பணக்காரர்களுக்காக ஹீரோ நிறுவனம் செய்த காரியம்! மாருதி சுஸுகி நிறுவனத்தை அப்படியே காப்பி அடிச்சிருக்காங்க!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் புதிய அதிநவீன ஷோரூம் ஒன்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. இது பிரீமியம் டூவீலர் ஷோரூம் (Premium Two-wheeler Showroom) ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தகைய ஷோரூம் ஒன்றை திறந்திருப்பது இதுவே முதல் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹீரோ ப்ரீமியா (Hero Premia) என்ற பெயரில் இந்த ஷோரூம்கள் அழைக்கப்படும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரீமியம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்த ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதுதவிர விடா (Vida) மற்றும் ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) தயாரிப்புகளும் இந்த ஷோரூம் மூலமாக விற்பனை செய்யப்படும். ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 (Harley Davidson X440) அறிமுக நிகழ்ச்சியின்போது, இதுபோன்ற பிரீமியம் ஷோரூம்களை திறக்கும் தங்களது திட்டம் குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பேசியிருந்தது.
இதை தொடர்ந்து புதிய ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் (Hero Karizma XMR) பைக் அறிமுக நிகழ்ச்சியின்போது, இதுபோன்ற பிரீமியம் ஷோரூம்கள் குறித்த விரிவான தகவல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டது. இறுதியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரீமியம் ஷோரூம் திட்டம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த புதிய அதிநவீன ஷோரூம்களின் அறிமுகத்திற்கு பின்னணி காரணம் ஆகும். தற்போதைய நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் மற்றும் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 (XPulse 200) ஆகிய பைக்குகள் இந்த புதிய ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விடா வி1 (Vida V1) மாடலும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகும். இந்த டூவீலர்கள் அனைத்துமே புதிய ப்ரீமியா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளன.
வரும் காலங்களில் இன்னும் நிறைய பிரீமியம் தயாரிப்புகள் இந்த ப்ரீமியா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அடுத்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இன்னும் நிறைய ஹீரோ ப்ரீமியா ஷோரூம்கள் திறக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் இதுபோன்ற பிரீமியம் ஷோரூம்கள் தனியாக திறக்கப்படுவது இது முதல் முறையல்ல. மாருதி சுஸுகி நிறுவனம் இதுபோன்ற பிரீமியம் ஷோரூம்களை ஏற்கனவே செயல்பாட்டில் வைத்துள்ளது. மாருதி சுஸுகி நெக்ஸா (Maruti Suzuki NEXA) ஷோரூம்களை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.
இது மாருதி சுஸுகி அரேனா (Maruti Suzuki Arena) ஷோரூம்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்டது. மாருதி சுஸுகி நிறுவனம் நெக்ஸா ஷோரூம்களில் பிரீமியம் கார்களையும், அரேனா ஷோரூம்களில் மற்ற கார்களையும் விற்பனை செய்து வருகிறது. இதேபோன்ற முயற்சியைதான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது எடுத்துள்ளது.
இங்கே விடா மற்றும் ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகள் எதற்கு? என்ற சந்தேகம் ஒரு சிலருக்கு எழலாம். அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இவி (EV) பிராண்டுதான் விடா. அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் இந்த விடா பிராண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கூட்டணி (Hero-Harley Partnership) அமைத்து செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே புதிய ப்ரீமியா ஷோரூம்களில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் சேர்த்து, விடா மற்றும் ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








