ஹீரோ மோட்டோகார்பை சேல்ஸில் தோற்கடிக்க இனி பொறந்துதான் வரணும்!! நாட்டு மக்களை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கு!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் கடந்த பல வருடங்களாக முதலிடத்தை வகித்து வருகிறது. குறிப்பாக, ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக்கிற்கு விளம்பரமே தேவையில்லை. அந்த அளவிற்கு நாடு முழுவதும் பிரபலமாகி உள்ள மோட்டார்சைக்கிள் ஸ்பிளெண்டர் ஆகும்.

இதனாலேயே, ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2023 செப்டம்பர் மாதத்திலும் சுமார் 3,19,692 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் மட்டுமின்றி, இந்தியாவில் ஒட்டுமொத்த 2-வீலர்களிலும் கடந்த மாதத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டது ஸ்பிளெண்டர் மட்டுமே ஆகும்.
அதுவே, 2022 செப்டம்பர் மாதத்தில் 2,90,649 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை ஆனது 9.99% அதாவது, 29 ஆயிரம் யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஸ்பிளெண்டருக்கு அடுத்து கடந்த மாத ஹீரோ 2-வீலர்கள் விற்பனையில் 2வது இடத்தில் பெரிய இடைவெளி உடன் எச்.எஃப் டீலக்ஸ் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் எண்ணிக்கை 84,118 ஆகும். அதுவே, 2022 செப்டம்பரில் 93,596 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தோமேயானால், 2022 செப்டம்பரை விட கடந்த செப்டம்பரில் 9,478 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த வரிசையில், 3வது மற்றும் 4வது இடங்களில் ஹீரோ பேஷன் மற்றும் கிளாமர் பைக்குகள் உள்ளன. இதில் பேஷன் பைக்குகள் கடந்த மாதத்தில் 36,230 யூனிட்களும், கிளாமர் பைக்குகள் 35,578 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2022 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில், இதில் பேஷன் பைக்குகளின் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை என்றாலும், கிளாமர் பைக்குகள் 2,688 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

5வது மற்றும் 6வது இடங்களில் ஹீரோ மோட்டோகார்பின் ஸ்கூட்டர்களான டெஸ்டினி 125 மற்றும் பிளஷர் உள்ளன. இதில் டெஸ்டினி ஸ்கூட்டரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 15,270 மற்றும் பிளஷரின் விற்பனை எண்ணிக்கை 14,829 ஆகும். ஆனால், 2022 செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
7வது இடத்தில் ஹீரோவின் சமீபத்திய அறிமுகமான ஸூம் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 6,529 ஸூம் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 8வது இடத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் உள்ளது. எக்ஸ்ட்ரீம் பைக்குகள் 160சிசி மற்றும் 200சிசி என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இவை இரண்டும் மொத்தமாக சேர்த்து கடந்த மாதத்தில் 3,290 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாதத்திற்கு மாதம் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இத்தனைக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் ஹீரோ நிறுவனம் சமீபத்தில்தான் நுழைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ கரீஸ்மாவின் டெலிவிரி சமீபத்தில்தான் துவங்கப்பட்டுள்ளன. ஆதலால், ஹீரோவின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









