என்னதான் புதுசு புதுசா பைக் கம்பெனி வந்தாலும் மக்கள் ஹீரோவை தான் விரும்புறாங்க! ஏன் தெரியுமா?
ஹீரோ நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து ஒரே ஆண்டில் 7 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. டூவீலர் துறையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிறுவனமான ஹீரோ நிறுவனத்தின் கடந்த மே மாத விற்பனை குறித்த விபரங்களை விரிவாகக் காணலாம் வாருங்கள்.
ஜூன் மாதம் பிறந்துள்ள நிலையில் கடந்த மே மாத விற்பனை விபரங்களை ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனங்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹீரோ நிறுவனத்தின் விற்பனை விபரம் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி ஹீரோ நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 5,19,474 வாகனங்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளது.

இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மொத்தம் 4,86,704 வாகனங்களை மட்டுமே தயாரித்திருந்தது. தற்போது கூடுதலாக 32,770 வாகனங்களைத் தயாரித்து 6.73 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் உள்நாட்டு விற்பனையில் வளர்ச்சியையும் வெளிநாட்டிற்கான ஏற்றுமதியில் பெரும் வீழ்ச்சியையும் இந்நிறுவனம் சந்தித்துள்ளது.
மொத்தம் செய்யப்பட்ட விற்பனையில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதில் மோட்டார்சைக்கிள் பிரிவில் 4,89,336 வாகனங்களும் ஸ்கூட்டர் பிரிவில் 30,138 வாகனங்களும் விற்பனையாகியுள்ளது. இதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனை என பிரித்தால் உள்நாட்டில் மொத்தம் 5,08,839 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது இதுவே வெளிநாட்டிற்கு மொத்தம் 11,165 வாகனங்கள் ஏற்றுமதி ஆகி உள்ளது.

அந்த மே மாத விற்பனையை அதற்கு முந்தியே மாதமான ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய வளர்ச்சியை ஹீரோ நிறுவனம் சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 3,96,107 வாகனங்களைத் தான் விற்பனை செய்திருந்தது அதை ஒப்பிடும்போது 1,23,367 வாகனங்கள் இந்த மே மாதம் அதிகமாக விற்பனையாக உள்ளது இது 31.14 சதவீத வளர்ச்சியாகும்.
ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 12.54 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது அதே நேரம் வெளிநாட்டுக்கான ஏற்றுமதியில் 44.83 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
டூவீலர் விற்பனையில் ஹீரோ நிறுவனம் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறது .இந்நிறுவனத்தின் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளதால் அதிகமான மக்கள் இந்த நிறுவனத்தின் டூவீலர்களை வாங்கிக் குவிக்கின்றனர். இந்நிலையில் ஹீரோ நிறுவனம் புதிதாக சில டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த 2023 ஆம் ஆண்டு ஹீரோ நிறுவனம் புதிய ஹீரோ கரீஷ்மா 210 சிசி பைக்கையும் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160r என்ற பைக்கையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இதுபோக ஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் புதிய கிளாமர் ஆகிய பைக்குகளையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் 125 சிசி செக்மெண்ட் பைக்குகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹீரோ நிறுவனம் தவிர்க்க முடியாத ஒரு வளர்ச்சியை பெற்றுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய மவுசு இருக்கிறது. குறிப்பாகக் கிராமப்புற பகுதிகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிகம் நம்புகின்றனர். தற்போது டூவீலர் துறையில் அதிகமாக விற்பனையைச் செய்யும் நிறுவனம் என்றால் ஹீரோ தான்.


Click it and Unblock the Notifications








