புதிய ஆக்டிவா ஸ்மார்ட் டெலிவரி பணிகள் தொடக்கம்... நம்ம ஆளுங்க மைலேஜ் டெஸ்ட்டையும் எடுத்திட்டாங்க! இதோ ரிசல்ட்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, கடந்த சில தினங்களுக்கு முன்னரே தனது அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஆகியவையே அவை ஆகும். இதில் ஸ்டாண்டர்டு தேர்விற்கு ரூ. 74,536-ம், டீலக்ஸிற்கு ரூ. 77,036-ம் மற்றும் உயர்நிலை வேரியண்டான ஸ்மார்டிற்கு ரூ. 80,537-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு ஆகும். இது தவிர ஆறு விதமான வண்ண தேர்வுகளில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும் என ஹோண்டா அறிவித்துள்ளது. இந்த இருசக்கர வாகனத்தில் பல்வேறு விதமான அப்டேட்டுகளை ஹோண்டா செய்திருக்கின்றது.

குறிப்பாக, வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் பிஎஸ் 6 இரண்டாம் கட்டம் மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த புதிய விதி அனைத்து வாகனங்களிலும் நிகழ்நேர மாசு உமிழ்வை கண்டறியும் (real time driving emission) கருவி கட்டாயமாக இருத்தல் வேண்டும் என கூறுகின்றது. இந்த கருவியையே ஹோண்டா நிறுவனம் தனது அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டரில் தற்போது சேர்த்திருக்கின்றது.
கேட்டலிடிக் கன்வர்டர் (catalytic converter) மற்றும் ஆக்ஸிஜன் சென்சார் (oxygen sensors)-களுடன் கூடிய ஓபிடி (on-board diagnostic device) கருவியையே ஹோண்டா சேர்த்திருக்கின்றது. இந்த தொழில்நுட்பமானது ஸ்கூட்டர் வெளியிடும் மாசின் துள்ளியமான அளவை வெளிக்காட்டும். அத்துடன், அதிகளவு மாசு வெளியேறும் எனில் அதை எச்சரிக்கையாகவும் அது காண்பிக்கும். இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட டூ-வீலரையே ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

தற்போது அதனை நிறுவனம் டெலிவரி செய்யவும் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தவகையில், சமீபத்தில் டெலிவரி பெற்ற ஓர் நபர் அவ்வாகனத்தை வைத்து மைலேஜ் டெஸ்ட் எடுத்திருக்கின்றார். அதற்கு முன்னதாக அந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளை சோதனைச் செய்தும் பார்த்திருக்கின்றார். ஆக்டிவாவின் உயர்நிலை தேர்வான ஸ்மார்ட்டையே அந்த நபர் வாங்கி இருக்கின்றார். இது அதிக சிறப்பு தாங்கிய தேர்வாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கார்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஸ்மார்ட் சாவி சிஸ்டம் ஆக்டிவாவிற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு ஸ்மார்ட் அன்லாக், ஸ்மார்ட் ஸ்டார்ட், ஸ்மார்ட் ஃபைன்ட் மற்றும் ஸ்மார்ட் சேஃப் போன்ற விஷயங்களைச் செய்து கொள்ள முடியும். அதாவது, ரிமோட் போன்ற ஒற்றை ஸ்மார்ட் சாவியைக் கொண்டு டூ-வீலரை ஸ்டார்ட் செய்யுதல், அது இருக்கும் இடத்தை கண்டறிதல், திருட்டில் இருந்து பாதுகாத்தல் மற்றும் லாக்கை எடுத்தல் போன்றவற்றை செய்ய முடியும்.

இதுவே எப்படி வேலை செய்கிறது என்பதை ஹோண்டா ஆக்டிவா ஸ்மார்ட் தேர்வை டெலிவரி பெற்ற அந்த நபர் செய்து பார்த்திருக்கின்றார். இந்த அனைத்து அம்சங்களும் மிக சிறப்பாக வேலை செய்திருக்கின்றன. 'ஸ்மார்ட் கீ' 2 மீட்டர் இடைவெளியில் வைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், ஆக்டிவா ஸ்மார்ட் தேர்வில் ஸ்கூட்டரை ஆக்டிவேட் செய்த பின்னர், 20 நிமிடங்களுக்கு எந்த வேலைபாடும் ஸ்கூட்டரில் நடவடிக்கை இல்லை எனில் உடனடியாக ஸ்கூட்டர் டி-ஆக்டிவேட் மோடிற்கு சென்றுவிடும் வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
அதேநேரத்தில், இந்த ஸ்மார்ட் சாவியை வாகனத்தில் இன்செர்ட் செய்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான வசதிகளையும் ஹோண்டா புதிய ஆக்டிவாவின் ஸ்மார்ட் வேரியண்டில் கொடுத்திருக்கின்றது. ஸ்மார்ட் கீ தனித்துவமான இம்மொபிலைசருடன் வருகிறது, இது அந்த குறிப்பிட்ட பயனரை மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதிக்கின்றது. இதுபோல இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கிய ஓர் தேர்வாகவே ஸ்மார்ட் வேரியண்ட் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணத்தினாலேயே அதற்கு ஸ்மார்ட் எனும் பெயரையும் அது வைத்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க கவர்ச்சிகரமான அம்சங்களையும் இருசக்கர வாகனத்தில் ஹோண்டா சேர்த்திருக்கின்றது. புதிய அலாய் வீல்கள், 3டி எம்பளம், கணிசமான குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்கள், எல்இடி ஹெட்லேம்ப், சில்வர் நிற கிராப் ரெயில், புதிய டெயில் லேம்ப் மற்றும் சைடு பிளிங்கர்ஸ் உள்ளிட்ட அம்சங்களை ஹோண்டா அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவாவில் வழங்கி இருக்கின்றது. இதன் மைலேஜ் திறனும் அமோகம் என தற்போது டெலிவரி பெற்றிருக்கும் அந்த நபர் கூறி இருக்கின்றார்.
தனி ஆளாக ஓட்டியபோது 2023 ஹோண்டா ஆக்டிவா 50 கிமீட்டருக்கும் கூடுதலான மைலேஜையும், இருவராக பயணித்தபோது 50 கிமீட்டருக்கும் குறைவான மைலேஜையும் வழங்கி இருக்கின்றது. இது முற்றிலும் புதிய வாகனம் ஆகும். இதன் உண்மையான மைலேஜ் திறன் தெரிய வர இன்னும் சில தினங்கள் ஆகும். முதல் சர்வீஸுக்கு பின்னரே எந்தவொரு இருசக்கர வாகனமும் உண்மையான மைலேஜை வெளிப்படுத்தத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது மைலேஜ் டெஸ்டிற்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் ஆக்டிவா டெலிவரி பெற்று சில தினங்களே ஆகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








