பட்ஜெட் 1.2 லட்ச ரூபா.. ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கலாமா இல்ல எலெக்ட்ரிக் டூ-வீலரை வாங்கலாமா?.. 2ல எது பெஸ்ட்?
இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் இருசக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. பல ஆண்டுகளாக இந்த இடத்தை இதுவே இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை கூடிய விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு கூறுவதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களே மிக முக்கியமான காரணமாக உள்ளன.
பெட்ரோல் டூ-வீலர்களைக் காட்டிலும் அதிக பயன்பாட்டு வசதியைக் கொண்டவையாகவும், அதிகம் லாபம் தரக் கூடியவையாகவும் மின்சார இருசக்கர வாகனங்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றன. ஆகையால் பலர் இப்போது டூ-வீலர்களையே வாங்க விரும்புகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் இப்போதும் ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கவே விருப்பம் காட்டுகின்றனர். இத்தகைய சூழல் நிலவும் இந்த நிலையிலேயே இரண்டில் எதை வாங்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல் தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

விலையில் எது பெஸ்ட்? ஒருவேளை நீங்கள் ஹோண்டா ஆக்டிவாவை வாங்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தால் அந்த வாகனம் எந்த விலையில் தொடங்கி எந்த அளவு அதிக விலையில் விற்கப்படுகின்றது என்பதை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆக்டிவா ஸ்கூட்டரை பொருத்தவரை அதன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 78,618ஆக உள்ளது.
இது ஆரம்ப நிலை தேர்வான எஸ்டிடி-யின் விலை ஆகும். இதற்கு அடுத்த நிலையில் உள்ள டிஎல்எக்ஸ் ரூ. 81,119-க்கும், எச்-ஸ்மார்ட் தேர்வு (இதுவே உயர்நிலை தேர்வாகும்) ரூ. 84,619-க்கும் விற்கப்படுகின்றது. இந்த விலைகள் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆன்-ரோடில் வரி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட இதர கட்டணங்கள் சேர்க்கப்பட்டால் இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 1 லட்சத்தைத் தொட்டுவிடும். ஆகையால், ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட் இருந்தால் மட்டுமே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை உங்களால் சென்னையில் புதிதாக வாங்கிக் கொள்ள முடியும்.
இதுவே, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், ஓரளவுக்கு நல்ல வசதிகளையும், ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனங்களையும் தேர்வு செய்ய நீங்கள் விரும்பினால் ஓலா எஸ்1 ப்ரோ அல்லது ஏத்தர் 450 எக்ஸ் அல்லது டிவிஎஸ் ஐக்யூப் அல்லது பஜாஜ் சேத்தக் அல்லது ஹீரோ விடா வி1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாட வேண்டி இருக்கும்.

இவற்றில் மலிவு விலைக் கொண்டதாக ஏத்தர் 450 எக்ஸ் இருக்கின்றது. இதன் விலை ரூ. 1,16,379 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்ரோடில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ரூபாய் கூடுதலாக இருக்கும். ஆகையால், ஆக்டிவாவைக் காட்டிலும் காஸ்ட்லியான தேர்வாக இது காட்சியளிக்கின்றது. இதேபோல், ஓலா எஸ்1 ப்ரோவும் அதிக விலைக் கொண்டதாக இருக்கின்றது.
இதன் விலை ரூ. 1.24 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், இந்த நிறுவனம் விரைவில் ஓலா எஸ்1 ஏர் எனும் மாடலை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதற்கு விலையாக ரூ. 84,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை ஆன்-ரோடில் வாங்க செல்லும்போது ஆக்டிவாவிற்கு இணையான விலையைக் கொண்டதாக இருக்கும்.

ஆகையால், விலையை பொருத்த வரை அதிக லாபத்தை தர கூடியதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஒரு வேளை ஓலா எஸ்1 ஏர் விற்பனைக்கு வரும் எனில் விலை விஷயத்தில் நல்ல தேர்வாக அது இருக்கும். மற்றபடி அதிக பிரீமியம் வசதிகள் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் ஆக்டிவாவைவிட காஸ்ட்லியாகாவே இருக்கின்றன. அதேநேரத்தில் ஆக்டிவாவின் உயர்நிலை தேர்வுகளும் அதிக விலையைக் கொண்டதாகவே இருக்கின்றது.
டிராவல் செய்யும்போது எதில் அதிக லாபம் கிடைக்கும்? ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ஒரு லிட்டர் எரிபொருளை நிரப்பினால் சுமார் 50 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். சென்னையில் இப்போது ஒரு லிட்டர் 102க்கு விற்கப்படுகின்றது. அப்படி என்றால் ஒரு கிமீ ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயணிக்க ரூ. 2க்கும் அதிகமாக செலவாகின்றது.
ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒரு கிமீ பயணிக்க ஒரு சில பைசாக்கள் மட்டுமே செலவாகும். உதாரணமாக ஓலா எஸ்1 ப்ரோவில் ஒரு கிமீ பயணிக்க 17 பைசா மட்டுமே செலவாகும். இது மிக மிக குறைவான பயண செலவாகும். இந்த தகவலை ஓலா எஸ்1 ப்ரோவை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் சிலரும் உறுதி செய்திருக்கின்றனர். ஆகையால், டிராவல் விஷயத்தில் மிக அதிக லாபத்தைத் தரக் கூடியவையாக இ-வாகனம் இருக்கின்றன.
பராமரிப்பு செலவு எதற்கு அதிகம் ஆகும்? இதை பற்றி சொல்லவே வேண்டாம் என நினைக்கின்றோம். இருப்பினும் உதாரணமாக ஆக்டிவா ஸ்கூட்டரை ஓர் சின்ன சர்வீஸுக்கு விடுகின்றோம் வைத்துக் கொள்ளுங்கள், ஆயில் சேஞ்ஜ், ஸ்பேர் பார்ட்ஸ் சேஞ்ஜ் என ஒரு சில நூறுகள் அல்லது ஆயிரக் கணக்கான ரூபாயை சர்வீஸ் மையங்கள் பிடிங்கிவிடும்.
ஆனால், இந்த கவலை மின்சார வாகனங்களில் இல்லை. மின்சார வாகனங்களுக்கு பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரியில் பழுதானால் மிகப் பெரிய தலைவலி என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். இருப்பதிலேயே மிக அதிக விலையைக் கொண்டதாக பேட்டரி பேக்குகள் இருக்கின்றன.
சில நேரங்களில் வாகனங்களுக்கு இணையான தொகையை பேட்டரிகளுக்கு வழங்க நேரிடும். அதேநேரத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களை ரீ-சேல் செய்ய நினைத்தால் பெரும் தொகையை இழக்க நேரிடும். அந்த வாகனத்தின் பேட்டரி ஆயுட்காலத்தை பொருத்தே அதன் மதிப்பு அமையும். என்னதான் புதிதுபோல் அது பராமரிக்கப்பட்டு இருந்தாலும் விலை குறைவாகவே போகும்.
ஆனால், ஆக்டிவா அப்படி இல்லை. அது மெட்டல் பாடிக் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். எப்போதும் சந்தையில் அதற்கு நல்ல வரவேற்பு உண்டு. நல்ல நிலையில் ஆக்டிவா பராமரிக்கப்பட்டு இருந்தால் அது நல்ல விலைக்கு போகவும் வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்பைக் காட்டிலும் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. ஆகையால், ஹோண்டாவும் அதன் ஆக்டிவா மாடலில் மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. இதன் வருகை வெகு விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









