ஹோண்டா இந்த பைக்குகளை எல்லாம் இந்தியா கொண்டுவந்தா ராயல் என்பீல்டு காலி போலயே!! என்ன நடக்க போகுதோ...
ராயல் என்பீல்டுக்கு நாங்களும் போட்டி தான் என கூறிக்கொண்டு ஹோண்டா (Honda) நிறுவனம் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்த வகையில், இந்தியாவில் விற்பனை செய்வதற்கான காப்புரிமையை தனது 3 பைக்குகளுக்கு பெற ஹோண்டா விண்ணப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அந்த 3 ஹோண்டா பைக்குகள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
பிரபல ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹோண்டா 2-வீலர்ஸின் 'சி.எல்' (CL) பைக்குகள் 1970-80ஆம் காலக்கட்டங்களில் பிரபலமாக விளங்கின. இத்தகைய சிஎல் பைக்குகளான சிஎல்250 மற்றும் சிஎல்300 -இன் காப்புரிமையை தான் ஹோண்டா தற்போது இந்தியாவில் பெற தயாராகி உள்ளது. இதில் சிஎல்300 பைக் ஏற்கனவே சீனாவில் விற்பனையில் உள்ளது. விரைவில் சிஎல்250 பைக்கையும் அந்த நாட்டில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இவற்றிற்கான காப்புரிமையை வேண்டி இந்தியாவில் ஹோண்டா மனு தாக்கல் செய்துள்ளது. இந்த இரு பைக்குகள் இந்தியாவில் சிஎல்300 மற்றும் சிஎல்250 என்ற பெயர்களில் தான் அறிமுகமாக உள்ளனவா என்பதை உறுதியாக கூற முடியவில்லை. ஏனெனில் ஹோண்டாவின் விண்ணப்பத்தில் இந்த பைக்கின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
ஹோண்டாவின் ரெபெல் க்ரூஸர் பைக்குகள் சிஎல் பைக்குகளை காட்டிலும் உலகம் முழுவதும் பிரபலமானவை. அத்தகைய ரெபெல் பைக்குகளின் ஸ்க்ராம்ப்ளர் ரக வெர்சன்களாகவே சிஎல் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. அதாவது, என்ஜின், டிரான்ஸ்மிஷன் மற்றும் மற்ற இயந்திர பாகங்கள் இரண்டிலும் ஒன்றே. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஹோண்டா ரெபெல் 250 பைக்கில் பொருத்தப்படும் 249சிசி,லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் சிஎல்250 பைக்கிலும் பொருத்தப்படுகிறது.
மறுப்பக்கம், ஹோண்டா சிஎல்300 பைக்கில் 286சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த ஹோண்டா ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் நடப்பு 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை ராயல் என்பீல்டின் ஹண்டர் 350 பைக்கிற்கு நேரடி போட்டி மாடல்களாக விளங்கும். ஏற்கனவே கூறியதுபோல், இவை இரண்டு மட்டுமின்றி, மொத்தம் 3 பைக்குகளுக்கான காப்புரிமையை வேண்டி ஹோண்டா மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த 3வது ஹோண்டா மோட்டார்சைக்கிள், ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் ஆகும். கேடிஎம் ஆர்சி200 பைக்கிற்கு போட்டியாக விளங்கும் இதன் வடிவமைப்பிற்கான காப்புரிமையை இந்தியாவில் பெறவும் ஹோண்டா முயற்சித்து வருகிறது. இருப்பினும் இந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே என கூறப்படுகிறது. அப்படியே அறிமுகம் செய்ய நேர்ந்தாலும், நிச்சயமாக அறிமுகம் இன்னும் சில வருடங்களுக்கு இருக்காது என கூறப்படுகிறது.
ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் 249சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 38.2 பிஎச்பி மற்றும் 23.3 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக் ஆனது எஸ்பி வெர்சனிலும் வெளிநாடுகளில் விற்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டான எஸ்பி வெர்சனில் அதிகப்பட்சமாக 42 பிஎச்பி மற்றும் 25 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றல் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ராயல் என்பீல்டின் ஆதிக்கத்தை முறியடிக்க ஹோண்டா பல்வேறு வழிகளில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எந்த முயற்சியும் வெற்றி பெற்றது போல் தெரியவில்லை. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு கூட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்குகளுக்கு போட்டியாக, ஹைனெஸ் சிபி350 என்ற பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்தியது. ஆனால் இதில் எது வெற்றி பெற்றது என்பது உங்களுக்கே தெரியும்.


Click it and Unblock the Notifications








