10 வருஷ வாரண்டி உடன் ஹோண்டா ஷைன் விற்பனைக்கு அறிமுகம்... விலை இவ்ளோ தானா எல்லாரும் வாங்கிக்கலாம் போலையே!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அதன் 2023 ஷைன் 125 பைக்கை விற்பனைக்குக் களமிறக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிடி2 மற்றும் இ20 ஃப்யூவலில் இயங்கும் திறன் ஆகியவற்றுடன் இந்த டூ-வீலர் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அறிமுகமாக இந்த வாகனத்திற்கு ரூ. 79,800 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒட்டுமொத்தமாக இரண்டு விதமான வேரியண்டுகளில் மட்டுமே 2023 ஷைன் 125 விற்பனைக்குக் கிடைக்கும். டிரம் மற்றும் டிஸ்க் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதில் டிரம் வேரியண்ட் ஆரம்ப நிலை தேர்வாகும்.

இதற்கே ரூ. 79,800 எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் உயர்நிலை தேர்வாக டிஸ்க் உள்ளது. இதற்கு ரூ. 83,800 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இருசக்கர வாகனத்தின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக சில சிறப்பு திட்டங்களை ஹோண்டா அறிமுகம் செய்திருக்கின்றது.
அதில் ஒன்றே கூடுதல் வாரண்டி திட்டம். நிறுவனம் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் மூன்று ஆண்டுகள் வாரண்டியை ஹோண்டா ஷைன் 125க்கு அறிவித்து உள்ளது. இதில் விருப்பமில்லை எனில் கூடுதலாக ஏழாண்டுகள் வாரண்டியைச் சேர்த்துக் கொள்ள முடியும். அதாவது, 10 ஆண்டுகள் வாரண்டியின்கீழ் ஷைன் 125-ஐ பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், இதற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பைக்கில் கூடுதல் சிறப்பு வசதிகளாக காம்பி பிரேக்கிங் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு போட்டால் தானாகவே எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதி, ஹாலோஜன் ஹெட்லேம்ப், எஞ்ஜின் கில் ஸ்விட்ச், செயினை பாதுகாக்கும் சீல், ஃப்யூவல் கேஜ் உடன் கூடிய அனலாக் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்ட அம்சங்கள் ஷைன் 125-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 162 மிமீ ஆகும். இதன் வீல் பேஸ் 1,285 மிமீ ஆகும். ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கையே இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. எஞ்ஜினை பொருத்த வரை 125 சிசி பிஜிஎம்-எஃப்ஐ எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் பிஎஸ்4 ஓபிடி 2 தரத்திற்கு இணங்க அப்டேட் செய்யப்பட்ட மோட்டார் ஆகும்.

மேலும், இ20 ஃப்யூவலில் இது இயங்கும். ஹோண்டாவின் இ-எஸ்பி சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் 10.54 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸே பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து எஞ்ஜின் உராய்வைக் குறைக்கும் தொழில்நுட்பம் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
இதனால் விரைவில் எஞ்ஜின் தேய்மானம் அடைவது தவிர்க்கப்பட்டு உள்ளது. இத்துடன், அதிர்வு மற்றும் எஞ்ஜினில் இருந்து வரும் இரைச்சலும் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் ஹைட்ராலிக் ரக ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதனை ஐந்து ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இவற்றுடன் சேர்த்து ஐந்து விதமான நிற தேர்வுகள் ஹோண்டா ஷைன் 125இல் வழங்கப்பட இருக்கின்றது. கருப்பு, ஜெனி கிரே மெட்டாலிக், மேட் ஆக்ஸிஸ் கிரே, ரிபெல் ரெட் மெட்டாலிக் மற்றும் டீசன்ட் ப்ளூ மெட்டாலிக் ஆகிய நிற தேர்வுகளிலேயே ஷைன் 125 விற்பனைக்கு வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக அதன் தயாரிப்புகளை அப்டேட் செய்துக் கொண்டிருக்கின்றது. புதிய 2023 ஷைன் 125-ம் இதன் அடிப்படையிலேயே அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications









