முழு மெட்டல் பாடி உடன் விற்பனைக்கு வரும் பெய்கோ எக்ஸ்4.. சைடு-சென்டர்னு எந்த ஸ்டாண்டும் இதுக்கு தேவைப்படாது!
இந்தியாவில் தன்னுடைய முதல் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஐ-கோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் அதன் முதல் வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஐ-கோவைஸ் மொபிலிட்டி நிறுவனம் தன்னுடைய முதல் தயாரிப்பாக இ-பைக் ரக பெய்கோ எக்ஸ்4 (BeiGo X4) மாடலையே தயாரித்து வருகின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். இதனை நிறுவனம் இருசக்கர வாகனங்களின் எஸ்யூவி என குறிப்பிடுகின்றது. இதற்கேற்ப அதிக இட வசதிக் கொண்டதாகவும், சிறப்பு அம்சங்களை அதிகம் கொண்டதாகவும் பெய்கோ எக்ஸ்4 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

அந்தவகையில், பல்வேறு புதிய அம்சங்களை இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. குறிப்பாக, மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனமாக பெய்கோ எக்ஸ்4 உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதனால், சைடு மற்றும் சென்டர் என எந்த ஸ்டாண்டும் தேவைப்படா வாகனமாக பெய்கோ எக்ஸ்4 மாறி இருக்கின்றது.
இதுதவிர இன்னும் பல புதிய அம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 150 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜாகும் திறன், முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக், 60 லிட்டர் ஸ்டோரேஜ், மூன்று வீல்களிலும் டிஸ்க் பிரேக், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் எக்ஸ்4-இல் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமின்றி, ஹோண்டா ஆக்டிவாவை போல முழு முழுக்க மெட்டல் பாடி பேனல்கள் கொண்ட வாகனமாகவும் பெய்கோ எக்ஸ்4 உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்தை இந்த வாகனம் வெகுவாக கவர்ந்திருக்கின்றது. இத்தகைய வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதியை கோரியே அரசாங்கத்திடம் ஐ-கோவைஸ் மொபிலிட்டி நிறுவனம் விண்ணப்பித்து இருக்கின்றது.
இதற்கு அனுமதி வழங்கப்படும்பட்சத்தில் அடுத்த சில தினங்களிலேயே பெய்கோ எக்ஸ்4-இன் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். இந்த பணிகள் தொடங்கும் எனில் அடுத்து அந்த வாகனம் விற்பனைக்கு வருவதுதான். இதுவும் ஒரு சில வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் அரங்கேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கான்செப்ட்டாக அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த 9 மாதங்களிலேயே இந்த வாகனம் உற்பத்திக்கு தயாராகி இருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக இருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. ஆகையால், அதிக வேகத்தில் உற்பத்திக்கு தயாராகிய எலெக்ட்ரிக் டூ-வீலர் என்ற புகழ் மகுடத்தை பெய்கோ எக்ஸ்4 சூடி இருக்கின்றது.
முன்னணி நிறுவனங்களே தங்களின் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்திய பின்னர் அதனை உற்பத்தி நிலைக்கு உயர்த்த பல வருடங்களை எடுத்துக் கொள்ளும். இந்த மாதிரியான சூழலில் முன்னணி நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக ஐ-கோவைஸ் செயல்பாட்டு இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்திடம் ஆண்டுக்கு 30 ஆயிரம் யூனிட்டுகளை மட்டுமே தயாரிக்கும் திறன் கொண்ட சிறிய அளவு உற்பத்தி ஆலையே உள்ளது.
இதனைக் கொண்டே முயல் வேகத்தில் தன்னுடைய முதல் இ-வாகனத்தை உற்பத்திக்கு தயார் செய்திருக்கின்றது, ஐகோவைஸ் மொபிலிட்டி. மேலும், இதற்கு பின்னால் நிறுவனத்தின் பணியாளர்களின் கடின உழைப்பும் மறைந்திருக்கின்றது.என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் தன்னுடைய காலடி தடத்தைப் பதிக்க திட்டமிட்டுள்ளது.
சுமார் ஆயிரம் மைக்ரோ ஃபேக்டரிகளை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் உலக நாடுகள் சிலவற்றில் அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், ஐகோவைஸ் பெய்கோ எக்ஸ்4 எலெக்ட்ரிக் டூ-வீலர் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதுமையான வசதிக் கொண்ட மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், ஐகோவைஸ் மொபிலிட்டியின் இந்த தயாரிப்பிற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகைக்கு இன்னும் ஒரு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








