ஹீரோ நிறுவனம் இப்படியொரு ஸ்கூட்டரை களமிறக்க போகுதா! யமஹா கூடாரமே கலகலத்து போய் கெடக்குதாம்!
இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). இந்த நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. எனவேதான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் விற்பனையில் சாதிக்க முடிகிறது.
இந்த சூழலில், புதிய ஸ்கூட்டர் டிசைன் ஒன்றுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் காப்புரிமை (Patent) பெற்றுள்ளது. இது மேக்ஸி ரகத்தை சேர்ந்த ஸ்கூட்டர் (Maxi-scooter) ஆகும். இதன் மூலம் புதிய பிரீமியம் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாராகி வருகிறது என்பது நமக்கு தெரிய வருகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விண்ணப்பித்துள்ள காப்புரிமைக்கான புகைப்படங்களை பார்க்கும்போது மற்றொரு விஷயம் நமக்கு தெளிவாகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் இருந்து இதற்கு முன்பாக இப்படியொரு ஸ்கூட்டரை நாம் பார்த்தது கிடையாது என்பதுதான் அது. இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் முன் பக்கம் ஸ்போர்ட்டியாக இருக்கிறது.
முன் பகுதியில் ட்யூயல் ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரைடர் அமரும் இருக்கையை காட்டிலும், பில்லியன் ரைடர் அமரும் இருக்கை சற்று உயரமாக இருக்கிறது. மேலும் பொருட்களை வைப்பதற்கான பெட்டியை பொருத்த கூடிய வகையிலான பின் பக்க க்ராப் ரெயிலும் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் வழக்கமான ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் என்ன இன்ஜினை வழங்கும்? என்பது தெளிவாக தெரியவில்லை. இந்தியாவில் இந்த ரகத்தில் விற்பனை செய்யப்படும் மேக்ஸி ஸ்கூட்டரில்களில் பொதுவாக 150 சிசி இன்ஜின் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தால், யமஹா ஏரோக்ஸ் 155 (Yamaha Aerox 155) ஸ்கூட்டருடன் போட்டியிடும். பொதுவாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்படும் தயாரிப்புகள் அனைத்தும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும்.
வாகன கண்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்படும் தயாரிப்புகளை கூட ஒரு சில நிறுவனங்கள் விற்பனைக்கு கொண்டு வருவதில்லை. அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விடுகின்றன. அதேபோல்தான் காப்புரிமை பெறப்படும் தயாரிப்புகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பது சந்தேகம்தான். எனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த மேக்ஸி ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், 150 சிசி திறன் கொண்ட இன்ஜின் வழங்கப்படலாம். எனவே இந்த தயாரிப்பானது, யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டருக்கு விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








