160சிசி-இல் எதை வாங்கலாம்? புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கா? அல்லது பஜாஜ் பல்சர் என்160 பைக்கா?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சன் சமீபத்தில் 4-வால்வு என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் பல்வேறு 160சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக இந்த பைக்கை ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 160சிசி-இல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக் 4-வால்வு என்ஜின் உடன் விற்பனையில் இருந்தாலும், பஜாஜ் பல்சர் என்160 பைக் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு விற்பனையில் சவாலானதாக இருக்கும். ஏனெனில் இந்திய சந்தையில் பல்சர் பைக்குகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் உள்ளது. இந்த இரு பைக்குகளுக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.

தோற்றம்: பஜாஜ் பல்சர் என்160 பைக்கும் கடந்த 2022ஆம் ஆண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகையால் இந்த இரு பைக்குகளும் தற்போதைய இளம் தலைமுறையினரை கவர்வதற்காக கூர்மையான எட்ஜ் டிசைன்களுடன் தோற்றத்தை கொண்டுள்ளன. குறிப்பாக, பைக்குகளின் பெட்ரோல் டேங்க் மற்றும் ஹெட்லேம்ப் நன்கு பருத்த வடிவில் உள்ளன. எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டேங்க், என்ஜின் கவர், ஹெட்லேம்ப் & இருக்கைகளில் ஹீரோ சில மாற்றங்களை செய்துள்ள நிலையில், பஜாஜ் பல்சர் என்160 பைக் ஆனது பல்சர் என்250 பைக்கின் மினி வெர்சனாக பார்க்கப்படுகிறது.
தொழிற்நுட்ப அம்சங்கள்: இந்த இரு 160சிசி பைக்குகளில் எல்இடி விளக்குகளே பொருத்தப்படுகின்றன. ஆனால் பல்சர் என்160 பைக்கில் ஹலோஜன் தரத்தில் டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் இந்த பல்சர் பைக்கில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

என்ஜின்: ஏற்கனவே கூறியதுபோல், புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் 4 வால்வுகளுடன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் 163.2சிசி, ஆயில்-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 16.66 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 14.6 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
மறுப்பக்கம், பஜாஜ் பல்சர் என்160 பைக்கில் 164.82சிசி, ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 15.78 பிஎச்பி மற்றும் 6,750 ஆர்பிஎம்-இல் 14.65 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இந்த பல்சர் பைக்கின் என்ஜின் உடனும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்படுகிறது.

விலை: கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.19 லட்சத்தில் இருந்து ரூ.1.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அறிமுக விலையே ஆகும். அதாவது, இன்னும் சில மாதங்களில் இந்த விலைகள் உயர்த்தப்படலாம். அதேநேரம், பஜாஜ் பல்சர் என்160 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.23 லட்சத்தில் இருந்து ரூ.1.30 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்160 இவை இரண்டுமே மாடர்ன் 160சிசி பைக்குகள் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஸ்டைலிஷான தோற்றத்தில், போதுமான செயல்படுதிறன் & விலையில் பைக்கை வாங்க நினைக்கும் இளைஞர்களுக்கு இவை இரண்டும் ஏற்றவை ஆகும். ஆனால், ப்ளூடூத் இணைப்பு வசதி உடனான டிஜிட்டல் திரை வாடிக்கையாளர்கள் பலரை ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் பக்கம் இழுக்கும் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications









