ஸ்பிளெண்டர் பைக்கால இவ்ளோ உயரத்துக்கு பறக்க முடியுமா? இவரோட இந்த திறமையை பாரட்டியே ஆகவேண்டும்!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மோட்டார்சைக்கிள் (Commuter Motorcycle) மாடல்களில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கும் ஒன்றாகும். எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மைலேஜை தருவதற்கும் இந்த வாகனம் பெயர்போனதாக இருக்கின்றது.
இத்தகைய வாகனத்திலேயே ஓர் இளைஞர் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஸ்டண்ட் செய்யக் கூடிய காட்சிகளே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. ஐந்து டூ-வீலர்களை மைதானத்தில் நிற்க வைத்து, அதை தாவுகின்ற வகையில் அந்த இளைஞர் ஸ்டண்ட் செய்திருக்கின்றார். இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றது.

இளைஞரின் இந்த செயல் பல்வேறு கேள்விகளை ஸ்பிளெண்டர் பைக் லவ்வர்கள் மத்தியில் எழுப்பி இருக்கின்றது. குறிப்பாக, ஸ்பிளெண்டர் பைக் ஸ்டண்ட் செயல்பாடுகளுக்கு உகந்த வாகனமா என்கிற சந்தேகத்தை எழுப்பி இருக்கின்றது. ஆனால், வாகன உலகமோ இந்த டூ-வீலர் துளியளவும் ஸ்டண்ட்டுகளுக்கு ஸ்பிளெண்டர் உகந்த வாகனம் அல்ல என்கின்றது.
வீடியோவில் ஸ்டண்ட் செய்யும் நபர் மிகவும் கைத்தேர்ந்த நபராகத் தெரிகின்றார். அவருக்கு ஏற்கனவே வீலிங் மற்றும் வாகனங்களைத் தாண்ட செய்வதில் அதிக கற்றல் இருக்கும் என்பது தெரிகின்றது. இதனாலேயே அவரால் இந்த செயலை வெற்றிகரமாக செய்ய முடிந்திருக்கின்றது. அதேநேரத்தில் அவர் சற்று சிறிய தவறை செய்திருந்தாலும்கூட மிகப் பெரிய ஆபத்தைச் சந்தித்து இருக்க நேரிட்டிருக்கும்.
அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அதேவேளையில், இந்த ஸ்டண்டின்போது ஸ்பிளெண்டரின் பின் பக்க ஸ்டாப் லைட் உடைந்திருக்கின்றது. இன்னும் சில பாகங்களும் இந்த ஸ்டண்டால் சேதமடைந்திருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. குறிப்பாக, டூ-வீலரின் சஸ்பென்ஷன்கள் மற்றும் வீல்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என யூகிக்க முடிகின்றது.
ஸ்பிளெண்டர் வழக்கமான இயக்கங்களுக்காக மட்டுமே தயார் செய்யப்பட்ட வாகனம் என்பதால் அவற்றால் இதுமாதிரியான உயரம் தாண்டுதலின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாது. ஆகையால், அதன் வீல் மற்றும் சஸ்பென்ஷன்கள் உடைந்து நொறுங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இருப்பினும் ஒரு சிலர் இந்த வாகனத்தில் ஸ்டண்ட் செய்துக் கொண்டே இருக்கின்றனர்.
அந்தவகையிலேயே மஸ்து ரைடர் எனும் இன்ஸ்டா பயனர் ஸ்பிளெண்டரில் ஸ்டண்ட் செய்து அந்த வீடியோவை அவரது கணக்கில் வெளியிட்டு இருக்கின்றார். இளைஞர்களுக்கு அதிக ஃபாலோவர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபடுவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே எந்தவொரு பாதுகாப்பு கருவியையும் பயன்படுத்தாமல் இளைஞர் ஸ்டண்டில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக, தலையில் ஹெல்மெட்கூட அணியவில்லை. இதுபோன்ற ஸ்டண்ட்களை செய்யவே கூடாது என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும். குறிப்பாக, ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு கவசம் இன்றி கட்டாயம் கூடவே கூடாது. நொடிப் பொழுதில் மிகப் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதே வாகன ஸ்டண்டுகள் ஆகும்.
இதனால்தான், போக்குவரத்து விதிகள் வாகன ஸ்டண்டுகளுக்கு எதிராக மிகக் கடுமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், இணையத்தில் வைரலாகும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இதுபோன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபடுவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், தற்போது ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்டண்ட் செய்தவர் மீதும் போலீஸ் நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளைஞரின் திறமை பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும், பொதுவெளியில் இதுமாதிரியான செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. வாகன ஸ்டண்ட், அதில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்ல சுற்றி இருப்பவர்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதனால்தான், தனியார் டிராக்குகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு அங்கே வாகன ஸ்டண்ட்டுகள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. அங்கு பாதுகாப்பு வழிக்காட்டுதல்கள் கட்டாயம் கடைபிடிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








