சூட்கேஸ் மாதிரி மடிச்சு தூக்கிட்டு போயிடலாம்! ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
சூட்கேஸ் போல மடித்து எடுத்துச் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருமா என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது ஜப்பானில் ஆட்டோமொபைல் எக்ஸ்போ நடந்து வருகிறது. இதில் பல நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த வருகின்றன. குறிப்பாக ஜப்பானை சேர்ந்த பல முக்கிய நிறுவனங்கள் எல்லாம் தங்களது புதிய தயாரிப்புகளை எல்லாம் முதன்முறையாக அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சுஸூகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை அப்டேட் கொண்ட காரை கான்செப்ட் காராக காட்சிப்படுத்தியது.

இது போக ஹோண்டா நிறுவனம் தனது பிரிலூடு என்ற எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் காட்சிப்படுத்தியுள்ளது.பல நிறுவனங்கள் தங்கள் புதிய புதிய வித்தியாசமான தயாரிப்புகள், தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் புதிதாக மோட்டோகாம்பேக்டோ என்ற பர்சனல் மொபிலிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதை நாம் ஓட்டாத போது சூட்கேஸ் போல மடித்து வைத்துக்கொள்ள முடியும். இது குறைவான தூரத்திற்கு பயணிக்கும் வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்லாம் இதுவரை நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஆனால் ஹோண்டா நிறுவனம் இதை ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே வடிவமைத்து விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துவிட்டது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஹோண்டா நிறுவனம் மோட்டோகாம்பேக்டோ என பெயர் வைத்துள்ளது. இது பார்க்க சூட்கேஸ் போல தான் இருக்கும். ஆனால் இதைத் திறந்து இதன் ஹேண்டில் பாரையும் சீட்டு இருக்கும் பகுதியையும் தனியாக மடக்கி எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த சீட்டில் அமர்ந்தவுடன் கீழே காலை வைக்க ஃபுட் ரெஸ்ட்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஹேண்டில் பார்களில் பிரேக் கண்ட்ரோல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் ஹேண்டில் பாரில் ஒரு சிறிய டிஜிட்டல் டிஸ்ப்ளேயும் இருக்கிறது. அதில் சில முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக எவ்வளவு சார்ஜ் இருக்கிறது, எவ்வளவு வேகத்தில் இந்த ஸ்கூட்டர் பயணித்துக் கொண்டிருக்கிறது, உள்ளிட்ட தகவல்கள் இதில் தெரிகிறது.

இந்த சூட்கேஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடையை பொருத்தவரை மொத்தம் 18.3 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இதில் ஒரு பயணி மட்டுமே பயணிக்க முடியும். அதுவும் 120 கிலோ எடை உள்ள ஒரு மனிதர் மட்டுமே அதிகபட்சமாக பயணிக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 19.3 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 24 கிலோ மீட்டர் வேகத்தில் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணிக்கும் 0-24 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7 நொடியில் பிக்கப் செய்யும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் ஏற 3.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் சாலைப் பகுதிகளில் ஓட்ட பயனுள்ளதாக இருக்காது. ஆனால் பெரிய அப்பார்ட்மெண்ட் கேம்பஸ் உள்ளே பயணிக்கவும், பெரிய ஐடி கம்பெனி உள்ளே ஊழியர்கள் பயணிக்கவும் இது ஏற்றதாக இருக்கும். சினிமாக்களில் காட்டப்படுவது போல பெரிய பெரிய அலுவலகங்களுக்கு உள்ளே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் இந்த மோட்டோகாம்பேக்ட் சூட்கேஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருமா என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. ஜப்பான் போன்ற நாடுகளில் இதுபோன்ற வாகனங்களுக்கு வரவேற்பு இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இது போன்ற வாகனங்களுக்கு வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என்ற விவரம் தெரியவில்லை. இதனால் ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவிற்கு கொண்டு வருவது சந்தேகம்தான்.


Click it and Unblock the Notifications









