும் விதமாக, "யானைக்கான தருணங்கள்" என இணையத்தில் ஒரு பதிவை பஜாஜ் வெளியிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யார் தரமான தயாரிப்பை வழங்குவது என இரு நிறுவனங்களுக்கு இடையே போட்டி வந்தால் ஆரோக்கியமானதே. ஆனால் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வார்த்தைகளில் மறைமுகமாக தாக்கி பேசுவது சரியானதாக தெரியவில்லை. ஹீரோ கரீஸ்மாவை பஜாஜ் ஆட்டோ கலாய்ப்பதற்கு முக்கிய காரணம், பஜாஜ் பல்சர் 220 மற்றும் பல்சர் ஆர்.எஸ் என இரு விதமான பல்சர் பைக்குகளுக்கு போட்டியாக கரீஸ்மா அறிமுகப்படுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications









