கார்களுக்கே ஹோண்டா டியோ டஃப் கொடுக்கப்போகுது.. இப்படி ஒரு வசதி ஸ்கூட்டரிலா-னு எல்லாரும் முணுமுணுக்க போறாங்க!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஸ்மார்ட் சாவி வசதியை அண்மையில் ஆக்டிவா ஸ்கூட்டரில் அறிமுகப்படுத்தியது. இதே வசதி உடன் டியோவை அது விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹோண்டா (Honda)-வின் பிரபல இருசக்கர வாகன மாடல்களில் டியோ (Dio)-வும் ஒன்று. இந்த ஸ்கூட்டர் மாடலில் விரைவில் ஹோண்டா நிறுவனம் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்டோகார் இந்தியா-வும் இந்த தகவலை தனது செய்தியின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.

இந்த புதிய தேர்வு தற்போது விற்பனையில் இருக்கும் டியோவின் மற்ற அனைத்துத் தேர்வுகளைக் காட்டிலும் மிக அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த புதிய அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கும் தேர்வை டியோ எச்-ஸ்மார்ட் (Dio H-Smart) எனும் பெயரில் ஹோண்டா விற்பனைக்கு வழங்கும்.
சமீபத்தில்தான் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலில் இந்த எச்-ஸ்மார்ட் (Activa H-Smart) தேர்வை விற்பனைக்குக் களமிறக்கியது. இதைத்தொடர்ந்து, தற்போது டியோவிலும் இந்த சூப்பரான தேர்வை விற்பனைக்கு வழங்கும் முயற்சியில் ஹோண்டா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. எச்-ஸ்மார்ட் தேர்வில் வழங்கப்படும் மிக முக்கியமான வசதி ஸ்மார்ட் கீ (Smart Key) ஆகும்.

இந்த சாவி கார்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் சாவியைப் போல இருக்கும். பயன்பாட்டிலும் அதற்கு இணையானதாகவே அது இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, சாவியே இல்லாமல் ரைடை அனுபவித்தல், தூரத்தில் இருந்துக் கொண்டே வாகனத்தின் லைட்டுகளை கன்ட்ரோல் செய்தல் என பல செயல்களைச் செய்துக் கொள்ள முடியும்.
மேலும், வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்கான வசதியும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, பார்க்கிங்கில் வண்டியை எங்கு விட்டிருக்கின்றோம் என தேடி அலையும் நேரத்தில், ரிமோட் சாவியில் இருக்கும் ஒரு சின்ன பட்டனை அழுத்துவதன் வாயிலாக வாகனம் எங்கு நின்றுக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

அந்த பட்டனை அழுத்துவதன் வாயிலாக இருசக்கர வாகனத்தின் லைட்டுகளை ஒளிரத் தொடங்கும். இதன் வாயிலாக உடனடியாக வண்டி எங்கே இருக்கின்றது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான வசதிகளுடனேயே டியோ வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்மார்ட் சாவி வாயிலாக சாவியை சொருகாமலேயே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதுதவிர, வாகனத்தை லாக் மற்றும் அன்-லாக் உள்ளிட்டவற்றையும் செய்து கொள்ள முடியும். இதுபோன்ற நிறைய நிறைய வசதிகளுடன் டியோ வர இருப்பதால் இப்போதே அதன்மீதான எதிர்பார்ப்பு இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

மெக்கானிக்கல் விஷயத்தில் எச்-ஸ்மார்ட் டியோவில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகின்றது. இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினுடனேயே டியோ எச்-ஸ்மார்ட் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் 7.8 எச்பி மற்றும் 9 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இப்போது விற்பனையில் இருக்கும் டியோ 74,417 ரூபாய்க்கே விற்கப்பட்டு வருகின்றது. இது ஆரம்ப நிலை தேர்வான டியோ எஸ்டிடி-யின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் உயர்நிலை தேர்வான டிஎல்எக்ஸ்-க்கு ரூ. 78,418 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த இரு தேர்வுகளில் மட்டுமே டியோ தற்போது சென்னையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இந்த தேர்வுகளுடனேயே டியோ எச்-ஸ்மார்ட் இணைக்கப்பட இருக்கின்றது. இதன் வருகை டியோவின் விற்பனையை பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் என நிறுவனத்தால் நம்பப்படுகின்றது. அதேவேளையில், இதன் விலை தற்போது விற்பனையில் இருக்கும் டியோவின் பிற தேர்வுகளைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காலத்தில் டியோவிற்கு இந்தியாவில் வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால், இப்போது அதற்கான வரவேற்பு மந்த நிலையில் உள்ளது. இந்த நிலையை மாற்றி விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டே ஹோண்டா நிறுவனம் டியோவில் எச்ஸ்மார்ட் தேர்வை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









