ஹோண்டா தயாரித்த எலெக்ட்ரிக் சைக்கிள்.. ஆக்டிவாவைபோல எல்லாரும் இந்த சைக்கிளை வாங்கி குவிக்க போறாங்க!
உலகின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் முதல் எலெக்ட்ரிக் மிதிவண்டியை (Electric Bicycle) இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. நிறுவனம், தன்னுடைய இந்த முதல் எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு இ-எம்டிபி (e-MTB) எனும் பெயரையே சூட்டியிருக்கின்றது.
விற்பனைக்கு வரும்போது இந்த பெயர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், ஹோண்டா நிறுவனம் இந்த மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை கான்செப்ட் (Concept) மாடலாகவே தயார் செய்திருக்கின்றது. இதை எப்போது விற்பனைக்கு வழங்கும் விதமாக உற்பத்தி பணிகளைத் தொடங்கும் என்பது பற்றிய தகவலை நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்த விபரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் டோக்யோவில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோ வாயிலாகவே ஹோண்ட இ-எம்டிபி காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி வாயிலாக பல்வேறு புதிய வாகன மாடல்களைக் காட்சிப்படுத்தியது.
அந்தவகையிலேயே இ-சைக்கிளையும் காட்சிப்படுத்தியது. தன்னுடைய ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை போலவே இதுவும் அதிக சிறப்புகளைத் தாங்கியதாகவே இ-எம்டிபி-யை ஹோண்டா தயார் செய்திருக்கின்றது. உருவத்தைப் பொருத்தவரை நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பையே ஹோண்டா வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக சாலை மற்றும் சாகச பயணம் என இரண்டிற்கும் ஏற்ற வாகனமாகவும் இது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதற்காக முன் மற்றும் பின் வீலில் சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஃபாக்ஸ் சஸ்பென்ஷன் அப் பிரண்ட்டே வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த சைக்கிளில் மையப் பகுதியிலேயே மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பெடலிங் அணைப்பும் இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் வாயிலாக, சார்ஜ் தீர்ந்துவிட்ட பின்னர் இ-சைக்கிளை பெடல் செய்து இயக்கிக் கொள்ள முடியும். ஆகையால் தடையில்லா பயணத்தை இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். டிடி ஸ்விஸ் எக்ஸ்எம் 1700 வீல்கள், மேக்ஸிஸ் மினியன் டிஎச்எஃப் டயர்கள் ஆகியவையே ஹோண்டா இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர மிக சிறந்த பிரேக்கிங் திறனுக்காக இ-சைக்கிலின் இரு வீல்களிலும் ஷிமனோ ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ரைடை அலாதியானதாக மாற்றுவதற்காக ராக்சாக்ஸ் ரிவர்ப் டிராப்பர் சீட் போஸ்ட் மற்றும் ஸ்ராம் ஈகிள் ஏஎக்ஸ்எஸ் கியர்பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்கள் அனைத்தும் ரைடை மேலும் சிறப்பானதாக மாற்றும் நோக்கிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு மற்றும் பிரீமியம் தர அம்சங்கள் பல ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் சைக்கிளான இ-எம்டிபியில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதன் மீதான எதிர்பார்ப்பும் தற்போது இந்தியர்கள் மட்டுமின்றி உலக அளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக, ஹோண்டா இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் இந்த இ-பைக் மீதான எதிர்பார்ப்பு செம்ம ஹைப்பில் இருக்கின்றது. ஆனால், இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் இப்போது விற்பனைக்கு வருவது சாத்தியமற்றதாக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் இன்னும் இ-வாகன விற்பனை பிரிவில் அதன் கால் தடத்தைப் பதிக்கவில்லை.
அதேவேளையில் இதற்கான முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆக்டிவா அடிப்படையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நிறுவனம் முதலில் விற்பனைக்குக் களமிறக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹீரோவின் விடா, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் புதுமுக நிறுவனங்கள் பல இந்தியாவை மையமாகக் கொண்டு தன்னுடைய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் விரைவில் ஹோண்டாவும் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அது எப்போது என்பதுதான் யாரும் அறியப்படாத ஓர் தகவலாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









