இப்படியொரு ஹோண்டா பைக் மார்க்கெட்டில் இருந்ததே பலருக்கு தெரியாது!! வந்ததும் தெரியல... போனதும் தெரியல...
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் (HMSI) அதன் எக்ஸ்-பிளேட் (X-Blade) பைக்கின் விற்பனையை எந்தவொரு அறிவிப்பும் இன்றி சைலண்டாக நிறுத்திக் கொண்டுள்ளது. இதுகுறித்தும், விற்பனை நிறுத்தப்பட்டு உள்ள ஹோண்டா எக்ஸ்-பிளேட் பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹோண்டா விளங்குகிறது. இந்திய 2-வீலர் மார்கெட்டில் ஹோண்டாவின் மிக பெரிய ஆயுதம் அதன் ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகும். மேலும், சில விலை குறைவான 100சிசி & 125சிசி பைக்குகளும் ஹோண்டா பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால் யூனிகார்ன் மோட்டார்சைக்கிளை தவிர்த்து, ஹோண்டாவிற்கு சரியான 160சிசி பைக் எதுவும் சமீப காலமாக அமையவில்லை. எக்ஸ்-பிளேட் பைக்கை மிகுந்த நம்பிக்கையோடு இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தியது. ஆனால் நம் இந்திய மக்கள் எக்ஸ்-பிளேடை கண்டுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே, சமீபத்தில் எஸ்பி160 என்ற புதியதொரு 160சிசி பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்தியது.
ஹோண்டா எஸ்பி160 பைக்கின் அறிமுகத்தால், எக்ஸ்-பிளேட் பைக்கின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போல், எக்ஸ்-பிளேட் பைக்கின் விற்பனையை இந்தியாவில் நிறுத்திக்கொள்ள ஹோண்டா துவங்கியுள்ளது. ஹோண்டாவின் இந்திய இணையத்தள பக்கத்தில் இருந்து எக்ஸ்-பிளேட் பைக்கின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால், ஹோண்டா டீலர்ஷிப் மையங்களிலும் எக்ஸ்-பிளேட் பைக்குகள் இனி விற்பனைக்கு கிடைக்காது.

ஆனால் இதுகுறித்த அறிவிப்பு எதையும் இப்போது வரையில் ஹோண்டா நிறுவனம் வெளியிடவில்லை. ஹோண்டா எக்ஸ்-பிளேட் பைக், அதன் பெயருக்கு ஏற்ப பிளேட் போன்ற கூர்மையான பாடி பேனல்களுடன் ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்டது. அறிமுகமான சமயத்தில், எக்ஸ்-பிளேடின் ஸ்டைலுக்கு முன்னால் பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் கூட நிற்க முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் பல்சர், அப்பாச்சி பைக்குகள் இன்னும் விற்பனையில் உள்ளன.
எக்ஸ்-பிளேடின் ஸ்டைலை ஆரம்பத்தில் இவ்வாறு புகழ்ந்து கூறினாலும், இந்த பைக்கின் தோல்விக்கு காரணமும் அதன் தோற்றமே ஆகும். ஏனெனில், எக்ஸ்-பிளேடின் தோற்றம் ஜப்பான், இந்தோனிஷியா நாட்டு மக்களை கவர்ந்து இருக்கலாம். ஆனால், நம் இந்தியர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. அதாவது, ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காக, பைக்கிற்கு அதிகப்படியாக மேக்-அப்பை ஹோண்டா கொடுத்துவிட்டது.

எக்ஸ்-பிளேட் பைக்கின் முன்பக்கம் ரோபோவின் முகம் போன்றதான வடிவில் எல்இடி ஹெட்லேம்ப் உடன் வடிவமைக்கப்பட்டது. அத்துடன், கூர்மையான பேனல்கள் உடன் பெட்ரோல் டேங்க், ஷார்ப் பாடி பேனலிங், ஸ்போர்டியான கிராஃபிக்ஸ், மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய், நேர்த்தியான கிராப் ரெயில்கள் மற்றும் எட்ஜ் டெயில்லேம்ப் உள்ளிட்டவை பைக்கின் தோற்றத்தின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.
ஹோண்டா எக்ஸ்-பிளேட் பைக்கில் 162.71சிசி என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. ஹோண்டா யூனிகார்ன் மற்றும் சமீபத்திய அறிமுகமான எஸ்பி160 பைக்கிலும் இதே 162.71சிசி என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13.46 பிஎஸ் மற்றும் 14.58 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகள் மற்றும் ஒபிடி2-க்கு இணக்கமானதாக அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், வெப்சைட்டில் இருந்து எக்ஸ்-பிளேடின் பெயர் நீக்கப்பட்டு உள்ளதே தவிர்த்து, ஹோண்டா இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆதலால், எக்ஸ்-பிளேட் பைக் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் மீண்டும் அறிமுகம் செய்யப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. உண்மையில் விற்பனை நிறுத்தப்பட்டு இருந்தாலும், இன்னும் சில வாரங்களுக்கு சில ஷோரூம்களில் ஸ்டாக்கில் இருக்கும் எக்ஸ்-பிளேட் பைக்குகள் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









