மாதந்தோறும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் பைக் ஆச்சே... ஸ்பிளெண்டரின் விலையை உயர்த்தும் ஹீரோ!!
இந்தியாவின் பைக் என்று ஹீரோ ஸ்பிளெண்டரை சொன்னால் அதில் மிகையில்லை. அந்த அளவிற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இயங்கி கொண்டிருக்கும் இந்த பைக்கின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக அதிர்ச்சிக்கர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி, உலகளவில் மிக பெரும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் ஆகும். மாதந்தோறும் சளைக்காமல் சராசரியாக 3 இலட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பை பெற்று தந்துள்ள தயாரிப்பு, ஸ்பிளெண்டர் ஆகும். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இன்னும் சொல்லப்போனால், ஸ்பிளெண்டர் அளவிற்கு இந்திய மோட்டார்சைக்கிள் வரலாற்றில் வேறெந்த மோட்டார்சைக்கிளுக்கும் வரவேற்பு கிடைத்ததில்லை. இருப்பினும், மற்ற 2-வீலர்களை போன்று ஸ்பிளெண்டரின் விலைகளையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஹீரோ நிறுவனத்திற்கு ஏற்படுகிறது. அந்த வகையில் ஸ்பிளெண்டர் பைக்கின் விலையை வருகிற ஏப்ரலில் மீண்டும் அதிகரிக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.
ஸ்பிளெண்டர் பைக் மட்டுமின்றி, பிளஷர்+ உள்பட தனது அனைத்து விதமான 2-விலர்களின் விலைகளையும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்த ஹீரோ மோட்டோகார்ப் முடிவெடுத்து உள்ளதாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த விலை உயர்வானது ஹீரோ 2-வீலர்களின் தற்போதைய விலைகளில் 2 சதவீதமாக இருக்கும். வழக்கம்போல் இந்த விலை அதிகரிப்பும் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன உற்பத்தி பாகங்களுக்கான செலவை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது.

குறிப்பாக, பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்டம் மற்றும் ரியல்-டிரைவ்-எமிஷனுக்காக குறிப்பிட்ட தொகையை ஹீரோ மோட்டோகார்ப் செலவு செய்துள்ளது. அதனை மனதில் வைத்தும் இந்த விலை உயர்வை கொண்டுவரும் முடிவை ஹீரோ மோட்டோகார்ப் கையில் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் பெரியதாக பாதிக்கப்படாத வண்ணம் கவர்ச்சிக்கரமான நிதி தேர்வுகளை தொடர்ந்து வழங்க ஹீரோ மோட்டோகார்ப் முயற்சிக்கும் என்பது உறுதி.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் குறைக்கடத்தி பற்றாக்குறை பிரச்சனைகளுக்கு பிறகு சமீப காலமாக தான் இந்திய சந்தையில் இருசக்கர வாகன விற்பனை மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இப்படிப்பட்ட தற்போதைய நிலையில் தனது வாகனங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவின் நம்பர்.1 2-வீலர் பிராண்ட் உள்ளது. இதற்கேற்ப மறுப்பக்கம் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்டம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து கடைசியாக சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என 2 விதமான வேரியண்ட்களில் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் டிரம் பிரேக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.83,368 ஆகவும், டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.87,268 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகளும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளன. புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கில் ஹை-இண்டென்சிட்டி ஹெட்லைட்டிற்கு பதிலாக எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு-டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டரும் இந்த பைக்கில் புதியதாக இடம்பெற்றுள்ளது. இவை மட்டுமின்றி, யுஎஸ்பி சார்ஜர், சைடு ஸ்டாண்டு போடப்பட்டு இருந்தால் என்ஜின் தானாக ஆஃப் ஆகும் வசதி உள்ளிட்டவையும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








