கார் மட்டுமல்ல இனி டூவீலர்களுக்கும் ஏர்பேக் வரப்போகுது! ஹோண்டா உருவாக்கியுள்ள புது டெக்னாலஜி!
இந்திய சாலைகளில் ஏராளமான விபத்துக்கள் நடக்கிறது. ஆண்டுதோறும் விபத்துக்களும், விபத்தில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. சாலை விபத்துக்களில் மரணமடைபவர்கள் பெரும்பாலும் டூவீலரில் சென்று விபத்தில் சிக்கியவர்கள் தான். டூவீலர் பயணத்தில்தான் அதிகமாக ஆபத்து நிறைந்திருக்கிறது.
விபத்து நடக்கும் போது டூவீலர்களில் செல்பவர்கள் தான் தூக்கி வீசப்படவோ, அல்லது கனமான கல் அல்லது பிற பொருட்களின் மீது மோதவோ வாய்ப்பு இருக்கிறது. இதனால் டூவீலர் விபத்து நடந்தால் அதில் மரணம் என்பது அதிகமாக நிகழ்கிறது. இதைத் தடுக்க பலர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் டூவீலர் விபத்தில் ஏற்படும் மரணங்களைக் குறைக்கப் பலர் புதிய கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் ஹோண்டா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் டூவீலர்களுக்கான ஏர் பேக்குகளை உருவாக்க முயற்சி செய்துவருகிறது. இதற்காக 2 விதமான ஏர்பேக்குகளை உருவாக்கியுள்ளது. அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது.
ஹோண்டா நிறுவனம் தற்போது ஸ்கூட்டர் அல்லது பைக் ஆகிய இரு வாகனங்களுக்கும் ஏற்ற ஏர்பேக்குகளை உருவாக்கி வருகிறது. தற்போது இந்த தயாரிப்பிற்கான கான்செப்ட் தயாராகிவிட்டது. இதை அட்வான்ஸ் ஸிமுலேஷன் டூலில் வைத்து பரிசோதனையும் செய்யப்பட்டு விட்டது. மேலும் கிராஷ் டெஸ்டும் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த கான்செப்ட் மாடலை இந்நிறுவனம் ஹோண்டா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த ஏர்பேக்கை மொத்தம் 2 விதமாகத் தயார் செய்துள்ளது. முதல் வகை இது ரைடர் சீட்டிற்குக் கீழே பொருத்தப்பட்டுள்ளது. இதில் டூவீலர் விபத்தில் சிக்கினால் ரைடருக்கு பாதுகாப்பை வழங்கும்.
மற்றொரு வகை ரைடர் மற்றும் பில்லியன் சீட்டிற்கு இடையில் பொருத்தப்படும். விபத்து ஏற்படும் போது இருவரையும் இது பாதுகாக்கும். ஹோண்டாவின் கோல்டு விங் டூர் பைக் கடந்தாண்டு அறிமுகமானது. அதில் ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பைக் கம்பிளிட் பில்டு யூனிட்டாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோக அந்த பைக்கில் அட்டோமெட்டிக் அட்ஜெஸ்டபுள் விண்ட் ஸ்கிரீன், எல்இடி லைட்டிங், 121 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி ஆகிய இந்த பைக்கில் இருக்கிறது. இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 1833 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 4 ஸ்டோக், 24 வால்வு எஸ்ஓஎச்சி பிளாட் 6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 124.7 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்மிலும், 170 என்எம் டார்க் திறனை 4500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கில் த்ராட்டல் இன்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் மொத்தம் 4 விதமான ரைடிங் மோட்கள் உள்ளன. டூர், ஸ்போர்ட், ஈக்கான், மற்றும் ரெய்ன் ஆகிய மோட்கள் உள்ளன. இதில் மேனுவல் கியர் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய அம்சங்களும் இந்த பைக்கில் இருக்கிறது. ஹோண்டாவின் வேறு பைக்குகளிலும் இந்த ஏர் பேக் அம்சம் விரைவில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா மட்டுமல்ல பியாஜியோச நிறுவனமும் டூவீலர்களுக்கான ஏர்பேக்குகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் ஆட்டோலைவ் என்ற நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இந்த ஆட்டோலைவ் நிறுவனம் ஆட்டோமெட்டிக் சேப்டி சிஸ்டங்களை உருவாக்கி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








