சேல்ஸ் கூரையை பீய்த்து கொட்ட போகுது! ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக், அப்டேட் செய்யப்பட்ட வெர்சனில்...
மேம்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி (Hero Xpulse 200 4V) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. புதிய எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் என்னென்ன அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சமீபத்திய வெற்றிக்கரமான தயாரிப்புகளுள் ஒன்று, எக்ஸ்பல்ஸ் 200 ஆகும். இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக்காக விளங்கும் இதற்கு எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான வரவேற்பு கடந்த சில வருடங்களாக கிடைத்து வருகிறது. இந்த பைக்கை விரைவில் ஹீரோ நிறுவனம் அப்டேட் செய்ய உள்ளதாக கூறியிருந்தோம். அதன்படி தற்போது அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.44 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் ராலி எடிசனின் பெயர் தற்போது புரோ வேரியண்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 4வி புரோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.51 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பைக்கில் அப்டேட்கள் என்று பார்த்தால், பெரியதாக எதுவுமில்லை.
முன்பக்கத்தில், புதிய மற்றும் ரீடிசைனிலான எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, ஹெட்லைட்டில் வழங்கப்படும் 'H'-வடிவ டிசைன் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஹெட்லைட் முன்பை விட பிரகாசமானதாக மாறியுள்ளது. அத்துடன், பைக்கின் முன்பக்கத்தில் விண்ட்ஸ்க்ரீனின் உயரமும் 60மிமீ வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. பைக்கிற்கு புதிய ஸ்விட்ச் கியர் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கை முன்பை விட பிரீமியம் தரத்தில் காட்சியளிக்க வைக்கிறது.

ஹேண்டில்பாரில் ரைடரின் கை விரல்களை பாதுகாக்கும் கார்ட்கள் பெரியதாக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட பைக்கில் முக்கியமான அப்டேட் என்ஜினில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் 200சிசி ஆயில்-கூல்டு என்ஜின் சமீபத்தில் அமலுக்குவந்த ஒபிடி-2 மற்றும் இ20-க்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் மாற்றமில்லை.
எக்ஸ்பல்ஸ் 200 4வி என்ஜினின் மூலமாக அதிகப்பட்சமாக 19.1 பிஎச்பி மற்றும் 17.35 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் முதல்முறையாக ரைட் மோட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. சாலை, ஆஃப்-ரோடு மற்றும் ராலி என்பன அந்த ரைட் மோடுகள் ஆகும். இந்த ரைட் மோட்களுக்கு ஏற்ப இந்த பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி முன்பை காட்டிலும் 35மிமீ தாழ்வாகவும், 8மிமீ பின்னோக்கியும் வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜர் தொழிற்நுட்பம் ஒருவழியாக பைக்கில் காக்பிட்டிற்கு அருகாமையில் மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் விலை கொடுத்து வாங்கும் புரோ வேரியண்ட்டில் ராலி தொகுப்பை நிலையான தேர்வாக பெற முடியும். இந்த ராலி தொகுப்பில் நீண்ட டிராவல் உடன் சஸ்பென்ஷன், பெஞ்ச்-ஸ்டைல் இருக்கை மற்றும் ஹேண்டில்பார் ரைசர்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், எக்ஸ்பல்ஸ் 200, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே எதிர்பார்க்காத ஓர் வெற்றிக்கரமான மாடல் ஆகும். ஆதலால்தான், இந்த பைக்கை மிகுந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹீரோ அப்டேட் செய்துவிடுகிறது. குறிப்பாக, இந்த பைக்கில் முன்பு விற்பனையில் இருந்த ராலி எடிசன் தற்போது புரோ வேரியண்ட்டாக கொண்டுவரப்பட்டு இருப்பது உண்மையில் ஹீரோவின் ஓர் அருமையான மூவ் ஆகும்.


Click it and Unblock the Notifications









