அசத்தலான ஸ்டைலில் டியோ ஸ்கூட்டர்!! ஹோண்டாவை சமாளிக்குமா தமிழக டிவிஎஸ் எண்டார்க்? எதை தேர்வு செய்யலாம்?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட டியோ 125 ஸ்கூட்டர் சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹோண்டா டியோவிற்கு விற்பனையில் பல்வேறு 125சிசி ஸ்கூட்டர்கள் போட்டியாக விளங்குகின்றன. அவற்றுள் முக்கியமானதாக விளங்கும் டிவிஎஸ் எண்டார்க் 125-க்கும் புதிய ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.
தோற்றம் & பரிணாம அளவுகள்: இந்த இரு 125சிசி ஸ்கூட்டர்களும் அவற்றின் ஸ்டைலிஷான தோற்றத்தினால் பிரபலமானவை. ஹோண்டா டியோ தற்போது மேலும் ஸ்டைலிஷானதாக மாறியுள்ளது. பரிணாம அளவுகளை பொறுத்தவரையில், டியோ 125 ஸ்கூட்டரின் நீளம் ஆனது 1,830மிமீ, உயரம் 1,172மிமீ, அகலம் 707மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 1,260மிமீ ஆகும். ஸ்கூட்டரின் எடை 104 கிலோ ஆகும்.

மறுப்பக்கம், டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர் ஹோண்டா டியோவிற்கு சவால் அளிக்கும் வகையில் ஸ்டைலிஷான தோற்றத்தை கொண்டதாக விளங்குகிறது. டியோவை போல் எண்டார்க்கும் அப்டேட் செய்யப்பட்டால், எதை தேர்வு செய்வது என்பதில் மிகவும் குழப்பம் ஏற்படலாம். டியோ உடன் ஒப்பிடுகையில், எண்டார்க் 125 ஸ்கூட்டர் கூடுதல் நீளமானது மற்றும் எடைமிக்கது ஆகும். உயரம் மற்றும் அகலத்தில் இரண்டிற்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை.
என்ஜின்: அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரிலும் வழக்கமான 124சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8.16 பிஎச்பி மற்றும் 10.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 124.8சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 2 விதமான இயக்க ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்குகிறது.

அதாவது, ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக 9.25 பிஎச்பி மற்றும் 10.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், ரேஸ் எக்ஸ்.பி எடிசனில் சற்று கூடுதலாக 10.06 பிஎச்பி மற்றும் 10.8 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின்களுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
தொழிற்நுட்ப அம்சங்கள்: தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், எண்டார்க்கின் கை ஓங்கியுள்ளதை கூறியே ஆக வேண்டும். எண்டார்க்கின் மத்திய-நிலை வேரியண்ட் உடன் டியோவின் டாப் வேரியண்ட்டை ஒப்பிட்டு பார்த்தாலும், எண்டார்க்கில் அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் குறிப்பாக, எல்இடி டிஆர்எல்-கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஜிபிஎஸ் நாவிகேஷன், யுஎஸ்பி சார்ஜிங் துளை மற்றும் மொபைல் இணைப்பு வசதியை சொல்லலாம்.

டாப் எண்டார்க் எக்ஸ்டி வேரியண்ட்டில் கூடுதலாக வாய்ஸ் உதவியை கூட பெற முடியும். புதிய டியோ ஸ்கூட்டரில் முக்கிய தொழிற்நுட்ப அம்சமாக ஸ்மார்ட் கீ வழங்கப்படுகிறது. ஸ்கூட்டரை லாக்/ அன்லாக் செய்தல் மற்றும் வழக்கமான சாவி இல்லாமல் என்ஜினை ஸ்டார்ட்/ஆஃப் செய்தல் போன்ற செயல்பாடுகளை செய்யக்கூடிய இந்த ஸ்மார்ட் கீ -ஐ தவிர்த்து பார்த்தோமேயானால், ஏசிஜி ஸ்டார்டர் புதிய டியோவில் வழங்கப்பட்டுள்ளது.
வேரியண்ட்கள் & விலைகள்: 2023 ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் வெறும் 2 வேரியண்ட்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.86,160 மற்றும் ரூ.94,060 ஆகும். ஆனால், டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர் மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.87,023இல் துவங்கி, ரூ.1.08 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஸ்டைலிஷான லேட்டஸ்ட் 125சிசி ஸ்கூட்டரை வாங்க நினைப்போருக்கு 2023 ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் ஏற்றதாகும். ஆனால் கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் சிறந்த செயல்படுதிறனுடன் ஸ்கூட்டரை வாங்க நினைப்போர்க்கு டிவிஎஸ் எண்டார்க் 125 சிறந்த சாய்ஸ். எண்டார்க்கின் ஸ்டைலும் பெரியதாக குறை சொல்லும் அளவிற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









