Honda CB300R பைக்குகளில் இப்படியொரு பிரச்சனை இருக்குதா... பைக்கை வாங்கும்முன் கரெக்டா பார்த்து வாங்குங்க!!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2022இல் தயாரிக்கப்பட்ட அதன் சிபி300ஆர் மோட்டார்சைக்கிள்களை பழுது ஒன்றின் காரணமாக திரும்ப அழைக்க முடிவெடுத்துள்ளது. ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் எந்த மாதிரியான பழுது அது? யார் யாரெல்லாம் இந்த நடவடிக்கைக்கு உள்ளாக்குகின்றனர்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் விளங்குகிறது. இந்த ஜப்பானிய நிறுவனத்தின் ஆக்டிவா, டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றவை. இருப்பினும் ஹோண்டாவின் பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் பெரியதாக கண்டுக்கொள்ளப்படுவதில்லை என்பதை இங்கு கூறியே ஆக வேண்டும்.

குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிளை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை. அப்படிப்பட்ட தற்போதைய சூழலில், விற்கப்பட்ட சிபி300ஆர் மோட்டார்சைக்கிள்களை திரும்ப அழைக்க உள்ளதாக ஹோண்டா அறிவித்துள்ளது. அதாவது, விற்கப்பட்ட சிபி300ஆர் பைக்குகளை திரும்ப அழைத்து அவற்றில் கண்டறியப்பட்டுள்ள பிரச்சனையை சரிச்செய்து வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிபி300ஆர் பைக்குகளில் என்ஜினை கவர் செய்யும் கிராங்க்கேஸ் பகுதியின் வலதுப்பக்கம் முறையாக உற்பத்தி செய்யப்படாததை கண்டறிந்ததை தொடர்ந்து தற்போது இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக சரிச்செய்யாவிடின் என்ஜினின் வெப்பத்தால் சீல் செய்யப்பட்ட பிளக் தனியாக கழன்றுவதற்கு வாய்ப்புள்ளது.
சீலிங் பிளக் மொத்தமாக கழறும் பட்சத்தில் என்ஜின் ஆயில் கசிய ஆரம்பித்துவிடும். அவ்வாறு கசியும் ஆயில் என்ஜினின் வெப்பாத்தால் தீ -பற்றிக்கொள்ள நேர்ந்தால், சில நிமிடங்களில் மொத்த பைக்கும் தீ-க்கு இரையாகிவிடும். அல்லது சூடாக வெளியேறும் என்ஜின் ஆயில் ஓட்டுனர் அல்லது பயணியின் உடலில் பட்டால் தீப்புண் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அல்லது கசியும் ஆயிலினால் பைக்கின் பின் டயர் ஸ்லிப் ஆகுவதற்கு வாய்ப்புள்ளது.

இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதன் காரணமாகவே இந்த பிரச்சனையை 2022 சிபி300ஆர் பைக்கில் இருந்து களை எடுக்கும் பணியை ஹோண்டா துவங்க உள்ளது. இந்த பிரச்சனையை எந்த மாதத்தில் உருவாக்கப்பட்ட சிபி300ஆர் பைக்குகளில் சந்திக்க நேரலாம் என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. சம்பந்தப்பட்ட சிபி300ஆர் பைக் உரிமையாளர்களை ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப் மையங்களின் அதிகாரிகள் தொடர்பு கொள்ள உள்ளனர்.
இந்த பணிகளை அவர்கள் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து துவங்க உள்ளனர். பிக்விங் டீலர்ஷிப் மூலமாக இந்த சரிப்பார்ப்பு பணிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த பராமரிப்பு பணிகளால் பைக்கின் வாரண்டி பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேர்ல் ஸ்பார்டன் சிவப்பு மற்றும் மேட் ஸ்டீல் கருப்பு என 2 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் 286சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
இந்தியாவில் புதிய 350சிசி பைக்கை களமிறக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுப்பட்டுவரும் தற்போதைய சூழலில், இவ்வாறான திரும்ப அழைக்கும் நடவடிக்கை எந்த அளவிற்கு சரியானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், பைக்கில் பிரச்சனை என்றால் அதனை கண்டறிந்து தாமாக ஹோண்டா தீர்த்து வைக்கும் என்கிற நம்பிக்கை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








