ஆக்டிவா ஸ்கூட்டர் இனி விற்பனையான மாதிரிதான்.. ஹோண்டா இப்படி செய்யும்னு யாருமே எதிர்பார்க்கல...
இந்தியாவின் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் ஒன்றாகும். இது இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 ஆகியவையே அவை ஆகும். இதில் ஆக்டிவா என்பது 110 சிசி பிரிவை அலங்கரிக்கும் விதமாகவும், ஆக்டிவா 125-ஆனது 125 சிசி பிரிவை அலங்கரிக்கும் விதமாகவும் விற்பனையில் இருக்கின்றது.
இந்த இரண்டிற்கும் இந்தியாவில் வரவேற்பு மிக அதிகம். இதனாலேயே நாட்டின் அதிகம் விற்பனையாகும் டூ-வீலராக ஆக்டிவா இருக்கின்றது. இத்தகைய ஓர் வாகனத்தின் விலையையே ஹோண்டா நிறுவனம் தற்போது உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக்டிவாவின் விலையில் ரூ. 811 வரையிலும், ஆக்டிவா 125 மாடலின் விலையில் ரூ. 1,177 வரையிலும் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.

இந்த விலை உயர்விற்கான துள்ளியமான காரணம் தெரியவில்லை. சமீப சில காலமாக வாகன உற்பத்தியாளர்கள் வாகன கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி புதிய வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. ஆகையால், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை உயர்விற்கும் இதுவே காரணமாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது.
சில நேரங்களில் ஏதேனும் புதிய அம்சத்தை சேர்த்துவிட்டு அந்த வாகனத்தின் விலையை வாகன உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தும். ஆனால், அதையும் ஹோண்டா செய்யவில்லை. எனவே வாகன கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வே நிறுவனத்தின் விலை உயர்விற்கும் மிக முக்கியமான காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை உயர்வால் ஆக்டிவா ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 75,347 ஆக மாறி இருக்கின்றது. அதேவேளையில், அதன் அதிகபட்ச விலை ரூ. 81,348 ஆக உள்ளது. இதேபோல், ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலையும் மாறியிருக்கின்றது. விலை உயர்வின் காரணமாக ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை தற்போது ரூ. 78,920 ஆகவும், உச்ச நிலை தேர்வின் விலை ரூ. 86,093 ஆகவும் உயர்ந்திருக்கின்றது.
இதேபோல், ஆக்டிவா 125 எச்-ஸ்மார்ட் தேர்வின் விலை ரூ. 88,093 ஆக உள்ளது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் ஆகும். சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் அதன் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பின்னால் இருந்த 6ஜி எனும் டேக்கை நீக்கியது. ஆகையால், இனி வரும் காலங்களில் ஹோண்டா ஆக்டிவா என்று மட்டுமே அது அழைக்கப்படும்.

இந்த சின்ன மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் ஹோண்டா ஆக்டிவாவில் செய்ததாக தெரியவில்லை. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவாவில் 109 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.73 பிஎச்பி பவரையும், 8.90 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124 சிசி ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.19 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த டூ-வீலர் நாட்டின் பிற 125 சிசி ஸ்கூட்டர் மாடல்களான சுஸுகி அக்செஸ் 125, யமஹா ஃபஸ்ஸினோ 125, டிவிஎஸ் ஜுபிடர் 125 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஆக்டிவாவிற்கு அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதன் விலையை லேசாக உயர்த்தி நிறுவனம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதனால், ஆக்டிவாவின் விற்பனையில் லேசாக பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









