புதிய 100சிசி பைக் தான் வந்து காப்பாத்தனும்... அதாள பாதாளத்திற்கு சரியும் ஹோண்டா 2-வீலர்ஸ் விற்பனை!!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்த 2-சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
ஜப்பானை சேர்ந்த உலகம் முழுவதும் பிரபலமான இருசக்கர தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று ஹோண்டா 2-வீலர்ஸ் ஆகும். இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) என்ற பெயரில் செயல்படும் இந்த நிறுவனத்தின் விற்பனை சமீப மாதங்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தமாகவே 2,47,175 இருசக்கர வாகனங்களை மட்டுமே HMSI விற்பனை செய்துள்ளது.

இதில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதி எண்ணிக்கையும் அடங்குகிறது. பிப்ரவரி மாதத்தில் நாட்கள் குறைவு என்பதால், வாகன விற்பனையும் சற்று குறைவாகவே பதிவாகும் என்பது உண்மைதான். இருப்பினும் 2,47,175 என்பது மிகவும் குறைவாகும். ஏனெனில் கடந்த 2022ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 3,12,621 இருசக்கர வாகனங்களை ஹோண்டா இந்தியாவில் விற்றும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் இருந்தது.
இந்த வகையில் பார்த்தோமேயானால், 2022 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரியில் ஹோண்டா 2-வீலர்கள் விற்பனை கிட்டத்தட்ட 20.93% குறைந்துள்ளது. அதேபோல் முந்தைய 2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையிலும் HMSI-இன் விற்பனை ஆனது 16.60% குறைந்துள்ளது. ஏனெனில் இந்த 2023ஆம் வருடத்தின் முதல் மாதத்தில் 2,96,363 இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்திருந்தது.

உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கில் பார்த்தோமேயானால், 2022 பிப்ரவரி மாதத்தில் 2,85,677 ஹோண்டா 2-வீலர்கள் நம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அந்த எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 20.52% குறைவாக வெறும் 2,27,064 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 2023 ஜனவரி மாதத்தில் கூட 2,78,143 இருசக்கர வாகனங்களை உள்நாட்டு சந்தையில் ஹோண்டா விற்பனை செய்திருந்தது.
உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியும் 2022 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் 25.36% குறைந்துள்ளது. கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 20,111 ஹோண்டா 2-வீலர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் இதனை காட்டிலும் 10.38% குறைவாக 18,220 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹோண்டா ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் HMSI-இன் இந்த நிலை வரும் மாதங்களில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், 100சிசி-இல் புதியதொரு மலிவான மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த ஹோண்டா தயாராகி வருகிறது. இந்தியாவின் பிரபலமான ஹீரோ ஸ்பிளெண்டருக்கு போட்டியாக கொண்டுவரப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் இந்த 100சிசி ஹோண்டா பைக்கின் டீசர் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது. ஹோண்டா ஷைன் 100 என்ற பெயரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பைக்கின் அறிமுகம் வருகிற மார்ச் 15ஆம் தேதி ஆகும்.
விலை மட்டும் சரியாக, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிர்ணயித்துவிட்டால், ஸ்பிளெண்டருக்கு போட்டியாக அமைவது மட்டுமின்றி, HMSI நிறுவனத்திற்கும் எழுச்சி தரக்கூடிய தயாரிப்பாக இந்த புதிய 100சிசி பைக் விளங்கலாம். HMSI-இன் சமீப கால வீழ்ச்சிக்கு காரணமாக நாங்கள் நினைப்பது என்னவென்றால், இந்த நிறுவனம் அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓர் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதில் எந்த குறையும் வைப்பதில்லை, ஆனால் அந்த தயாரிப்பு விலை அதிகம் காரணமாக வாடிக்கையாளர்களை கவருவது இல்லை.


Click it and Unblock the Notifications








