ஓலா, ஏத்தருக்கு கட்டாயம் ஆப்பு உறுதி.. சென்னையில் விற்பனைக்கு வருகிறது ஹீரோவின் விடா வி1 இ-ஸ்கூட்டர்..
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), நிறுவனம் அதன் விடா வி1 (Vida V1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் சென்னையிலும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), மின்சார இருசக்கர வாகன விற்பனையையும் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக நிறுவனம் விடா (Vida) எனும் புதிய சப்-பிராண்டை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது இந்த பிராண்டின்கீழ் வி1 (V1) எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே ஹீரோ விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது.

இதனையே தற்போது சென்னையில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஹீரோ மோட்டோகார்ப் களமிறங்கி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில், பெங்களூரு, ஜெய்பூர் மற்றும் தலைநகர் டெல்லி ஆகிய நகரங்களிலேயே அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இவற்றின் வரிசையிலேயே விரைவில் சென்னையும் இணைய இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 499 முன் தொகையின்கீழ் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

இப்போதைக்கு இந்த பணிகள் மட்டுமே சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்?, எப்போதில் இருந்து அதன் விற்பனை பணிகள் தொடங்கப்படும்? மற்றும் எப்போது டெலிவரி பணிகள் ஆரம்பிக்கும்? உள்ளிட்ட எந்தவொரு முக்கிய விபரங்களையும் ஹீரோ வெளியிடவில்லை.
இருப்பினும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது ஒரு சில வாரத்திற்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அறிவிக்கப்பட்டு, அதன் விற்பனையும் தொடங்கப்படும் என தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

ஹீரோ நிறுவனம் தனது மின் வாகன பிரிவிற்கென, அதாவது, விடா பிராண்டிற்கு என தனி வலைதளத்தையே உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், ஹீரோ மோட்டோகார்ப் தளத்தில் மின்சார இருசக்கர வாகனம் பற்றிய எந்த தகவலும் இடம் பெற்றிருக்காது. மாறாக விடாவிற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் விடா வேர்ல்டு தளத்திலேயே அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
இந்த தளத்தின் வாயிலாகவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விற்பனை மற்றும் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தளத்தில் சென்னையில் விடா வி1-க்கான புக்கிங்குகள் தொடங்கியதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. ஆகையால், ஆஃப்லைனில் மட்டும் இப்போதைக்கு புக்கிங் தொடங்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் ரூ. 1.45 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விடா வி1 விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதே விலையிலேய சென்னையிலும் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. விடா வி1 இருவிதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அவை, வி1 ப்ளஸ் மற்றும் வி1 ப்ரோ ஆகும். இதில், வி1 பிளஸ்ஸே விலை குறைவான தேர்வாக இருக்கின்றது. ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 143 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த அதிக ரேஞ்ஜ் திறனுக்காக விடா வி1 ப்ளஸ் தேர்வில் 3.44 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். மேலும், வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். பிஎம்எஸ்எம் மோட்டாரே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது 6 kW பீக் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், 25 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும். இதே மோட்டாரே விடா வி1 ப்ரோவிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் பேட்டரி பேக் விஷயத்தில் அது மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. 3.94 kWh பேட்டரி பேக்கே வி1 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ தூரம் பயணிக்க முடியும். ஒரே மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 80 கிமீ ஆகவே இருக்கின்றது. ஆனால், பிக்-அப் வேகம் சற்று அதிகமாக இருக்கின்றது. 0-40 கிமீ வேகத்தை எட்ட வி1 பிளஸ் 3.4 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும்.
அதேவேளையில், வி1 ப்ரோ வெறும் 3.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய திறன் கொண்டதே வி1 ப்ரோ ஆகும். இதுபோன்று கூடுதல் அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே விடா வி1 ப்ரோ சற்று காஸ்ட்லியானதாகக் காட்சியளிக்கின்றது. 1.59 லட்ச ரூபாய் அதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவும் பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். இரு தேர்வுகளிலும் ஈகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் கூடுதலாக கஸ்டம் மோட் ஒன்றும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அது விடா வி1 ப்ரோவில் மட்டுமே கிடைக்கும். சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஹீரோவின் விடா வாரி வழங்கி இருக்கின்றது.
டார்க் மற்றும் ஆட்டோ-மோட் வசதிக் கொண்ட 7அங்குல ஓடிஏ எனேபில்ட் டிஎஃப்டி திரை, ஆன்டி தெஃப்ட் அலாரம், ஜியோ ஃபென்ஸ், ரிமோட், க்ரூஸ் கன்ட்ரோல், டூ-வே த்ரோட்டில், இன்கமிங் கால் அலர்ட், நேவிகேஷன், டிராக் மை பைக், பிஎல்இ, 4ஜி மற்றும் ஒய்ஃபை உள்ளிட்ட அம்சங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன்பக்கத்தில் டிஸ்க்கும் - பின்பக்கத்தில் டிரம் பிரேக், சிபிஎஸ் உடன் வழங்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருக்கும் மூன்று நகரங்களிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதே சூப்பரான வரவேற்பையே நமது சென்னையிலும் விடா வி1 பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இங்கும் போட்டி அதிகம் என்பதால், அது வெற்றி பெறுமா?, இல்லையா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









