ஹோண்டா ஆக்டிவா விற்பனைக்கு வந்து 22 வருஷங்கள் ஆகிருச்சா!.. இத்தன வருஷத்துல எத்தன விற்பனையாகி இருக்கு தெரியுமா?
ஹோண்டா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக ஆக்டிவா ஸ்கூட்டர் இருக்கின்றது. நிறுவனத்தின்கீழ் பலதரப்பட்ட டூ-வீலர் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், அவை அனைத்தைக் காட்டிலும் கொஞ்சம் ஸ்பெஷலானதாக ஆக்டிவா இருக்கின்றது. இதனால்தான் இப்போதும் விற்பனையில் ஆக்டிவா கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் விற்பனைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகியும் இந்த இருசக்கர வாகனம் மிக சிறப்பான விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதுவரை 3 கோடி யூனிட்டுகள் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா ஆக்டிவா முதன் முதலில் 2001 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்தே இந்த இருசக்கர வாகனம் ஸ்கூட்டர்கள் பிரிவிலும் சரி, ஒட்டுமொத்த டூ-வீலர் பிரிவிலும் சரி பெஸ்ட் செல்லிங் இருசக்கர வாகனமாக இருந்து வருகின்றது. மேலும் ஒரு சில ஆண்டுகளிலேயே 10 லட்சம் யூனிட் விற்பனையை ஆக்டிவா எட்டியது.
குறிப்பாக, 2015 ஆம் ஆண்டில் ஒரு கோடி வாடிக்கையாளர்களை அது பெற்று இந்திய இருசக்கர வாகன சந்தையை மெர்சலாக்கியது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஏழு ஆண்டுகளில் இரண்டு கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றது, ஹோண்டா ஆக்டிவா. இப்போது நடப்பு 2023 ஆம் ஆண்டில் 3 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று ஹோண்டா ஆக்டிவா தரமான சம்பவத்தைச் செய்திருக்கின்றது.

விற்பனையில் மட்டுமில்லைங்க இன்னும் பல விஷயங்களில் இந்த ஸ்கூட்டர் இந்திய இருசக்கர வாகன சந்தையில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கின்றது. தற்போது ஹோண்டா ஆக்டிவா இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
வழக்கமான ஆக்டிவா எஸ்டிடி (ரூ. 78,618), டிஎல்எக்ஸ் (ரூ. 81,119) மற்றும் எச்-ஸ்மார்ட் (ரூ. 84,619) என மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆனால் ஹோண்டா ஆக்டிவா 125 நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டிரம் (ரூ. 83,002), டிரம் அலாய் (ரூ. 86,670), டிஸ்க் (ரூ. 90,175) மற்றும் எச்-ஸ்மார்ட் (ரூ. 92,175) ஆகியவையே அவை ஆகும்.

இந்தியாவில் பிஎஸ்6 தரத்தில் விற்பனைக்கு வந்த முதல் ஸ்கூட்டர் ஆக்டிவாவே ஆகும். இதன் ஆக்டிவா 125 பிஎஸ்6 மாடல் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 13 சதவீதம் அதிகம் மைலேஜ் திறனுடன் இது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இத்துடன், கூடுதல் சைலண்டாக இயங்கும் ஏசிஜி ஸ்டார்டர் மோட்டார் மற்றும் தம்பிள் ஃப்ளோ டெக்னாலஜியும் இதிலேயே அறிமுகம் செய்யப்பட்டது.
இதுதவிர, ஐடிலிங் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் ஆகிய அம்சங்களும் இதிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன. இதுமட்டுமில்லைங்க, முதல் முறையாக ஆறு வருடங்கள் வாரண்டியை ஆப்ஷனலாக இந்த ஸ்கூட்டருக்கே முதல் முறையாக வழங்கப்பட்டது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளுடன் இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா சந்தையில் விற்பனையில் இருக்கின்றது.
இதன் காரணத்தினாலும், இதன் மீதிருக்கும் நம்பிக்கையின் காரணத்தினாலும், குறைந்த பராமரிப்பு செலவை வழங்குகின்ற காரணத்தினாலும் ஆக்டிவாவிற்கு மிகப் பெரிய ரசிக பட்டாளம் இந்தியாவில் உருவாகியது. இதன் விளைவாகவே கோடிகளைக் கடந்து அது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இதனை ஹோண்டா டூ-வீலர் உற்பத்தி நிறுவனம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய இருசக்கர வாகன பிரியர்களின் காதலியாக ஹோண்டா ஆக்டிவா மாறி இருக்கின்றது. ஆண்-பெண் இரு பாலரிடமும் இந்த டூ-வீலர் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே அதனால் கோடி கணக்கில் விற்பனையைப் பெற முடிந்திருக்கின்றது. வரும் காலங்களிலும் இந்த விற்பனை எண்ணிக்கை இனனும் பலமடங்கு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









